உலகம் இதுதான்!

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2019

ஒரு மரத்தில் ஒரு குயில் வெகு நாட்களாகக் கூடு கட்டி வாழ்ந்திருந்தது.

அந்த குயிலுக்கு ஒரு காக்கை வெகு காலம் நண்பனாக இருந்து வந்தது.

அந்த நட்பின் காரணமாக காக்கை தன் கூட்டிற்கு வரும்போதெல்லாம் குயில் அதை மரியாதையாக வரவேற்றுக் கொண்டிருந்தது.

அதன் மரியாதையைப் பார்த்த காக்கை தன்னால்தான் அந்த குயில் வாழ்ந்து கொண்டிருக்கிறதென்று கருத ஆரம்பித்தது.

ஒரு நாள் குயில் இனிமையாக பாடி கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக காக்கை அங்கே வந்தது.

இசையிலே அமர்ந்திருந்ததால் குயில் அதை கவனிக்கவில்லை.

காக்கைக்கு கோபம் வந்தது.

‘‘ஏ குயிலே! இப்படியெல்லாம் பாடுவதற்கு உனக்கு கற்றுக் கொடுத்தது யார்? நானில்லாவிட்டால் உனக்கு பாடத் தெரிந்திருக்குமா? என்னையே நீ அலட்சியப்படுத்துகிறாயா?’’ என்று காக்கை சத்தம் போட்டது.

குயில் எதிர்த்துப் பேசாமல் பணிவோடு, ‘‘எனக்கு பாட்டு வந்ததே உன்னால்தான். என்னை மன்னித்து விடு’’ என்றது.

அதோடு ‘‘இன்னும் பல பேரையும் பழக்கியிருப்பாயே, அவர்களையும் எனக்கு காட்டு!’’ என்று குயில் கேட்டது.

காக்கை ஆணவத்தோடு அதை அழைத்துக் கொண்டு புறப்பட்டது.

சிறிது துாரம் சென்றதும், அழகான பச்சை மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக்கொண்டிருப்பதைக் குயில் கண்டது.

காக்கையை பார்த்து, ‘‘இது எப்படி ஆடக் கற்றுக் கொண்டது?’’ என்று குயில் கேட்டது.

‘‘நான்தான் கற்றுக் கொடுத்தேன். நானில்லையென்றால் அதற்கு ஆட வருமா?’’ என்று பதில் சொன்னது காக்கை.

இன்னும் சிறிது துாரம் இரண்டும் பறந்தன.

ஓரிடத்தில் புள்ளி மானொன்று துள்ளியோடிக் கொண்டிருந்தது.

‘‘இந்த மான்...?’’ என்று இழுத்தது குயில்.

‘‘நான்தான் துள்ளக் கற்றுக் கொடுத்தேன்’’ என்று பெருமிதத்தோடு சொன்னது காக்கை.

பக்கத்திலே பச்சைக்கிளியொன்று ‘அக்கா! அக்கா!’ என்று அழைத்தபடி பறந்து வந்தது.

உடனே காக்கை, குயிலை பார்த்து, ‘‘பார்த்தாயா! இது என்னை ‘அக்கா! அக்கா!’ என்று அழைக்கிறது. நான்தான் அக்காள் மாதிரி இருந்து அனைத்தும் கற்றுக் கொடுத்தேன். அதனால்தான் ‘அக்கா!’ என்று அவ்வளவு உரிமையோடு அழைக்கிறது’’ என்றது.

இன்னொரு புறத்தில், இளங்கன்று ஒன்று ‘அம்மா! அம்மா!’ என்று அழைத்தபடி ஓடிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த காக்கை, குயிலை பார்த்து, ‘‘இதோ பார் இந்த கன்றை, நன்றி மறவாமல் என்னை ‘அம்மா! அம்மா!’ என்று அழைக்கிறது. தாயைப்போல இருந்து, இதற்கு நான்தான் அனைத்தும் சொல்லிக் கொடுத்தேன்’’ என்றது.

பூமியில் மலர்ந்திருக்கும் மலர்களைக் குயில் சுட்டிக் காட்டுகிறது. ‘‘மண்ணிலே நான்தான் விதைகளை ஊன்றினேன்; அவை கொடிகளாகி மலர்ந்திருக்கின்றன’’ என்று காக்கை சொன்னது.

‘‘எங்கு பார்த்தாலும், உன் கொடிதான் பறக்கிறது’’ என்று குயில் சொன்னதற்கு கர்வத்தோடு ‘‘ஆமாம்!’’ எனத் தலையசைத்தது காக்கை.

காக்கையும் வெட்கமில்லாமல் இறக்கையையும் வாலையும் துாக்கி ஆட ஆரம்பித்தது.

குயில் விழுந்து விழுந்து சிரித்தது.

கவிஞர் கண்ணதாசனின்

 ‘அலைகள்’   நூலிலிருந்து...