வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 22

பதிவு செய்த நாள்

03
மே 2016
00:32

தடைகளைத் தாண்டி வந்த சம்பூர்ண ராமாயணம்!

‘இன்று போய் நாளை வா’ என்பது கம்பராமாயணத்தில் வரும் அருமையான கவிதை வரி.

முதல் நாள் போர்க்களத்தில் ராவணன் தோற்ற பின்,  அவன் திருந்துவதற்காக ராமன் தரும் அருமையான வாய்ப்பு, ‘இன்று போய் போருக்கு நாளை வா’ என்று குறிக்கப்படுகிறது. அதே வரி ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஒரு வெற்றிப் பாடலின் முதல் வரியாகவும் அமைந்தது.

‘இன்று போய் நாளை வாராய் என, எனை ஒரு மனிதனும் புகலுவதோ’ என்பது தோற்றுப்போன ராவணன் தனக்குத்தானே பாடிக்கொள்வதாக ‘சம்பூர்ண ராமாயணம்’ சித்தரித்தது. ஐம்பதுகளின் திரைப்பாடல்களில் அமைந்த சில அருமையான பாடல்கள் மேற்படி படத்தில் அமைந்தன. பரதனாக நடித்த சிவாஜி கணேசனுக்கு  அவர் மறக்க முடியாத ஒரு பெருமை கிடைத்தது. படத்தைப் பார்த்த ராஜாஜி, ‘பரதனைக் கண்டேன்’ என்று சந்தோஷப்பட்டார். தன்னை அவர் காணவில்லை என்று சிவாஜி கணேசனுக்கு ஒரே மகிழ்ச்சி!

ஆனால், வேடிக்கைக்கும் வேதனைக்கும் உரியது என்னவென்றால், ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்திற்கு எந்தவிதமான எதிர்ப்பு வருமோ என்ற அச்சம் அதன் தயாரிப்பாளரான எம்.ஏ.வேணுவிற்கு இருந்தது என்பதுதான். ராமாயணத்திற்கு எதிர்ப்பா? அதை இந்தியாவின் தலைசிறந்த இலக்கியம் என்பார்களே...அதைப் போய் யார் எதிர்ப்பார்கள்?  அது ஒரு கதை!

தான் எடுத்த ‘டவுன் பஸ்’ வெற்றி அடைந்தவுடன், ‘சம்பூர்ண ராமாயணம்’ எடுக்கலாம் என்று முடிவு செய்தார் வேணு. அவருடைய கதை, வசனகர்த்தாவான ஏ.பி. நாகராஜனுக்கு ராமாயணத்தின் மீது அளவு கடந்த பற்று. ஏழு வயதில் நாடக நடிகரான நாகராஜன், மக்களுக்கு ராமாயணத்தின் மீது இருந்த மரியாதையை நேரடியாகப் பார்த்து வியந்தவர். அதனால், ஒரு நாடகக்குழுவின் வசூல் சறுக்கும் போதெல்லாம், உடனே ராமாயணத்தை மேடை ஏற்றிவிடுவார்கள். அது சுபிட்சத்தை தரத்தவறாது. 

‘மிகப்பெரிய போற்றுதலும் புகழும் கொண்டது, என்றும் நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தெய்வீகத்தன்மை உடையது, சிறந்த தத்துவங்களை சித்தரிப்பது’ என்றெல்லாம் நாகராஜன் அனுபவித்துக்கூறுவார். உருப்படியான படம் எடுத்து நிலைத்த புகழ்பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த வேணு, ‘சம்பூர்ண ராமாயண’த்தைத் தயாரிக்க முடிவு செய்துவிட்டார். ஆனால் அதற்கு முன், அவர் தமிழ் சினிமாவின் சில மிகப்பெரிய தயாரிப்பாளர்களின் அபிப்பிராயத்தை கேட்கத் தவறவில்லை. அதில், பட்சிராஜா ஸ்டூடியோ உரிமையாளர் ஸ்ரீராமுலு நாயுடு இப்படி சொன்னார்– - ‘‘சம்பூர்ண ராமாயணத்தை நான் எடுத்தால் ஓடும், நீ எடுத்தால் என்னவாகும் என்று சொல்லமுடியாது!’’ 

என்ன காரணமாம்? ‘‘நான் எந்தக் கட்சியையும் சேராதவன். உன்னுடைய ஆசிரியர் ஏ.பி. நாகராஜனோ ஒரு கட்சியை சேர்ந்தவர் (ம.பொ.சியின் ‘தமிழரசுக் கழகம்’). ராமாயணத்தை எதிர்க்கும் ஒரு கூட்டம், தியேட்டரில் மக்கள் படம் பார்க்கும் போது கலாட்டா செய்யும். நல்லா இல்லை என்று பிரசாரம் செய்து, வசூலைக் கெடுத்துவிடும்.. அதனால் யோசித்து செய்,’’ என்றார் ஸ்ரீராமுலு. 

‘சம்பூர்ண ராமாயணம்’ எடுக்க வேணு  முடிவு செய்த போது, தமிழ்நாட்டில் திராவிடக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ராமாயணத்தைத் தூற்றி வந்தன. எம். ஆர். ராதா ‘கீமாயண’த்தை மேடை ஏற்றியிருந்தார்.  பிள்ளையார் சிலைகளை 1953ல் உடைத்த ஈ.வெ.ரா., ராமர் படங்களை 1956ல் எரித்திருந்தார். ராமர் படத்திற்கு இந்தக் கதியென்றால், ‘சம்பூர்ண ராமாயண’த்திற்கு என்னவாகக்கூடும்?

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஆரியப் படை எடுப்பு கொள்கைதான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் குடைகீழ் செயல்பட்ட ஜெர்மானியரான மேக்ஸ் முல்லர் கிளப்பிவிட்ட கதைதான் அது. வெள்ளையரின் இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் முகமாக, இந்தியாவே ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிதான் என்ற புனைவை அவர் முன்வைத்தார். இதற்கு ஆதாரம் இல்லை என்று இப்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது. ஆனால், அன்று பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வலிமை சேர்த்தது. வட நாட்டு எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பிராமணர்கள்தான் ஆரியர்களின் எச்சங்கள் என்று பிராமண எதிர்ப்பு ஆகிய ‘திராவிட’  கொள்கைகளுக்கு ஆரிய படை எடுப்பு ‘புருடா’ அஸ்திவாரமாக அமைந்தது. ராமாயணமும் ஆரிய ஏகாதிபத்திய நூல்தான் என்று எதிர்க்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையின்தான்,  தனது ‘சக்ரவர்த்தி திருமகன்’ தொடரை, கல்கி பத்திரிகையில் மே 1955ல் தொடங்கி, 1956ம் ஆண்டு கடைசியில் மகோன்னதமான வரவேற்புக்கு இடையே ராஜாஜி நிறைவுசெய்திருந்தார். ராமாயணத்தால் விளையும் நன்மையை முன்வைக்க ராஜாஜி கம்பனையே மேற்கோள் காட்டியிருந்தார். ‘‘தமிழ் மக்களே! ராமாயணம் படிப்பதும் கேட்பதும் நல்லதா என்கிற கேள்விக்கு, தமிழன் கம்பன் வெகு நாட்களுக்கு முன்பே பதில் சொல்லி விட்டான். வழி காட்டி விட்டான். கம்பனைவிட அறிவாளியோ நமக்கு நண்பனோ வேறு (ஒருவர்) இல்லை...கங்கையும் காவிரியும் ஓடும் வரை சீதாராம சரிதம் பாரத நாட்டில் ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் தாய்போல் பக்கத்திலிருந்து காப்பாற்றும்.’’

இத்தகைய ராமாயணத்தை திரைப்பட ஊடகத்தின்  வாயிலாக மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேணு முடிவு செய்துவிட்டார். சுமார் மூன்றரை மணி நேரம் ஓடக்கூடிய படமாக ‘சம்பூர்ண ராமாயணம்’ உருவாகியது. அன்றைய நட்சத்திரங்கள், என்.டி. ராமராவ் (ராமர்), பத்மினி (சீதை), சிவாஜி (பரதன்) முதலியோருடன் நாகையா (தசரதன்), ஜி. வரலட்சுமி (கைகேயி), டி.கே. பகவதி (ராவணன்), சந்தியா (மண்டோதரி), எம். என். ராஜம் (சூர்ப்பனகை), வி.கே. ராமசாமி (குகன்) முதலிய முன்னணிக் கலைஞர்கள் நடித்தார்கள். 

திரைக்கதை-–  வசனத்திற்கு ஏ.பி. நாகராஜனை நம்பியதைப்போல், ‘சம்பூர்ண ராமாயண’த்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை கே.வி.மகாதேவனிடம் முழு நம்பிக்கையுடன் விட்டுவிட்டார் வேணு. கர்நாடக இசையில் மக்கள் விரும்பக்கூடிய அழகான மெட்டுக்களை அமைப்பதில் வல்லவரான மகாதேவன், படத்தில் பல அற்புதமான பாடல்களை அமைத்தார். வீணைக் கொடி உடையவன் என்று கூறப்படுகிற ராவணனுக்கு ‘சம்பூர்ண ராமாயண’த்தில் மிக அற்புதமான பாடல்கள் அமைந்தன. கம்பீரமாக நடித்த டி. கே. பகவதிக்கு  சி.எஸ். ஜெயராமன் அற்புதமாக பாடினார். இலங்கை அரண்மனையில் தொடங்கும் சங்கீத ரீங்காரம்தான் ‘சம்பூர்ண ராமாயண’த்தை உண்மையில் நிறைத்தது. 

தமிழ்நாட்டில் படம் வந்த போது நிலவிய சூழ்நிலைக்கு இது ஒரு வகையில் பொருத்தம்தான் போலும்...ராமசாமிகளும் ராமநாதன்களும் நிறைந்த தமிழ்நாட்டில், ராவணன்கள் தலையெடுத்த காலம். நடிகர் ஆர்.எஸ். மனோகர் கூட, ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தை மேடையேற்றியிருந்த காலம். காஞ்சிப் பெரியவரின் அனுமதி பெற்றுதான் அவர் அதைச் செய்திருந்தார். அப்படியும் வால்மீகி என்றாலும் சரி, கம்பர் என்றாலும் சரி, தர்மத்தின் நாயகனுக்கும், பிறன்மனை நோக்கியதால் பேராண்மையை இழந்த ராவணனுக்குமிடையே நடைபெறும் யுத்தத்தை, இரு மகாவீரர்களின் மகோன்னத மோதலாகத்தான் கண்டனர்.

ராவணேஸ்வரனுக்கான அறிமுகமே, ‘கண்பாரும் எனை ஆளும் கயிலை வாசா, உன் பாதம் நம்பினேன் உமா மகேசா’  என்று ஓங்கிய தொனியில் அமைகிறது. பொருட்செறிவும், எதுகை மோனை நயமும் கொண்ட மருதகாசியின் பாடல் கம்பீரமாக சண்முகப்பிரியா ராகத்தில் அமைந்தது.  ராவணனின் சபையில் நிகழும் ஒரு ராகமாலிகைப் பாடலுக்கு மகாதேவன் இசையமைத்தார். தமிழ் சினிமா சரித்திரத்தில் மறக்க முடியாத  ராகங்களின் ஊர்வலம் அது.

‘‘காலங்களைக் குறித்துப் பாடவேண்டிய ராகங்களை கேட்கப் பிரியப்படுகிறோம்.  தயவு செய்து பதிலும் இசைரூபமாகவே வர விரும்புகிறோம்...காலையில் பாடும் ராகம் என்னவோ’’ என்று மகோதரன் (எம்.ஆர். சந்தானம்) கேட்க, பூபாள ராகம் ஸ்வர வரிசையுடன் வெளிப்படுகிறது. 

இப்படியே கேள்விகளுக்குப் பதில்களாக, சாரங்கா (உச்சி வேளையில் பாடும் ராகம்), வசந்தா (மாலையில் பாடும் ராகம்),  நீலாம்பரி (இரக்கம் பற்றிய ராகம்), தன்யாசி (மகிழ்ச்சிக்குரிய ராகம்), கம்பீரநாட்டை (யுத்த ராகம்), சங்கராபரணம் (வெண்பா பாடும் ராகம்), தோடி (அகவல் பாட), கல்யாணி (தாழிசைக்கு)  பளிச்சென்று, கணநேர ஸ்வரக்கோர்வைகளாக வந்து நிற்கின்றன. 

தனக்கே உரிய அழகான மழலைத் தமிழிலே, சந்தியா, ‘ஸ்வாமி, கயிலைநாதனை தாங்கள் கானத்தால் கவர்ந்த ராகம்?’ என்று கேட்கும் போது, தெய்வீகத்திற்கு உரிய சாந்நித்தியத்தோடு,  ‘கா’.. என்று அந்தர காந்தாரம் கார்வையாக ஒலிக்கிறது.   ‘கா..கமககரீ’ என்று தொடர்ந்து, காம்போதி என்று கூறி, ’கம-கம-ரிக-ரிக’ என்று ஸ்வரங்கள் சதிராடும்போது, கமகமக்கும் இசை மணம் ஓங்குகிறது. அதைத் தொடர்ந்து ராவணேஸ்வரன் தன்னுடைய வீணையை மீட்டும் போது, வாழ்நாளில் அதுவரை நடக்காத வகையாக, வீணையின் நரம்பு அறுகிறது. சூர்ப்பனகை வந்துகொண்டிருக்கிறாள் என்ற செய்தி வருகிறது! உன்னதமான  பாடல் காட்சியை உற்சாகமான திரைக்கதை மிகப்பொருத்தமாக சந்திக்கும் இடம் இது! எதையும் பொறுக்கலாம். ஆனால் எதிரியின் இரக்கத்தைப் பொறுப்பது கடினம். வீணைக்கொடியையும் வெற்றிக் கொடியையும் நாட்டிய ராவணன், ராமனால் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டு அரண்மனை திரும்புகிறான். ‘இன்று போய் நாளை வா’ என்ற அவமான வாசகமே அவனுடைய உடைந்த உள்ளத்திலிருந்து பல்லவியாக தெறிக்கிறது. இந்த அவலச் சுவை திலங் என்ற இனிமையான ராகத்தில் கவர்ந்திழுக்கும் வகையில் ஒலிக்கிறது.

இந்தப் பாடலின் ஒலிப்பதிவின் போது நடந்த சம்பவத்தை, அதைப் பதிவு செய்த ‘ஒலிப்பதிவு மேதை’ டி. எஸ். ரங்கசாமி இப்படிக் கூறினார்-– -- 

‘‘மகாதேவனின் இசையமைப்பில் வாத்திய கோஷ்டியினர் வாசித்துக் கொண்டிருந்தார்கள். சி. எஸ். ஜெயராமன் பாடிக் கொண்டிருந்தார்.  நான் ஒலிப்பதிவுக்கருவியின் முன் அமர்ந்து பாடலைப் பதிவு செய்து கொண்டிருந்தேன். என் அருகில் ஏ.பி.நாகராஜனும், இயக்குநர் சோமுவும் இருந்தார்கள். பாடலும் நிறைவடைந்தது. அதற்கு அடையாளமாக, ‘கட்’ என்றார் மகாதேவன். ஆனால் நான் ஒலிப்பதிவுக்கருவியை, ‘ஆப்’ செய்யவே இல்லை. பக்கத்தில் இருந்த கலைஞர் ஏ.பி.என்னும் இயக்குநர் சோமுவும் நான் அப்படிச் செய்யாமல் இருக்க ஏதோ காரணம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டனர்போலும். ஆனால், நான் சுமார் ஒரு நிமிடம் அதே நிலையில் இருந்ததைக் கண்ட ஏ.பி.என்., என்னைத் தொட்டு, ‘என்ன சார்?’ என்று கேட்டுச் சிரித்தார். அப்போதுதான் நான் மறுபடியும் சுயநினைவிற்கு வந்தேன். இப்படி எத்தனையோ முறை உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன். கலைஞர் ஏ.பி.என். என்னைத் தட்டி சுயநினைவிற்கு கொண்டு வந்திருக்கிறார்.’’

அந்த அளவிற்கு ஒலிப்பதிவு செய்தவரையே ஸ்தம்பிக்க வைத்த சக்தி வாய்ந்த பாடல்கள் படத்தில் அமைந்தன.

சேலம் ரத்னா ஸ்டூடியோவை எம்.ஏ. வேணு குத்தகைக்கு எடுத்திருந்ததால்தான், ‘சம்பூர்ண ராமாயணம்’ போன்றதொரு படத்தை கவனத்துடன் தயாரிக்க முடிந்தது. ஏராளமான துணை நடிகர்கள் பயன் படுத்தப்பட்டிருந்தார்கள். ஒரு நாள் ஏகப்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க வேண்டிய ஒரு வெளிப்புறக்காட்சியில், திடீர் மேகமூட்டத்தால் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டி வந்தது. ஆனால், ரூ. 27, 500க்கான பணப்பட்டுவாடாவிற்கு உடனே செக் எழுதிக் கொடுத்தார் வேணு. ஆனால், அவர் எடுத்துக்கொண்ட பிரயாசைக்கு ஏற்ற மகோன்னதமான வெற்றியைப் பெற்றதா என்றால், இல்லை  என்றுதான் சொல்ல வேண்டும். 

அதற்கு காரணம், ஸ்ரீராமுலு எச்சரித்தது போல் எந்த ஆர்ப்பாட்டக்காரர்களும் அல்ல. இன்னொரு ராமாயணம்தான்!  ‘சம்பூர்ண ராமாயணம்’ 1958ம் ஆண்டின் தமிழ்ப் புத்தாண்டில் (ஏப்ரல் 14) வெளிவருவதற்குள், ‘ஸ்ரீ ராமபக்த ஹனுமான்’ இந்தியிலிருந்து ‘டப்’ செய்யப்பட்டு, சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது (அது பிப்ரவரி 28ல் வெளிவந்தது). தந்திரக் காட்சிகளைப் படம்பிடிப்பதில்  தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து, மாயாஜாலப் படங்களில்  முத்திரை பதித்திருந்த பாபுராவ் மிஸ்திரியின் இயக்கத்தில் வந்த ‘ஸ்ரீ ராமபக்த ஹனுமான்’, மொழிமாற்றுப்படமாக இருந்தாலும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ராமர் பட்டாபிஷேக காட்சி, கேவா கலரில் படம்பிடிக்கப்பட்டிருந்தது. டப்பிங் படத்திற்கும் முன்னணிப் பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. படத்திற்கு வெகுவாக விளம்பரம் செய்யப்பட்டது. அன்றைய டப்பிங் படங்களுக்கு உரிய நச்சரிப்புகளை  எல்லாம் மீறி , ‘ஸ்ரீ ராமபக்த ஹனுமான்’ வரவேற்பைப் பெற்றது. ‘‘ஆஸ்திகத்தைப் பரப்பும்  இதிகாசக் கதை, இந்த சந்தர்ப்பத்தில் படமாக வருவதை நாம் வரவேற்கத்தான் வேண்டும்’’ என்றார் ஒரு விமர்சகர்.  

அந்தப் பெருமைக்கு உண்மையாக உரியவர், நேரடிப்படமாக  ‘சம்பூர்ண ராமாயணம்’ எடுத்த எம்.ஏ. வேணுதான்.  அதை எடுத்த சில ஆண்டுகளில் வேணுவின் திரை அத்தியாயம் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால்,  எதிர்ப்புகளுக்கு இடையே இலக்கியத் தரமான ஒரு படத்தை எடுத்த சாதனையாளர் வேணு என்று தமிழுலகம் அவரை நினைவு கொள்ளும். 

 (தொடரும்)