பார் கவுன்சில் தலைவர் சுட்டுக்கொலை: உத்தரபிரதேசத்தில் நடப்பது காட்டாட்சி: காங்கிரஸ் சாடல்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 17:30

லக்னோ

உத்தரபிரதேச பார் கவுன்சில் தலைவர் தர்வீஷ் சிங் யாதவ் கொல்லப்பட்டதை கண்டித்துள்ள காங்கிரஸ், மாநிலத்தில் நடக்கும் பாஜக ஆட்சிக்கும், காட்டில் நடக்கும் ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை என்று கடுமையாக சாடியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பார் கவுன்சில் தலைவராக இரண்டு நாட்கள் முன்பு வழக்கறிஞர் தர்வீஷ் சிங் யாதவ் தேர்வானார். இதன்மூலம், உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவர் பெற்றார்.

இந்நிலையில் நேற்று மதியம் நீதிமன்ற வளாகத்தில் தர்வீஷ் சிங்குக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர் மணிஷ் சர்மா திடீரென்று எழுந்து தர்வீஷ் சிங்கை மூன்று முறை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தர்வீஷ் சிங் உயிரிழந்தார்.

அருகில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் மணிஷ் சர்மா தன்னை தானே சுட்டுக்கொண்டார். உயிருக்கு போராடிய மணிஷ் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிச்சடங்கு

இந்நிலையில், கொல்லப்பட்ட பார் கவுன்சில் தலைவர் தர்வீஷ் சிங் யாதவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன. எட்டா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சாந்த்பூர் கிராமத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தர்வீஷ் சிங்கின் இறுதிச் சடங்கில், மாநில சட்டத்துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக் கலந்துகொண்டார். அதிக எண்ணிக்கையிலான வழக்கறிகர்களும், பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

இன்றைய தின, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தர்வீஷ் சிங் யாதவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார்.

முடங்கிய நீதிமன்றங்கள்

இந்நிலையில், பார் கவுன்சில் தலைவர் தர்வீஷ் சிங்க் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர்கள் இன்று ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பாக்பட், பிக்னோர், முசாபர்நகர், மீரட், சஹாரன்பூர் மற்றும் சாம்லி ஆகிய மாவட்டங்களில் நீதிமன்ற பணிகள் முடங்கின.

இதுகுறித்து பேசிய முசாபார்நகர் மாவட்ட பார் கவுன்சில் சங்க தலைவர் சையத் நசீர் ஹைதிர்,”பார் கவுன்சில் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநில பார் கவுன்சில் அழைப்பின் பேரில், பணிகளை புறக்கணிக்க முடிவு செய்தோம்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கண்டனம்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி உத்தரபிரதேச மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில்,”முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில், பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காட்டில் நடக்கும் ஆட்சிக்கும், உத்தரபிரதேசத்தில் நடக்கும் பாஜக தலைமையிலான அரசின்கீழ் நடக்கும் ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.