வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மம்தா பானர்ஜி உத்தரவு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 16:55

கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் உடனடியாக இன்று பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.

ஜூன் 11ம் தேதி மேற்குவங்கத்தின் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்ததை தொடர்ந்து அவரின் உறவினர்கள் இரு மருத்துவர்களை தாக்கினர். இதில் மருத்துவர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த இளநிலை மருத்துவர்கள் தாக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த இரு நாட்களாக தொடரும் மருத்துவர்களின் போராட்டத்தால் என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக மேற்குவங்கத்தின் அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றின் அவசரகால பிரிவு, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவை கடந்த இரு தினங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் மேற்குவங்கத்தில் மக்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று போராட்டம் நடக்கும் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனைக்கு வந்தார். அவர் முன்பாக போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கமிட்டனர்.

மருத்துவர்களின் இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த மம்தா பானர்ஜி மருத்துவர்கள் அனைவரும் இன்று பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கையை மீறி மருத்துவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மருத்துவர்களின் போராட்டம் பாஜக, மார்க்சிஸ்ட் ஆகிய எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

இரு கட்சிகளும் இணைந்து இந்து –முஸ்லிம்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் இரு கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள தொடர்பு அதிர்ச்சி அளிக்கிறது என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக மேற்குவங்கத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.