புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி கோவில் திருவிழாவில் தேர் இழுத்து வழிபாடு

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 16:52

புதுச்சேரி, 

  புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருகாமீஸ்வரர் ஆலய பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூர் பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற அருள்மிகு கோகிலாம்பிகை திருகாமீஸ்வரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவினையொட்டி நாள்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக புதிய பட்டாடை உடுத்தி திருக்காமீசுவரர் மற்றும் கோகிலாம்பிகை அம்மன் தேரில் கொலுவிறக்கம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

நான்கு மாட வீதிகளில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. மேலும் தேரோட்டத்தையொட்டி வில்லியனூர் கொம்யூன் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.