அமைதி நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு 141வது இடம்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 16:48

புதுடில்லி

உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, 5 இடங்கள் பின் தள்ளி 141 இடத்தில் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று நடப்பு ஆண்டுக்கான உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் (Global Peace Index 2019) பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு மக்களின் பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

163 நாடுகளைக் கொண்ட அந்த பட்டியலில், ஐஸ்லாந்து நாடு உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளாக இந்நாடு அமைதி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கடைசி இடமான 163வது இடத்தை ஆப்கானிஸ்தான் பிடித்துள்ளது. கடைசி 10 இடங்களில் தெற்கு சூடான், ஏமன், ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 5 இடங்கள் கீழே இறங்கியுள்ளது. இந்த ஆண்டு இந்தியா 141வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிக்கையில்,

”உலகளவில் அமைதியான சூழல் கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

தெற்கு ஆசியாவை பொறுத்தவரை, பூட்டான் 15வது இடத்தில் உள்ளது. இலங்கை 72வது இடத்திலும், நேபாளம் 76வது இடத்திலும், வங்காளதேசம் 101வது இடத்திலும் உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியா, ஜப்பான், வங்காளதேசம், மியான்மர், சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.