புதிய திட்டங்கள், புதிய பள்ளிக் கட்டிடங்களை - காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 14:10

சென்னை,

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 6 துறைகள் சார்ந்த பல்வேறு திட்டங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்கட்சி மூலம் தொடங்கி வைத்தார். பல்வேறு இடங்களில் 84 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

வருவாய் நிர்வாகத்துறை

வருவாய் நிர்வாகத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி, சென்னை எழிலகத்தில் பேரிடர் மேலாண்மைக் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

காவலர் குடியிருப்புகள்

கோவை , பெரம்பலூர், நெல்லையில் காவலர் குடியிருப்புகள் சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் காவல் நிலையம் தேவகோட்டையில் தீயணைப்புத்துறை குடியிருப்பு, புழல் சிறையில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவல்துறை ஆண்டு மலரையும் வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் வீரராகவராவ், சந்தீப் நந்தூரி, இன்னசன்ட் திவ்யாவுக்கு பசுமை விருதுகளை முதல்வர் வழங்கினார். பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா மற்றும் ஷில்பா பிரபாகருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

பள்ளிக்கல்வித் துறை

பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடத்தை காணொலிக் காட்சி  மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில்,  திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர்  பா. வளர்மதி,  தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்,  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்   பிரதீப் யாதவ்,  ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர்  இரா.சுடலைக்கண்ணன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்  வி.சி. இராமேஸ்வரமுருகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.