பீகாரில் வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை : சட்டம் வருகிறது

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 20:36

பாட்னா,

  பீகாரில் வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் இயற்ற முதல்வர் நிதிஷ் குமார் ஒப்புதல் அளித்துள்ளார்.

குடும்ப அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில் வயதான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்படும் அவலநிலை தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக பீகாரில் வயதான பெற்றோரை கைவிடும் மகன்கள், மகள்களுக்கு சிறை தண்டனை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகாரில் செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த புதிய சட்டத்திற்கு முதல்வர் நிதிஷ் குமார் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தின் கீழ் தங்கள் மகன்கள், மகள்கள் வயதான காலத்தில் தங்களை சரியாக பார்த்துகொள்வதில்லை என்று பெற்றோர் புகார் அளித்தால் அவர்கள் பிள்ளைகள் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

பீகாரின் சமூக நலத்துறை இந்த புதிய சட்டத்தை அமைச்சரவையில் பரிந்துரைத்தது.