விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்தை பழங்குடியினருக்கு நீட்டிக்க சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 20:32

புதுடில்லி,

   விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 மானியமாக வழங்கும் பிரதம மந்திரி கிசான் உதவி திட்டத்தை பழங்குடியினர் மற்றும் காட்டில் வசிப்போருக்கும் நீட்டிக்க வேண்டும் என கோரி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமர் மோடிக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு துவக்கியது. மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

அதன்படி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்தை விவசாயம் செய்யும் பழங்குடியினர் மற்றும் காட்டில் வசிப்பவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோரி சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதினார். அதன் விவரம் :

சத்தீஸ்கரில் உள்ள 4 லட்சம் குடும்பங்களுக்கு காடுகள் உரிமை சட்டம் 2006ன் கீழ் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதை அவர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த 4 லட்சம் குடும்பங்களின் நிலை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளது. இவர்களுக்கு அரசின் உதவி தேவை. ஆனால் இந்த விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதனால் இவர்களுக்கும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்பட வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6000 ரூபாயை உயர்த்தி ஆண்டுக்கு ரூ.12,000 ஆக வழங்க வேண்டும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தன் கடிதத்தில் கோரியுள்ளார்.