வாயு புயல் கரையேறும் குஜராத் நிலவரம் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணிப்பு: பிரதமர் மோடி தகவல்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 20:23

புதுடில்லி,

அதிதீவிர புயலாக மாறிய வாயு புயலால் பாதிக்கப்பட போகும் குஜராத் மாநிலத்தின் நிலமையை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அரேபிய கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. நாளை காலை குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது 170 கிலோமீட்டர் வேகத்துக்கு காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாயு புயல் கரையை கடந்த பின்பும் 24 மணி நேரத்துக்கு வலுவிழக்காமல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 52 குழுவினர் மற்றும் இந்திய ராணுவத்தை சேர்ந்த 10 குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். போர்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் தயார்நிலையில் உள்ளன.

இந்நிலையில் வாயு புயல் காரணமாக குஜராத் மற்றும் பிற மாநிலங்களின் நிலவரத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘‘புயலால் பாதிக்கப்பட கூடிய குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகளிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பிற அமைப்பினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்’’

‘‘புயல் குறித்து அரசு மற்றும் உள்ளூர் அமைப்புகள் கொடுக்கும் செய்திகளை மக்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வாயு புயலால் பாதிக்கப்பட போகும் மாநிலங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக இறைவனை பிராத்திக்கிறேன்’’ என்று மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.