தெலங்கானா சபாநாயகர், கட்சி தாவிய 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 20:05

ஐதராபாத்,

தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் இணைப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக, சட்டப் பேரவை தலைவர், பேரவை செயலாளர், கட்சி தாவிய 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான், நீதிபதி ஷமீம் அக்தர் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

நோட்டீசுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இணைப்பு குறித்து, சட்டப் பேரவைத் தலைவர் போச்சரம் சீனிவாச ரெட்டி கட்டளையின் பேரில், பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எம். பட்டி விக்கிரமார்க்காவும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் என். உத்தம்குமார் ரெட்டியும் திங்கள்கிழமை தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தெலங்கானா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 12 எம்எல்ஏக்கள் தங்கள் குழுவை ஆளுங் கட்சியுடன் இணைக்குமாறு கோரிக்கை விடுத்த சில மணி நேரத்தில், அவர்களை  டிஆர்எஸ் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களாக அங்கீகரித்து பேரவைத் தலைவர் அறிவித்தார்.

மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் இன்னொரு கட்சியில் இணைவதற்கு கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அனுமதிக்கிறது. அதன்படி 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 12 எம்எல்ஏக்கள் என்பது மூன்றில் இரண்டு பங்கு பலம் என்பதால், அவர்களி்ன் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதாக பேரவைச்  செயலர் அறிக்கை தெரிவிக்கிறது.

தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு

ஒரு அரசியல் கட்சியை அல்லது சட்டமன்றக் கட்சியை  இன்னொன்றுடன் இணைப்பது பற்றி அறிவிக்கும் சட்டப்படியான கடமை, மக்கள் பிரநிதித்துவ சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையத்துக்கு  அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, சட்டப் பேரவைத் தலைவருக்கு அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் உத்தம்  குமார் ரெட்டியும், பட்டி விக்ரமார்க்காவும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.