ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக `இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார்’: சுர்ஜிவாலா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 18:58

புது டெல்லி,

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார் என்று கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

டெல்லியில் ஏ.கே. அந்தோனி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு சுர்ஜிவாலா இவ்வாறு அறிவித்தார். 

ஹரியானா, ஜம்மு – காஷ்மீர், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு கட்சியின் வியூகத்தை வகுப்பதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்த பிறகு நிச்சயமற்ற நிலை நீடித்து வந்த நிலையில், இப்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சிக்கு  ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து ஆராய்வதற்காக கடந்த மே 25-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார்.

ஆனால், அவரது பதவி விலகலை காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக நிராகரித்துவிட்டது. எனினும் ராகுல் காந்தி தனது நிலையில் உறுதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமாவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள நிலவரம் குறித்து, செய்தியாளர்கள் கேட்டதற்கு,  ``ராகுல்ஜி காங்கிரஸ் தலைவராக இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார்’’ என்று சுர்ஜிவாலா பதில் அளித்தார்.

ஏ.கே. அந்தோனி தலைமையில் நடைபெற்ற மூத்த தலைவர்கள் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.