உத்தரபிரதேசத்தில் தடம் புரண்ட ரயில்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர் மீது ரயில்வே போலீசார் தாக்குதல்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 18:43

லக்னோ,

   உத்தரபிரதேசத்தில் ரயில் தடம் புரண்டதை வீடியோ எடுத்து செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிக்கையாளர் அமித் ஷர்மாவை ரயில்வே போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று  தடம்புரண்டு கவிழ்ந்துள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க நியூஸ்24 செய்தியாளர் அமித் ஷர்மா அங்கு சென்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே போலீசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ரயில்வே போலீசார் அமித் ஷர்மாவை கடுமையாக தாக்கி கைது செய்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து அமித் ஷர்மாவை அடித்து உதைத்துள்ளனர். அவரின் ஆடைகளை களைந்து அடித்துள்ளனர். மேலும் அவர் மீது சிறுநீர் கழித்ததாக அமித் ஷர்மா கூறினார்.  

இதுதொடர்பான செய்தி சமூக வலத்தளங்களில் பரவியதும். பிற செய்தியாளர்கள் அங்கு குவிந்து போராட்டம் நடத்தினர்.  பிறகு இன்று காலை அவரை விடுவித்தனர்.

இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட 2 போலீசாரை சஸ்பெண்ட் செய்துள்ளனர் என உத்தர பிரதேச போலீஸ் ஜெனரல் ஓ.பி சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரயில்வே போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.