உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் சுட்டுக்கொலை

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 18:42

ஆக்ரா,

உத்தரபிரதேசம் பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்வீஷ் சிங் தன்னுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்த வழக்கறிஞர் மணிஷ் சர்மாவால் நீதிமன்ற வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

உத்தரபிரதேசத்தின் பார் கவுன்சில் தலைவராக இரண்டு நாட்கள் முன்பு வழக்கறிஞர் தர்வீஷ் சிங் தேர்வானார். இதன்மூலம் உத்தரபிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றார்.

இந்நிலையில் இன்று மதியம் நீதிமன்ற வளாகத்தில் தர்வீஷ் சிங்குக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வழக்கறிஞர் மணிஷ் சர்மா திடீரென்று எழுந்து தர்வீஷ் சிங்கை மூன்று முறை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தர்வீஷ் சிங் உயிரிழந்தார்.

அருகில் இருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் மணிஷ் சர்மா தன்னை தானே சுட்டுக்கொண்டார். உயிருக்கு போராடிய மணிஷ் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணிஷ் சர்மா பல ஆண்டுகள் தர்வீஷ் சிங்குடன் பணியாற்றியவர். மணிஷ் சர்மா பயன்படுத்திய கைதுப்பாக்கிக்கு அவர் உரிமம் பெற்றுள்ளார். இந்த தாக்குதல் மதியம் 2.30 மணியளவில் நடந்துள்ளது என ஆக்ராவின் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.