சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 18:23

பெங்களூரு, 

  சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அறிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 விண்கலம் வரும் ஜுலை 15ம் தேதி அதிகாலை 2.51 மணிகு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

இந்தியா கடந்த 2008ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது.

அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது.

இதையடுத்து நிலாவை மேலும் ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-2 விண்கலம் திட்டத்துக்கு இஸ்ரோ முடிவு செய்தது.

சந்திரயான்-2 திட்டத்தை வருகிற ஜூலை மாதம் நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை மாதம் 9ம்தேதி முதல் 16ம் தேதிக்குள் சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சந்திரயான்- 2 விண்கலம் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் சந்திரயான் 2 விண்கலத்தை உருவாக்கி உள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சந்திரயான் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்துடன் செல்ல உள்ள ஆர்பிட்டர், லேண்டர், மற்றும் ரோவர் ஆகியவற்றின் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. இவை ஒவ்வொன்றும் பல சோதனைக்கருவிகளை தங்களுடன் பெற்றுள்ளன.

ஜிஎஸ்எல்வி மார்க் -III ஏவுகணை எல்லா தொகுப்புகளுடன் வானில் விரையும்

சந்திரயான்-II பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரோபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும். சந்திரனின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாட்டின் செயற்கைக் கோளும் இறங்காத இடத்தில் லேண்டர் சந்திரனில் இறங்கும்.  வரும் செப்டம்பர் மாதம் 6ந்தேதி லேண்டர் மெதுவாக சந்திரனில தரை இறங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் ரோவர் தனியாக பிரிந்து, பல ஆய்வுகளை நடத்தவுள்ளது.

லேண்டர் (விக்ரம்) நிலவின் தென்துருவ பகுதியில் ஆராய்ச்சியை மேற்கொள்ளப்போகிறது. சந்திரயான் 2 விண்கலத்தின் எடை 3290 கிலோ ஆகும். இதில் நவீன முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.