தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 17:39

சென்னை

புதுடெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பிய உடன் தமிழக சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை  ஆளுநர் மாளிகைக்குச் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை ராஜ்பவனில் புதனன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை அமைச்சர் டி ஜெயக்குமாரும் ஆளுநரை சந்தித்தார்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சருடன் தமிழக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநர் மாளிகைக்குச் உடன் சென்று இருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அமைச்சர் ஜெயக்குமாரையும் இன்முகத்துடன் ஆளுநர் வரவேற்றார்.

ஆளுநருக்கு மலர் கொத்து தந்து முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செய்தார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆளுநர் பேசி விட்டு சென்னைக்கு திரும்பியதும் முதல்வரை அழைத்து பேசிய கருத்துக்கள் என்ன என்பதை அரசுத் தரப்பில் இருந்தும் ஆளுநர் தரப்பில் இருந்தும் வெளியிடப்படவில்லை.

தமிழகத்தின் காவல்துறை தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்கு பதிலாக நியமிக்கப் பட வேண்டியவர் குறித்து தமிழக அரசுக்கு ஆலோசனைகளை ஆளுநர் தெரிவித்து இருக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை தலைவரோடு தமிழக அரசு தலைமைச் செயலாளரும் பதவியில் இருந்து ஓய்வு பெற இருக்கிறார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. புதிய தலைமைச் செயலாளர் நியமனம் குறித்தும் ஆளுநர் முதல்வருடன் கருத்து பரிமாறி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பாக காதும் காதும் வைத்தாற்போல கருத்தை பரிமாறிக்கொள்ள ஏராளமான வாய்ப்புக்கள் இருதரப்புக்கும் உள்ளன. எனவே புதிய நியமனங்களுக்காக ஆளுநர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர சந்திப்பு நிகழ்ந்து இருக்கும் என நம்ப வேண்டியதில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  நேரில் தெரிவிப்பதற்காக முதல்வரை அழைத்து ஆளுநர் பேசி இருக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி விநியோகம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத் தனது தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அவரது விடுதலையை மத்திய அரசும் நீதிமன்றமும் ஆமோதிக்க வில்லை. ஆனாலும் மகாராஷ்டிர அரசின் சிறைத்துறையினர் நன்னடத்தை காரணமாக சஞ்சய் தத்தை முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவித்ததாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் செய்திகள் தரப்பட்டுள்ளன..

இந்தச் செய்திகள் காரணமாக மகாராஷ்டிர அரசு ஒரு சிக்கலான நெருக்கடியில் தள்ளப்பட்டு இருக்கிறது.

மகாராஷ்டிர அரசை பின்பற்றி தமிழக அரசும் சிறையில் உள்ள ஏழு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய முற்படக் கூடாது என அறிவுறுத்த இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது..

மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்தது விதிகளுக்கு புறம்பான செயல் என்பது உண்மை. அதே தவறை தமிழக அரசு செய்யக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது. இந்தக் கருத்தைத்தான் ஆளுநர் புரோகித் முதல்வருக்கு தெரிவித்து இருக்கலாம் என கருதப்படுகிறது