மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்த ஹாங்காங் : சர்ச்சைக்குரிய மசோதா மீதான விவாதம் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 17:07

ஹாங்காங்,

ஹாங்காங்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்காக சீனாவிற்கு அனுப்ப வழிவகை செய்யும் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இன்று முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ஹாங்காங் நகரம் இன்று ஸ்தம்பித்தது.மக்களின் போராட்டம் காரணமாக ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த மசோதா மீதான விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த சில வருடங்களாக ஹாங்காங் மக்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் வகையில் பல சட்டத்திருத்தங்களை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஹாங்காங்கில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஹாங்காங் மக்கள் மீது சீன அரசு போடும் வழக்குகளின் விசாரணைக்காக அவர்களை சீனாவுக்கு அனுப்பும் வகையில் சில திருத்தங்கள் செய்து ஹாங்காங் அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதாவின்படி ஹாங்காங் மக்கள் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். இதன் மூலம் ஹாங்காங்கில் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக கூறுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீன அரசால் வழக்கு போட முடியும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சீனாவில் நியாயமான வழக்கு விசாரணை நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இந்த சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிராக ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூன் 9ம் தேதி ஹாங்காங்கில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு மசோதாவிற்கு எதிராக அமைதி பேரணி நடத்தினர். ஆனால் மக்களின் எதிர்ப்பை மீறி இந்த மசோதாவை நிறைவேற்ற ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக ஹாங்காங்கில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்ட மக்கள் முக்கிய சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் ஹாங்காங்கில் போக்குவரத்து முடங்கியது.

நாடாளுமன்றம் முற்றுகை

போராட்டத்திற்காக இன்று வகுப்புக்களை புறக்கணித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், கறுப்பு ஆடைகளை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் கூடினர். அரசு அலுவலகங்களை சுற்றி முற்றுகையிட்டனர். அதனால் போராட்டம் நடக்கும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹாங்காங் நகரில் பல வணிகர்கள் தங்கள் கடைகளை இன்று அடைத்துள்ளனர். இவ்வாறு பல்வேறு தரப்பினர் தங்கள் வழியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.. இந்த போராட்டத்தால் ஹாங்காங் நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.

நாடாளுமன்றம் வெளியே கூடியுள்ள போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் தண்ணீர் பாய்ச்சி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி வருகிறார்கள்.

மசோதாவிற்கு எதிராக கூடியுள்ள மக்கள் அனைவரும் சட்டத்தை மீறாமல் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என்று ஹாங்காங் நகரின் தலைமை செயலாளர் தன் வீடியோ செய்தியில் எச்சரிக்கை செய்துள்ளார்.

விவாதம் ஒத்திவைப்பு

மக்கள்  போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து சர்ச்சைக்குரிய மசோதா மீது  ஹாங்காங் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டது. மசோதா மீதான விவாதம் எப்போது நடைபெறும் என்ற விவரம் வெளியாகவில்லை.

சீன தேசிய கீதத்திற்கு அவமதிப்பு 

ஹாங்காங்கில் நேற்று இரவு நடந்த தைவானுக்கு எதிரான கால்பந்து விளையாட்டின் போது இசைக்கப்பட்ட சீன தேசிய கீதத்திற்கு அங்கு கூடியிருந்த ஹாங்காங் ரசிகர்கள் சத்தமாக ஊளையிட்டு அவமரியாதை செய்தனர்.

ஹாங்காங்கில் அதிகரித்து வரும் சீனாவின் அதிகாரத்தை எதிர்க்கும் வகையில் ரசிகர்கள் இவ்வாறு செய்தனர். ஹாங்காங்கில் சீன தேசிய கீதம் அவமதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

தங்கள் நாட்டு தேசிய கீதத்தை அவமரியாதை செய்வோர் மீது சீன அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசிய கீதம் தொடர்பாக சீன அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி மதுபான பார்களில், திருமண விழாக்களில், இறுதி சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட கூடாது.

மேலும் சீன தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட மசோதா ஏற்கெனவே ஹாங்காங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.