சிங்க நண்பர்!

பதிவு செய்த நாள் : 14 ஜூன் 2019

ஒரு ஊரில், தச்சர் ஒருவர் இருதார்; மர வேலைகளுக்காக, மரம் வெட்ட, தினமும், காட்டுக்குச் செல்வது வழக்கம்!

அந்த காட்டில், ஒரு சிங்கம் வசித்து வந்தது; அது, மிகவும் நல்ல இயல்புடையது.

ஆனால், தீய சிந்தனைகளின் மொத்த உருவமான, நரியும், காக்கையும் சிங்கத்தின் நண்பர்களாக இருந்தன.

சிங்கம் நல்ல குணமாக இருந்தாலும், நரி, காக்கையின் துர்போதனையால், சில அநியாயச் செயல்களில் ஈடுபட்டது.

ஒரு நாள் -

தச்சர் காட்டுக்கு மரம் வெட்டச் சென்ற போது, எதிர்பாராத நிலையில் சிங்கம் மட்டும் தனியாக எதிரே வந்து விட்டது.

நடுநடுங்கிப் போனார்.

மனதிற்குள் கடவுளைத் தியானித்து, 'நண்பா... என் மனைவி, நீ சாப்பிடுவதற்கு சில தின்பண்டங்களைச் செய்து அனுப்பியிருக்கிறாள்; இதை உண்டு மகிழ்ந்து, என்னை கவுரவிக்க வேண்டும்...' என, மிகவும் பவ்வியமாக, கூறினார், தச்சர்.

தீய நண்பர்கள் அருகில் இல்லாததால், தச்சரிடம் பெருந்தன்மையுடன் பழகத் துவங்கியது சிங்கம்.

'நண்பனே... உன்னுடைய உணவு முறைக்கும், என்னுடைய உணவு முறைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நீ, சோறு உண்ணும் வழக்கமுடையவன். நானோ, விலங்குகளின் இறைச்சியை உண்டு வாழ்கிறவன்; இருந்தாலும், நீ அன்புடன் தருவதால், உன்னுடைய உணவை ருசி பார்க்கிறேன்...' என்று, கூறியது சிங்கம்.

தச்சருக்குப் போன உயிர் திரும்பியது; தான் எடுத்து வந்த, சுவையான பலகாரங்களைச் சிங்கத்துக்குக் கொடுத்தார்.

அந்த பலகாரங்களை ருசி பார்த்த சிங்கத்துக்கு, முழு திருப்தி ஏற்பட்டது.

'நண்பா... உன் வீட்டு பலகாரம் இவ்வளவு சுவையாக இருக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் நன்றாக உள்ளது. இன்று முதல், நீயும், நானும் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம்.

'எவ்வித அச்சமும் இல்லாமல், நீ, இந்த காட்டில் உலாவலாம்; நீ காட்டிற்கு வரும்போதெல்லாம் அவசியம் என்னைக் சந்திக்க வேண்டும்...' என்று, கூறியது சிங்கம்.

மிகவும் மகிழ்ச்சியடைந்து, சிங்கத்துக்கு நன்றி கூறினார், தச்சர்.

'நண்பனே... நான் உன்னை அன்றாடம் சந்திப்பதில், எனக்கு மிக மகிழ்ச்சியே. ஆனால், என்னைச் சந்திக்கும் போது, நீர் மட்டுமே தனியாக இருக்க வேண்டும்...' என்று, கேட்டுக் கொண்டார் தச்சர்.

அன்று முதல், அந்தக் காட்டுக்கு வரும் போதெல்லாம், தச்சரும், சிங்கமும் சந்தித்தனர்.

தச்சர் வீட்டிலிருந்து, ஒவ்வொரு நாளும் புது புது பலகாரங்களை சிங்கத்துக்கு கொடுப்பார்; சிங்கமும், அவற்றை விரும்பி உண்ணும். நெடு நேரம் பேசுவர். பின், பிரிந்துச் செல்வர்.

'நண்பர்களே... எனக்கு ஒரு தச்சன் புதிய நண்பனாக கிடைத்துள்ளான்; மிகவும் நல்லவன்; என் மீது அன்பை பொழிகிறான். என் பொருட்டு, அவன் மனைவி வித விதமான பலகாரங்களை செய்து அனுப்புகிறாள். அவை மிகவும் ருசியாக உள்ளன...' என்றது சிங்கம்.

'நட்பில், தங்களுக்குப் போட்டியாக ஒருவன் வந்து விட்டான்' என்ற தகவல், நரிக்கும், காக்கைக்கும் பொறாமையை துாண்டியது.

அந்த நட்பை எப்படியாவது முறித்து விட எண்ணின.

'நண்பனே... இது என்ன பைத்தியக்காரத்தனமான நட்பு! நம்மை போன்ற, காட்டு விலங்குகள் ஒரு மனிதனுடன் எவ்விதம் நட்பாக இருக்க முடியும்... அந்த மனிதனை அடித்துக் கொன்று சாப்பிடுவது தான், நாம் உண்மையில் செய்யக் கூடியது...' என்றன.

சிங்கத்திற்குக் கோபம் வந்தது.

'மடத்தனமாக உளறாதீர்; நண்பர்கள் என்றால், எல்லாரும் ஒரே மாதிரி தான்; நட்பு தான் முக்கியமே தவிர, ஆள் முக்கியமன்று. அவர்களுக்குத் தீங்கிழைப்பதைப் பற்றி நான் சிந்தித்ததே இல்லை...' என்று கூறியது.

நரியும், காக்கையும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

'சந்தர்ப்பம் கிடைத்தால், அந்த மனிதனை கொன்று தின்ன முயற்சி செய்வோம்' என பேசிக்கொண்டன.

'நண்பனே... உன்னுடைய கருத்துக்கு மாறாக, நாங்கள் பேச மாட்டோம்; உன்னுடைய நண்பர்கள் எங்களுக்கும், நண்பர்கள் தான். ஆகவே, உன் நண்பனுடன், நாங்களும் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறோம். தயவுசெய்து, எங்ளுக்கும் அறிமுகப்படுத்து...' என கேட்டுக் கொண்டன.

அப்படியே செய்வதாக வாக்குறுதி அளித்தது சிங்கம்.

மறுநாள் -

சிங்கத்திற்கு தன் மனைவியை அறிமுகப்படுத்துவதற்காக அழைத்து வந்தார் தச்சர்.

வழக்கமாகச் சிங்கத்தை சந்திக்கும் இடத்தில், மனைவியுடன் காத்திருந்தார் தச்சர்.

அப்போது, சற்றுத் தொலைவில், சிங்கமும், அதன் நண்பர்களான நரியும், காக்கையும் வருவதை பார்த்து விட்டார் தச்சர்.

உடனே, அங்கிருந்த பெரிய மரத்தில், தன் மனைவியை ஏற்றி, தானும் மரத்தின் மேல் ஏறி விட்டார்; மரத்தடிக்கு வந்த சிங்கம், தச்சரின் வழக்கத்துக்கு மாறான செயலை கண்டு திகைத்தது.

'என்ன நண்பா... இன்று உன்னுடைய நடவடிக்கை மிகவும் விசித்திரமாக உள்ளதே. என்னை, உனக்கு அடையாளம் தெரியவில்லையா... நான், உன் நண்பன்; என்னைக் கண்டு ஏன், பயந்து, மரத்தின் மீது ஏறினாய்...' என, கேட்டது சிங்கம்.

'நண்பா... உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் இல்லை; உன்னைக் கண்டு நான் அச்சப்படவும் இல்லை; ஆனால், உன்னுடன் வந்திருக்கும் நண்பர்களை, என் மனம் நம்பவில்லை. அதனால் தான், தற்காப்புக்காக மரத்தில் ஏறிக்கொண்டேன்...' என்று கூறினார் தச்சர்.

அதன் பிறகு, சிங்கம் என்ன கூறியும் தச்சர் கீழே இறங்கி வரவேயில்லை.அத்துடன் சிங்கத்துடனான நட்பை முறித்துக்கொண்டார் தச்சர்.

குட்டீஸ்... தச்சர் உஷாரா இருந்ததால் தப்பிச்சார். இதற்கு தான் நம் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பது. தீய நண்பர்களால் நமக்கு தீமை தான் வரும். எனவே, நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்க...