தேர்தல் வெற்றிக்குப் பின் ரேபரேலிக்கு நன்றி கூறச் சென்றார் சோனியா காந்தி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 15:31

ரேபரேலி   

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்ற பின் முதல் முறையாக சோனியா காந்தி இன்று ரேபரேலி தொகுதிக்கு நன்றி கூறச் சென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, 1.60 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். இந்நிலையில், சோனியா காந்தி தான் வெற்றிபெற்ற மக்களவை தொகுதியான ரேபரேலிக்கு இன்று சென்றார்.

அவரது மகளும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியும் அவருடன் உடன் சென்றுள்ளார். ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சோனியா காந்தி சென்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் லால் ஆஷ் கிரன் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

ரேபரேலி தொகுதியில் உள்ள ஃபர்சத்காஞ்ச் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சோனியா காந்தி அங்கிருந்து கார் மூலம் புயேமாவ் விருந்தினர் இல்லத்திற்கு சென்றார். வழிநெடுகிலும் சோனியா காந்தியை கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

இன்று மாவட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி ஆலோசனை நடத்த இருக்கிறார். இன்று மாலை, சோனியா காந்தி பங்கேற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 2,500 கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.