நாங்குநேரி இடைத்தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு தள்ளுபடி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 12:54

மதுரை,

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான செலவை எச். வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எச். வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் பி.தனபால், அதுகுறித்த தகவலை தேர்தல் ஆணையத்தின் தமிழகப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

பேரவைத் தலைவரின் தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இதையடுத்து, நாங்குநேரி தொகுதிக்கு, வரும் டிசம்பருக்குள் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கு தள்ளுபடி

நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான செலவை எச். வசந்தகுமாரிடம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே. ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

கே.கே.ரமேஷ் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.