சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய 3 எம்எல்ஏக்களுக்கு இன்றைய கூட்டத்துக்கு அழைப்பு இல்லை

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 12:09

சென்னை,

அதிமுக கொறடா ராஜேந்திரன் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்று சபாநாயக தனபால் நோட்டீஸ் அனுப்பிய 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பபடவில்லை.

               பிரபு                       ரத்தினசபாபதி                      கலைச்செல்வன்

அமமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரில் ஒருவரான கலைச்செல்வன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா மதுரையில் முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பில்லை என்றும். அழைப்பு வராததால் தாங்கள் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்களும் தெரிவித்துள்ளனர்.

ஒற்றைத்தலைமை இருந்தால் மட்டுமே அதிமுக பலம் பொருந்தியதாக இருக்கும்; தொண்டர்களும் வாக்காளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை இப்போது அதிமுகவுக்கு தேவைப்படுகிறது என்று எம்எல்ஏ கலைச்செல்வன் கூறியுள்ளார்.

நல்ல தலைமை இல்லை என தொண்டர்கள் நினைக்கின்றனர். ஒரு ஆளுமைமிக்க தலைவர்தான் அதிமுகவுக்கு தேவை என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.