எர்ணாகுளம் கூலித் தொழிலாளி கடலூர் திரும்பியதும் காய்ச்சல்: நிபா வைரஸ் பாதிப்பா?

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:52

புதுச்சேரி,             

நிபா வைரஸ் தாக்கம் என்ற சந்தேகத்தின் காரணமாக, கடலூரைச் சேர்ந்த தொழிலாளிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரளத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் சிலர் பாதிக்கப்பட்டதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும், சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு காய்ச்சலுக்காக வரும் நோயாளிகளைப் பரிசோதிக் கும் சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

தற்போது நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கடலூரைச் சேர்ந்த ஒருவர் ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், உருளைமேடு அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 53 வயது தொழிலாளி, கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியில் கூலி வேலை செய்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பினார். அன்று முதல் சில நாள்களாக அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவர் கடலூரில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 10-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகித்தனர். அந்தத் தொழிலாளியை தனி வார்டில் சேர்த்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொழிலாளியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புணேயிலுள்ள மத்திய அரசின் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான், அவருக்கு நிபா வைரஸ் தாக்குதலால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா அல்லது சாதாரண காய்ச்சலா என்ற விவரம் தெரிய வரும் என ஜிப்மர் மருத்துவர்கள் தெரிவித்தனர்.