அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வரவேண்டும் - தொடரும் போஸ்டர் யுத்தம்

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:45

சென்னை,           

அதிமுக பொதுச்செயலாளராக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வர வேண்டும் என காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு போஸ்டர் யுத்த பரபரப்பு தொடங்கியுள்ளது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார். இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், அதிமுகவுக்குள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியது.

இதையடுத்து கட்சி விவகாரங்கள் தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியது.

இந்நிலையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுக அலுவலகம் வெளியே முதல்வர் பழனிசாமியே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள தால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான அதிகார போரில் யாருக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற போஸ்டர் யுத்தம் அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.