அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு: போஸ்டரால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:30

சென்னை,             

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பற்றி எம்.எல்.ஏ.க்கள் பேச தொடங்கியுள்ள நிலையில் கட்சியின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகள், கட்சி தலைமை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்படும். பொதுக்குழுவை கூட்டுவது பற்றியும் ஆலோசிக்கப்படும்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையகத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து அக்கட்சி தலைமையகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய போஸ்டரால் கட்சி தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.