பைலாதிலா மலையில் இரும்புச் சுரங்கப் பணிக்கு சதீஸ்கர் அரசு தடை: பழங்குடி மக்கள் போராட்டம் எதிரொலி

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:30

ராய்பூர்,                 

தண்டேவாடா மாவட்டம் பைலாதிலா மலைப் பகுதியில் இரும்புச் சுரங்கம் அமைப்பது தொடர்பான அனைத்துப் பணிகளையும் நிறுத்துமாறு, சதீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசின் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆணையிட்டுள்ளார்.

கடந்த 5 நாட்களாக ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்ததன் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஸ்தார் தொகுதி  காங்கிரஸ் எம்.பி. தீபக் பைஜ் தலைமையில் பழங்குடி மக்களின் தலைவர்கள் குழு சந்தித்துப் பேசியதை அடுத்து முதலமைச்சர் பூபேஷ் பாகெல் இவ்வாறு முடிவு செய்துள்ளார்.

அந்தப் பகுதியில் மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டனவா என்பதை உறுதிப்படுத்திய பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 2014-ல் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதாகக் கூறப்படும் கிராம சபை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் குறித்து புலன் விசாரணை நடத்துவதற்கும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.  இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு உடனே கடிதம் எழுதுமாறு சம்பந்தப்பட்ட அரசு துறைகளை முதல்வர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

போராட்டத்தின் பின்னணி

பழங்குடி மக்கள் இயற்கை தெய்வமாக கருதும் நந்தராஜாவின் பெயரில் இந்த மலை நந்தராஜ் மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலையையே அவர்கள் தங்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். சுரங்கம் அமையும் பகுதி, நந்தராஜாவின் மனைவி பிதோட் தேவி வாழும் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில், பைலாதிலா  மலைப் பகுதியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கப் பகுதியில் இந்த மலை அமைந்திருக்கிறது.

மத்திய அரசின் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகமும் (என்எம்டிசி),  மாநில அரசு நிறுவனமான சத்தீஸ்கர் கனிமவள மேம்பாட்டுக் கழகமும் (சிஎம்டிசி) இணைந்து என்சிஎல் என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தின் மூலம், 13-வது இரும்புக் கனிமப் படிவப் பகுதி என அழைக்கப்படும் பகுதியில் இரும்புச் சுரங்கம் அமைக்கப்பட இருக்கிறது.

இங்கு, 35 கோடி டன் அளவுக்கு உயர் தரமான இரும்புக் கனிமம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 1 கோடி டன்  இரும்புக் கனிமம் வெட்டியெடுக்க திட்டமிடப்பட்டுளது.

அதானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

இந்தப் பகுதியில், இரும்புச் சுரங்கம் தோண்டுகிற, அதை மேம்படுத்துகிற பணிக்கான ஒப்பந்தம், பாஜக ஆட்சியில் இருந்தபோது கடந்த ஆண்டு அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

சுரங்கம் அமையும் இடத்துக்குச் செல்வதற்கான சாலை அமைப்பதற்காக  மரங்கள் வெட்டப்பட்டு வந்தன.

இந்தப் பின்னணியில், பழங்குடி மக்களின் மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட இந்த மலைப் பகுதியில், அதானி நிறுவனம் சுரங்கம் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என பழங்குடி மக்கள்  போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கிரண்டுல் நகரில் உள்ள என்எம்டிசி நிர்வாக அலுவலகத்துக்கு முன்பாக, பழங்குடி மக்களின் தர்ணா போராட்டம் தொடர்ந்து  5 நாட்களாக நடைபெற்று வந்தது.

`சன்யுக்த் பஞ்சாயத்து சமிதி’ என்ற அமைப்பின் தலைமையில், தண்டேவாடா, சுக்மா, பீஜப்பூர் மாவட்டங்களில் உள்ள 200 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வில், அம்புகளுடன் அமர்ந்து

கடந்த 7ம் தேதி முதல், கடந்த  5 நாட்களாக இந்தக் காலவரம்பற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுவரையில் 10 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும், 25 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் பழங்குடி மக்கள் தலைவர், மங்கள் குஞ்சமம் குற்றம் சாட்டியிருந்தார்.