பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019 11:07

சென்னை,          

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கியது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதேபோன்று, சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, 13 தொகுதிகளை இழந்து 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரட்டைத் தலைமைக்குப் பதிலாக ஒற்றைத் தலைமையை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா முன்வைத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், கட்சி தொடர்பான விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டாமென அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அந்தக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள், கட்சித் தலைமை குறித்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துகள், உள்ளாட்சித் தேர்தல்கள் என பல முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்கான கடிதம் கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பிய எம்எல்ஏக்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும் இன்றைய கூட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றன.