ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள் மீது இந்தியா 50% வரி விதிப்பதை ஏற்க முடியாது : அதிபர் டிரம்ப் சாடல்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:52

வாஷிங்டன்,

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள் மீது இந்தியா 50 சதவீதம் வரி வசூலிப்பதை ஏற்று கொள்ள முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் சாடியுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகள் மீது இந்தியா 100 சதவீத வரி வசூலித்து வந்தது. இதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்தியாவை வரிகளின் ராஜா என விமர்சித்தார்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீதான நியாயமற்ற இந்த வரியை குறைக்காவிட்டால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய மோட்டார் பைக்குகள் மீது வரிகள் உயர்த்தப்படும் என டிரம்ப் எச்சரித்தார்.

அதை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குள் மீதான வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.

இந்நிலையில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது 50 சதவீத வரி வசூலிப்பதை ஏற்க முடியாது என அதிபர் டிரம்ப் மீண்டும் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அமெரிக்காவின் சி.பி.எஸ் செய்தி சேனலுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டியில் பேசிய அதிபர் டிரம்ப் தனது தலைமையிலான அரசின் கீழ் யாரும் அமெரிக்காவை ஏமாற்ற முடியாது என கூறினார்.

இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஹார்லி டேவிட்சன் பைக்குகள் மீது 100 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்திய பைக்குகள் மீது அமெரிக்கா எந்த வரியும் வசூலிக்கவில்லை.

இது அநியாயம் என்று என் நண்பர் பிரதமர் மோடியிடம் கூறினேன். ஒருமுறை இதை பற்றி பேசியதற்கே பிரதமர் மோடி வரியை 50 சதவீதமாக குறைத்தார். ஆனால் 50 சதவீதம் வரி வசூலிப்பதையும் ஏற்க முடியாது. இது பற்றி இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

உலக நாடுகள் அமெரிக்காவை பணம் கொடுக்கும் வங்கியாக பார்க்கின்றன. அந்த வங்கியில் இருந்து யார் வேண்டுமானாலும் திருடி செல்லலாம் என நினைக்கின்றன. கடந்த பல வருடங்களாக இந்த சூழ்நிலை தான் உள்ளது.

அதன் காரணமாக பிற நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை சுமார் 80,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதுபோன்ற வர்த்தக ஒப்பந்தங்களை யார் மேற்கொண்டார்கள் என கூறுங்கள். அமெரிக்கா ஒன்றும் முட்டாள் அல்ல என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.