பாகிஸ்தான் அரசுக்கு எதிராக 2016ல் பேசிய வழக்கில் எம்.கியூ.எம். கட்சித் தலைவர் லண்டனில் கைது

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:48

லண்டன்/கராச்சி

பாகிஸ்தான் அரசியல் கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் (எம்.கியூ.எம்) நிறுவனரும் தலைவருமான அல்டாஃப் ஹுசைன் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் இன்று லண்டனில் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் இருந்து பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த உருது பேசும் முஹாஜிர் இஸ்லாமியர்களின் ஆதரவு பெற்ற கட்சி முத்தாஹிதா குவாமி இயக்கம். இந்த கட்சி முஹாஜிர் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் கராச்சியில் கடந்த 30 ஆண்டுகளாக செல்வாக்கு பெற்று விளங்குகிறது.

அரசியல் எதிர்ப்பு காரணமாக எம்.கியூ.எம் கட்சியின் தலைவர் அல்டாஃப் ஹுசைன் கடந்த 1990ம் ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்தார். அதன்பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.

லண்டனில் வசித்தாலும் பாகிஸ்தானில் உள்ள எம்.கியூ.எம் கட்சியில் இவரது செல்வாக்கு தொடர்கிறது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக சர்சைக்குரிய வகையில் அல்டாஃப் ஹுசைன் பேசினார். பாகிஸ்தான் இந்த உலகத்துக்கு ஏற்பட்ட தலைவலி. உலக நாடுகளின் கேன்சர் நோய். பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என கூறினார். தனது தொண்டர்களிடம் சட்டத்தில் கையிலெடுக்கும்படி வலியுறுத்தினார்.

லண்டனில் அவர் பேசியதை கேட்ட அவரது தொண்டர்கள் கராச்சியில் உள்ள ஊடக அலுவலகம் ஒன்றை அடித்து நொறுக்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அல்டாஃப் ஹுசைன் மற்றும் எம்.கியூ,எம் கட்சி தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து லண்டன் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வெறுப்பைத் தூண்டு வகையில் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அல்டாஃப் ஹுசைன் இன்று லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.