விண்வெளி போருக்கான ஆயுதங்களைத் தயாரிக்க புதிய அமைப்பு : பிரதமர் மோடி ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:22

புதுடில்லி,

விண்வெளி போருக்கான புதிய நவீன ரக ஆயுதங்களை வடிவமைத்து தயாரிப்பதற்கு புதிய அமைப்பு ஒன்றினை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். மத்திய அமைச்சரவை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் செயற்கோள் அழிக்கும் ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக செய்து முடித்தது. விண்வெளியில் சுற்றி கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட இந்திய செயற்கோள் ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டது.

இதன்மூலம் விண்வெளியில் ஏவுகணைத் எதிர்த்தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இந்த வெற்றி மூலமாக போர்க்காலங்களில் இந்திய செயற்கோள்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை தடுக்கும் திறனை இந்தியாவால் உருவாக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விண்வெளி பாதுகாப்புக்காக போர்கால ஆயுதங்களை வடிவமைக்க தனி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதற்கு விண்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் (Defence Space Research Agency) என பெயரிடப்பட்டுள்ளது. சுருக்கமாக டி.எஸ்.ஆர்.ஓ (DSRO) என்று அழைக்கப்படும்.

டி.எஸ்.ஆர்.ஓ அமைப்பதற்கான முடிவு முன்பே மத்திய அரசின் உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுவிட்டது. மத்திய அமைச்சகத்தின் கூட்டு செயலாளர் தகுதியில் உள்ள விஞ்ஞானி ஒருவரின் தலைமையின் கீழ் அதற்கான பணிகள் துவங்கிவிட்டன என்று பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.   

விண்வெளி பாதுகாப்பிற்காக மத்திய அரசு உருவாக்கி வரும் டிஃபன்ஸ் ஸ்பேஸ் ஏஜென்சி (Defence Space Agency)  என்ற விண்வெளி பாதுகாப்பு நிறுவனத்திற்கான ஆராய்ச்சிப் பணிகளை டி.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

டி.எஸ்.ஏ (DSA) என்றழைக்கப்படும் டிஃபன்ஸ் ஸ்பேஸ் ஏஜென்சி பெங்களூரில் நிறுவப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படை உயர் அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் செயல்படும். விண்வெளி போருக்கான முப்படைகளின் திறனை மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.