நாடு முழுவதும் இந்தி மொழியை திணிக்க பாஜக முயற்சி: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:13

கொல்கத்தா,

பாஜக தலைமையிலான மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். சமூக ஆர்வலர் ஈஸ்வர் சந்திர வித்தியாசகரின் சிலை திறப்பு விழாவில் மம்தா பானர்ஜி இதை தெரிவித்தார்.

கடந்த மே மாதம் மக்களவை தேர்தலின் போது மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் பிரபல சமூக ஆர்வலர் ஈஸ்வர் சந்திர வித்தியாசாகரின் உருவசிலை உடைக்கப்பட்டது.

இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். சிலையை உடைத்தது பாஜகவினர் என குற்றம்சாட்டினார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சிலையை உடைத்து பழியை பாஜக மீது போடுவதாக அமித் ஷா சாடினார். இந்த சம்பவத்தால் இருதரப்பினர் இடையே மோதல் அதிகரித்தது.

மக்களவை தேர்தல் முடிந்த பின்பும் மேற்குவங்கத்தில் இருகட்சியினர் இடையே மோதல் தொடர்கிறது. இந்த மோதலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மேற்குவங்கத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் கலவரத்தில் உடைந்த வித்தியாசாகர் சிலைக்கு பதிலாக அவரது புதிய உருவசிலையை இன்று முதல்வர் மம்தா பானர்ஜி   திறந்துவைத்தார். மேலும் வித்தியாசாகர் கல்லூரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 8.5 அடி வித்தியாசாகர் சிலையையும் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரபல கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மேற்குவங்க அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சிலை திறப்பு விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக சின்னங்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். மம்தா பானர்ஜி பேசியதன் விவரம் :

திரிபுராவில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் அங்கிருந்த லெனின் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளை பாஜகவினர் உடைத்தனர். அதேபோல் உத்தரபிரதேசத்தில் சட்டமேதை அம்பேத்கரின் சிலைகள் உடைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக மேற்குவங்கத்தில் அறிஞர் வித்தியாசாகரின் சிலை பாஜகவினரால் உடைக்கப்பட்டது. இந்திய ஜனநாயகத்தின் மீது பாஜக நடத்தும் தாக்குதல் இது.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி மொழி, கலாச்சாரம் மற்றும் பண்பாடு உள்ளது. ஆனால் பாஜகவோ அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்கிறது.

மக்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை மறந்து விட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இது அரசியல் ரீதியான தாக்குதல் ஆகும்.  எந்த மாநிலத்தின் விதியையும் பாஜக தீர்மானிக்க முடியாது.

மேற்குவங்கத்தை குஜராத் போல் மாற்ற பாஜக திட்டமிடுகிறது. நான் சிறைக்கு சென்றாலும் செல்வேனே தவிர அவர்களின் திட்டம் நிறைவேற விடமாட்டேன்.

மக்களவை தேர்தலுக்கு பின் மேற்கு வங்கத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸார் மீதி 2 பேர் பாஜகவினர். இவர்கள் கொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

எந்த உயிரிழப்பும் துரதிஷ்டவசமானது தான். கொல்லப்பட்ட 10 பேரின் குடும்பத்தாருக்கும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து நிவாரணம் வழங்க தலைமை செயலாளரிடம் தெரிவிக்கிறேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

தொடரும் உயிரிழப்பு

மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் தொடர்வதால் மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு 1 மணியளவில் மேற்குவங்கத்தின் 24 பார்கனாக்கள் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாஜகவினர் தான் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் பாஜக இதை மறுத்துள்ளது.  

இந்த தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் திங்கள்கிழமை இரவு சர்போதா கிராமத்தில் பாஜக தொண்டரான 43 வயது சமதுல் தோலோய், ஜெய் ஸ்ரீராம் என்று கூறியதற்காக கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இதுபற்றி போலீசார் எந்த கருத்தையும் கூறவில்லை.