பிரான்ஸ் நாட்டு ஒயினுக்கு எதிராக டிரம்ப் மிரட்டல்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 20:04

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டு ஒயினுக்கு பிரான்ஸ் நாடு அநியாயமாக வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒயின் வகைகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டில் வர்த்தகத் தடைகள் உருவாக்கப்படுவதாக அவர் புகார் கூறினார்.

``அமெரிக்க ஒயினுக்கு பிரான்ஸ் நிறைய வரி விதிக்கிறது. ஆனால் பிரான்ஸ் ஒயினுக்கு நாம் மிகக் குறைவாகத்தான் வரி விதிக்கிறோம்’’ என்று சிஎன்பிசி டி.வி.க்கு பேட்டி அளிக்கையில் டிரம்ப் குறிப்பிட்டார்.

``வரியே இல்லாமல் பிரெஞ்சு ஒயின்கள் அமெரிக்க கடைகளுக்கு விற்பனைக்கு வந்துவிடுவதாக அமெரிக்க ஒயின் உற்பத்தியாளர்கள் புகார் செய்கின்றனர். இது நியாயம் அல்ல. இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். நம்மிடமும் மகத்தான ஒயின் இருக்கிறது’’ என்று டிரம்ப் தெரிவித்தார்.

பிரெஞ்சு ஒயின் உள்பட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஒயின் வகைகளுக்கு அமெரிக்கா விதிக்கும் வரிகள் குறைவு. ஆனால், அமெரிக்க ஒயின் வகைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் விதிக்கும் வரி அதிகம்.

ஐரோப்பிய நாடுகளின் ஒயின்களுக்கு அமெரிக்காவில் ஒரு பாட்டிலுக்கு அதிகபட்சமாக 12.7 சென்ட் வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஒயின்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக  ஒரு பாட்டிலுக்கு 29 சென்ட் வரி  விதிக்கப்படுகிறது.