குண்டுவெடிப்புகள்: அதிபர் சிறிசேனா ஆணையை மீறி இலங்கை நாடாளுமன்ற குழு ஆய்வு தொடர்கிறது

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 19:27

கொழும்பு

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள 3 முக்கியமான தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்து இலங்கை நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தகூடாது என இலங்கை அதிபர் சிறிசேனா கூறியிருந்தார். ஆனால் அவரது உத்தரவை மீறி இலங்கை நாடாளுமன்றக் குழுவின் ஆய்வு தொடர்ந்து நடக்கிறது.

இலங்கை பாராளுமன்ற விசாரணைக் குழுவின் விசாரணை தொடர்ந்து நடந்தால் இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று சென்ற வாரம் இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரித்திருந்தார். ஆனால் அவரது எச்சரிக்கை இன்று நிராகரிக்கப்பட்டது.

இலங்கை நாடாளுமன்ற குழுவின் விசாரணை இன்று தொடர்ந்து நடந்தது இன்றைய விசாரணையின் போது முஸ்லிம் தலைவர்கள் நாடாளுமன்ற குழு முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இலங்கை மேற்கு மாகாண முன்னாள் ஆளுநராக இருந்தவர் ஆசாத் சாலி அவர் இன்றைய விசாரணையின் போது சாட்சியமளித்தார்.

இலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலமுறை அரசின் கவனத்திற்கு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தெரிவித்துள்ளனர் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அதனால் இளைஞர்கள் பலர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்றும் இந்தப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது என்று முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்..

இலங்கை நாடாளுமன்ற குழுவின் விசாரணை தொடருமானால் அது இலங்கை ஒற்றுமைக்கும் இலங்கையின் பாதுகாப்புக்கும் பெருத்த இடையூறாக அமையும் என்று புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை இருப்பதாக சிறிசேன தெரிவித்தார்.

தற்பொழுது பதவியில் உள்ள ராணுவ அதிகாரிகள் அல்லது காவல்துறை அதிகாரிகள் யாரையாவது இலங்கை நாடாளுமன்ற குழு சாட்சியம் அளிக்கும் படி கோரினால் அவர்களை சாட்சியம் அளிக்க கூடாது என்று அதிபர் என்ற வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சிறிசேனா கூறினார்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகராக இருப்பவர் கரு ஜெயசூர்யா. அவருக்கு கடிதம் ஒன்றை இலங்கை அதிபர் சிறிசேனா அனுப்பியிருந்தார். உடனடியாக இலங்கை நாடாளுமன்ற ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளை நிறுத்தும்படி சபாநாயகருக்கு அதிபர் சிறிசேனா கூறியிருந்தார்.

அதிபர் தெரிவித்த கருத்தை ஜெயசூரியா ஏற்கவில்லை. நாடாளுமன்ற குழு ஆய்வு என்பது நாடாளுமன்றத்தின் நடவடிக்கை. அதைத் தடை செய்ய அதிபருக்கு அதிகாரம் இல்லை. எனவே நாடாளுமன்றக் குழுவின் ஆய்வு தொடர்ந்து நடக்கும் என ஜெயசூரியா அதிபர் சிறிசேனாவின் கடிதத்திற்கு பதில் அளித்தார்.

இலங்கை காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரிமைகளுக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே ஆய்வில் கலந்துகொண்டு சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற ஆய்வுக்குழு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினால் அவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு சாட்சியம் அளிக்க வேண்டும். அந்த அழைப்பை ஏற்க முடியாது என அவர்கள் கூற இயலாது என ஜெயசூரியா தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும், இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு இடையே கருத்து ஒற்றுமை இல்லாத காரணத்தினால் பெரும் குழப்பமும் நாடாளுமன்றம் இயங்க முடியாமல் தடைப்பட்டதும் குறிப்பிடத் தகுந்தது.