கைலாஷ் மானசரோவர் யாத்திரை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019 18:33

புது டெல்லி,

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை செல்லும் முதல் அணியின் பயணத்தை வெளியுறவு துறை அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை முறைப்படி துவக்கி வைத்தார்.

இந்திய மக்களுக்கும் சீன மக்களுக்கும் இடையே பரிமாற்றங்களை வளர்ப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் இந்தப் புனித யாத்திரை முக்கிய பங்களிப்பு செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பவனில் நடைபெற்ற யாத்திரை துவக்க நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
சீனாவில் இந்தியத் தூதராக தான் இருந்தபோது, அந்தப் புனித தலத்துக்கு சென்று வந்த தனது தனிப்பட்ட  அனுபவத்தை ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டார்.
1981-ல் இந்தப் புனித யாத்திரை தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு யாத்திரை மீது மக்களின்ஆர்வம் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
லிபுலேக் வழித் தடம் வழியாக யாத்திரை செல்லும் முதல் அணியின் பயணத்தை துவக்கி வைப்பதாக அவர் அறிவித்தார்.

யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தரகாண்ட், சிக்கிம், டெல்லி ஆகிய மாநில அரசுகளும், பல்வேறு அமைச்சகங்களும் அமைப்புகளும் ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்துள்ளன. சீன நாட்டு அரசும்  பெருமளவுக்கு  ஆதரவு அளித்துள்ளது என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்வதற்கு அனுமதி கோரி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு 2,996 விண்ணப்பங்கள் வந்தன. விண்ணப்பித்தவர்களில் 2,256 பேர் ஆண்கள். 740 பேர் பெண்கள். 624 பேர் முதியவர்கள்.

லிபுலேக் வழித்தடம் (உத்தரகாண்ட் மாநிலம்)  வழியாக 18 அணிகள் யாத்திரை செல்கின்றன. ஒவ்வொரு அணியிலும் 60 பேர் இருப்பார்கள்.

நாது  லா வழித்தடம் (சிக்கிம் மாநிலம்) வழியாக செல்லும் யாத்திரையில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 50 பேர் இருப்பார்கள்.

ஒவ்வொரு அணிக்கும் 2 ஒருங்கிணைப்பாளர்கள் உதவி செய்வார்கள்.

யாத்திரை செல்வோருக்கு இந்திய – திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையினர் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் அளிப்பார்கள்.

சீன நாட்டின் திபெத் சுயாட்சிப் பகுதியில், இமய மலைத் தொடரின் ஒரு பகுதியான கைலாய மலைத்தொடரில், 21 ஆயிரத்து 778 அடி (6 ஆயிரத்து 638 மீட்டர்) உயரத்தில் கைலாஷ் மலைச் சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு அருகேதான் மானசரோவர் ஏரி உள்ளது.