ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–6–19

பதிவு செய்த நாள் : 12 ஜூன் 2019

இளை­ய­ராஜா பாடிய பாடல்­கள் – வாதம்!

(சென்ற வாரத் தொடர்ச்சி...)

அந்த அறை ஒரு முதிய மனி­த­ரின் வசிப்­பி­டம். அவர் பெயர், பர­மேஸ்­வ­ரன். இயற்­பி­யல் துறை பேரா­சி­ரி­யர். திரை இசை­யில் மகா கெட்டி. பாக­வ­தர் காலத்து இசை­யி­லி­ருந்து நேற்று வந்­தது வரைக்­கும் இசையை அணுகி அலசி ஆராய்­வ­தில் சமர்த்­தர். இது நடந்­தது 1994 வாக்­கில் என ஞாப­கம்.கட்­டி­லில் அமர்ந்­த­படி பேசிக்­கொண்­டி­ருந்­தார். எதிரே பக்­க­வாட்­டில் நான் எது­வும் பேசா­மல் அமர்ந்­தி­ருந்­தேன். என்­னோடு வந்­தி­ருந்த சிவ­ரா­மன் தன்­னா­லான அளவு முரண்­பட முயன்­றார்.

‘‘இளை­ய­ரா­ஜா­வோட குரல் பாட்டு பாடு­வ­தற்கு ஏற்ற குரலே அல்ல. தன் பிர­ப­லத்தை வேற ஒண்ணா கன்­வெர்ட் பண்­ணிக்­கிட்ட புத்­தி­சா­லித்­த­னம் அவர் சொந்­தக் குர­லில் பாடிய பாடல்­கள். உண்­மையா சொல்­லப் போனா, எல்­லா­ருமே பாட­லாம்ங்­கிற ஒரு சூழ­லையே ஏற்­ப­டுத்­தித் தந்­தது. இளை­ய­ராஜா குர­லில் பாடல்­கள் வெளி­யா­ன­தும் அவை ஹிட் ஆன­துக்­கும் அப்­ப­ற­மாத்­தான்."

அந்த முதி­ய­வர் பேசி­ய­தைக் கண் இமைக்­கா­மல் பார்த்­த­படி இருந்­தேன். சிவ­ரா­மன்  "இளை­ய­ராஜா பாடல்­க­ளைப் பாடு­றது உங்­களை மாதிரி முந்­தைய கால­கட்­டத்தை சேர்ந்த யாருக்­கும் பிடிக்­கி­ற­தில்லே. அதை ஏன் அட்­வாண்­டேஜ் எடுத்­துக்­கி­றதா நினைக்­கி­றீங்க..?"

அதற்கு முதி­ய­வர் "தம்பி சிவ­ரா­மன்.... இதே பாடுற  குரல் இளை­ய­ரா­ஜா­வோ­டதா இல்­லாம வேற ஒருத்­த­ருக்கு இருந்­தி­ருந்தா அவ­ருக்கு பாட சான்ஸ் கிடைச்­சி­ருக்­குமா..? கஷ்­டம்­தான். இளை­ய­ராஜா தனக்­குத்­தானே சான்ஸ் தந்­துக்­க­ற­தால இது நடக்­கு­துன்னு நினைக்கி ­றேன்." கொஞ்ச நேரம் யோசித்த சிவ­ரா­மன் விடா­மல் வாதத்­தைத் தொடர்ந்­தார். "கணக்­குல நூத்­துக்கு நூறு மார்க் வாங்­குற ஒரு பையன் இங்­கி­லீஷ்ல எண்­ப­தும் தமிழ்ல தொண்­ணூ­றும் வாங்­கு­ற­தில்­லையா? அதே பையன் வர­லா­றுல அறு­ப­து­தான் வாங்­கு­றான்னு வைங்க.. அவனை கணக்­குல நூறு வாங்­கு­ன­துக்­கா­கவே ‘‘பர­வா­யில்­லைப்பா’’ ஹிஸ்ட்­ரில முடி­ யறப்போ எழு­பது எண்­பது வாங்­கிக்­க­லாம். ஆனா கணக்­குல என்­னிக்­கும் நூறை விட்­டு­டாதே! சைன்ஸ்­ல­யும் அப்­டியே ஒரு நூறு வாங்­கிடு போதும்’’னு சொல்­றது பிற்­கால பட்­ட­தா­ரி­கா­லக் கல்­வியை அஞ்­சா­வ­து­லே­ருந்து புகுத்­துற மனோ­நி­லை­தான். உண்­மை­யில வர­லா­றுல நூறு வாங்­கு­றது கணக்­கில் வாங்­கு­றதை விடக் கஷ்­டம். அதோட பையனை புற­வ­யமா குறைத்­துக் காட்­டு­றது ஒரு சூட்­சு­மம் இல்­லியா? அந்த மாதி­ரியே இளை­ய­ராஜா இசை­ய­மைப்­பா­ளரா இருந்து நம்­பர் ஒன் ஸ்தானத்தை அடைஞ்சு எண்­ணிக்கை அள­வி­லே­யும் பெரும் வெற்றி பெற்ற படங்­க­ளை­யும் பாடல்­க­ளை­யும் தந்­து­கிட்­டி­ருக்­கி­ற­தால எது­லடா குறை சொல்­ல­லாம்­குற சாக்­கில அவர் சொந்­தக் குரல்ல பாடு­வதை ஒரு கம்ப்­ளெ­யிண்ட்டா மாத்­து­றது உங்­களை மாதிரி ஆட்­க­ளோட புத்­தி­சா­லித் தனம்னு சொல்­ல­லாம் தானே..?’’

நான் அப்­போ­தும் எது­வும் பேசா­மல் கேட்­டுக் கொண்­டி­ருந்­தேன். இறு­தி­யாக பேரா­சி­ரி­யர் தன் பேச்சை முடித்து வைத்­தார். "நான் அதுக்­காக இளை­ய­ரா­ஜா­வோட இசைத்­தி­ற­மை­யைக் குறை சொல்­ல­லேங்க.. எத்­த­னையோ அற்­பு­த­மான குரல் படைச்­ச­வர்­களை எல்­லாம் விட்­டுட்டு என் படம், என் பாட்டு அப்­ப­டீன்னு நூத்­துக்­க­ணக்­கான நல்ல பாடல்­களை இளை­ய­ராஜா தானே பாடிக்­கிட்­ட­து­தான் பிடிக்­க­லேன்னு சொல்­றேன். அதே பாடல்­க­ளோட இசை­யிலே எனக்கு எந்த பிராப்­ள­மும் இல்லை. ஏன் எஸ்.பி. பால­சுப்­ர­ம­ணி­யம், மலே­சியா வாசு­தே­வன், ஜேசு­தாஸ், மனோன்னு எத்­தனை பேர் இருக்­காங்க..? நீங்­களே சொல்­லுங்க.. ஏன் அத்­தனை பாட்டை அவரே பாட­ணும்..?"

இத்­தனை பேசி­யும் அந்த மனி­தனை நான் குறைந்­த­பட்­சம் ஒரு சொல் கொண்­டே­னும் கீறா­மல் இருந்­த­தற்கு ஒரே ஒரு கார­ணம்­தான். ரமேஷ் அண்­ணன் என்னை முன்­னமே எச்­ச­ரித்­தி­ருந்­தார். ‘‘இந்­தாரு.. அவரு பெரிய புரொ­ப­சர்... அந்­தக் காலத்து ஆளு. அவ­ருக்கு இளை­ய­ரா­ஜாவை ஒத்­துக்க மனசே வராது. ஆனா, அவ­ருக்கு இசை பத்­தின பல விஷ­யங்­கள் தெரி­யும். உனக்கு இன்­டி­ரஸ்­டுங்­கு­ற­தா­ல­தான் உன்­னைய அவ­ரோட பேச சொல்­றேன். பிடிக்­காட்டி விட்­டுடு. அவரு பேசி முடிக்­கிற வரைக்­கும் ஒரு வார்த்தை கூட அவ­ரோட நீ பேசக் கூடாது. இது என் உத்­த­ரவு.’’