இளையராஜா பாடிய பாடல்கள் – வாதம்!
(சென்ற வாரத் தொடர்ச்சி...)
அந்த அறை ஒரு முதிய மனிதரின் வசிப்பிடம். அவர் பெயர், பரமேஸ்வரன். இயற்பியல் துறை பேராசிரியர். திரை இசையில் மகா கெட்டி. பாகவதர் காலத்து இசையிலிருந்து நேற்று வந்தது வரைக்கும் இசையை அணுகி அலசி ஆராய்வதில் சமர்த்தர். இது நடந்தது 1994 வாக்கில் என ஞாபகம்.கட்டிலில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார். எதிரே பக்கவாட்டில் நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். என்னோடு வந்திருந்த சிவராமன் தன்னாலான அளவு முரண்பட முயன்றார்.
‘‘இளையராஜாவோட குரல் பாட்டு பாடுவதற்கு ஏற்ற குரலே அல்ல. தன் பிரபலத்தை வேற ஒண்ணா கன்வெர்ட் பண்ணிக்கிட்ட புத்திசாலித்தனம் அவர் சொந்தக் குரலில் பாடிய பாடல்கள். உண்மையா சொல்லப் போனா, எல்லாருமே பாடலாம்ங்கிற ஒரு சூழலையே ஏற்படுத்தித் தந்தது. இளையராஜா குரலில் பாடல்கள் வெளியானதும் அவை ஹிட் ஆனதுக்கும் அப்பறமாத்தான்."
அந்த முதியவர் பேசியதைக் கண் இமைக்காமல் பார்த்தபடி இருந்தேன். சிவராமன் "இளையராஜா பாடல்களைப் பாடுறது உங்களை மாதிரி முந்தைய காலகட்டத்தை சேர்ந்த யாருக்கும் பிடிக்கிறதில்லே. அதை ஏன் அட்வாண்டேஜ் எடுத்துக்கிறதா நினைக்கிறீங்க..?"
அதற்கு முதியவர் "தம்பி சிவராமன்.... இதே பாடுற குரல் இளையராஜாவோடதா இல்லாம வேற ஒருத்தருக்கு இருந்திருந்தா அவருக்கு பாட சான்ஸ் கிடைச்சிருக்குமா..? கஷ்டம்தான். இளையராஜா தனக்குத்தானே சான்ஸ் தந்துக்கறதால இது நடக்குதுன்னு நினைக்கி றேன்." கொஞ்ச நேரம் யோசித்த சிவராமன் விடாமல் வாதத்தைத் தொடர்ந்தார். "கணக்குல நூத்துக்கு நூறு மார்க் வாங்குற ஒரு பையன் இங்கிலீஷ்ல எண்பதும் தமிழ்ல தொண்ணூறும் வாங்குறதில்லையா? அதே பையன் வரலாறுல அறுபதுதான் வாங்குறான்னு வைங்க.. அவனை கணக்குல நூறு வாங்குனதுக்காகவே ‘‘பரவாயில்லைப்பா’’ ஹிஸ்ட்ரில முடி யறப்போ எழுபது எண்பது வாங்கிக்கலாம். ஆனா கணக்குல என்னிக்கும் நூறை விட்டுடாதே! சைன்ஸ்லயும் அப்டியே ஒரு நூறு வாங்கிடு போதும்’’னு சொல்றது பிற்கால பட்டதாரிகாலக் கல்வியை அஞ்சாவதுலேருந்து புகுத்துற மனோநிலைதான். உண்மையில வரலாறுல நூறு வாங்குறது கணக்கில் வாங்குறதை விடக் கஷ்டம். அதோட பையனை புறவயமா குறைத்துக் காட்டுறது ஒரு சூட்சுமம் இல்லியா? அந்த மாதிரியே இளையராஜா இசையமைப்பாளரா இருந்து நம்பர் ஒன் ஸ்தானத்தை அடைஞ்சு எண்ணிக்கை அளவிலேயும் பெரும் வெற்றி பெற்ற படங்களையும் பாடல்களையும் தந்துகிட்டிருக்கிறதால எதுலடா குறை சொல்லலாம்குற சாக்கில அவர் சொந்தக் குரல்ல பாடுவதை ஒரு கம்ப்ளெயிண்ட்டா மாத்துறது உங்களை மாதிரி ஆட்களோட புத்திசாலித் தனம்னு சொல்லலாம் தானே..?’’
நான் அப்போதும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். இறுதியாக பேராசிரியர் தன் பேச்சை முடித்து வைத்தார். "நான் அதுக்காக இளையராஜாவோட இசைத்திறமையைக் குறை சொல்லலேங்க.. எத்தனையோ அற்புதமான குரல் படைச்சவர்களை எல்லாம் விட்டுட்டு என் படம், என் பாட்டு அப்படீன்னு நூத்துக்கணக்கான நல்ல பாடல்களை இளையராஜா தானே பாடிக்கிட்டதுதான் பிடிக்கலேன்னு சொல்றேன். அதே பாடல்களோட இசையிலே எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை. ஏன் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ், மனோன்னு எத்தனை பேர் இருக்காங்க..? நீங்களே சொல்லுங்க.. ஏன் அத்தனை பாட்டை அவரே பாடணும்..?"
இத்தனை பேசியும் அந்த மனிதனை நான் குறைந்தபட்சம் ஒரு சொல் கொண்டேனும் கீறாமல் இருந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். ரமேஷ் அண்ணன் என்னை முன்னமே எச்சரித்திருந்தார். ‘‘இந்தாரு.. அவரு பெரிய புரொபசர்... அந்தக் காலத்து ஆளு. அவருக்கு இளையராஜாவை ஒத்துக்க மனசே வராது. ஆனா, அவருக்கு இசை பத்தின பல விஷயங்கள் தெரியும். உனக்கு இன்டிரஸ்டுங்குறதாலதான் உன்னைய அவரோட பேச சொல்றேன். பிடிக்காட்டி விட்டுடு. அவரு பேசி முடிக்கிற வரைக்கும் ஒரு வார்த்தை கூட அவரோட நீ பேசக் கூடாது. இது என் உத்தரவு.’’