நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சினேகா, மணிவண்ணன், விவேக், தேவதர்ஷினி மற்றும் பலர்.
இசை: வித்யாசாகர், ஒளிப்பதிவு: ஆர். திவாகரன், எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு: டி.ஜி. தியாகராஜன், திரைக்கதை, இயக்கம்: கரு. பழனியப்பன்
பார்த்திபன் (ஸ்ரீகாந்த்) மார்கெட்டிங் எக்ஸக்யூட்டிவாக பணிபுரியும் ஒரு கனவு இளைஞன். நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதில் விருப்பமாக இருப்பவருக்கு தனது திருமணத்தைப் பற்றி ஒரு கனவு உண்டு. பெற்றோர் நிச்சயிக்கும் திருமணத்தில் நம்பிக்கையின்றி தனது விருப்பங்களுக்கு ஏற்ற பெண்ணிற்காக காத்திருக்கிறார். ஒரு நாள் தனது கனவு நாயகியை (சிநேகா) பார்க்கிறார். அவரை தினந்தோறும் பின் தொடர்ந்து அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்கிறார். இருவரது ரசனைகளும் ஒத்து போகவே அவரை தனக்குள்ளேயே காதலிக்கத் தொடங்குகிறார். இதற்கிடையே பெற்றோரின் வற்புறுத்தலுக்காக பெண் பார்க்க மணிவண்ணன் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மணிவண்ணனின் மகள் சத்யாதான் (சிநேகா) அவரது காதலி. தனது காதலியே மனைவியாக வருவதையறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்.
இருவருக்கும் சிறப்பாக திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்து வீடு திரும்பும் வழியில், தினந்தோறும் பின்தொடரும் இடத்தில் அவரது காதலியை பார்க்கிறார். அப்போதுதான், தான் மணந்திருப்பது தனது காதலியைப் போன்ற தோற்றம் கொண்ட சத்யாவை என்று புரிந்து கொள்கிறான்.
தன் காதலியை தேடி அவளது அலுவலகத்திற்கு சென்று விசாரிக்கிறான். அவள் பெயர் ஜனனி (சிநேகா) என்றும், வேறு ஊரிலிருந்து பணி தொடர்பாக தற்காலிகமாக இங்கு வந்திருப்பதும் தெரியவருகிறது. ஏமாற்றமடையும் பார்த்திபன், மனைவி சத்யாவிடமிருந்து விலகியே இருக்கிறான். மிகுந்த பொறுமையும், அன்பும் உடைய சத்யா, பார்த்திபன் ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து கொள்கிறாள்.
பார்த்திபனின் நண்பன் மனோ (விவேக்), சத்யாவின் நல்ல மனதை எடுத்துக்கூறி அவளை ஏற்றுக்கொள்ளுமாறும், பார்த்திபனின் தவறான கணிப்பால் அவளை வருந்தவைக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறுகிறான். சிறிது சிறிதாக சத்யாவின் அன்பிலும் கலைரசனையிலும் பார்த்திபனின் மனம் மாறத்தொடங்குகிறது. அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் ஜனனி இவர்களின் எதிர் பிளாட்டிற்கு குடிவருகிறாள். சத்யாவும், ஜனனியும் ஒருவரையொருவர் கண்டு ஆச்சரியப்படுவதோடு நல்ல தோழிகளாகவும் மாறுகிறார்கள். குடும்பத்தார் அனைவரும் ஜனனியைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்.
பார்த்திபன் ஜனனியை முன்னரே தெரிந்ததாக காட்டிக்கொள்ளாமல் அவளோடு நட்பாக பழகுகிறான். மனோவுக்கு மறுபடியும் பார்த்திபனின் மனம் ஜனனியிடம் போய்விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது. ஜனனியிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி பிரச்னையை முடிக்க நினைக்கும் மனோ, ஜனனி என்று நினைத்து சத்யாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறான். ஜனனியின் நாகரீக உடையிலிருக்கும் சத்யா, தன் கணவனின் முந்தைய காதல் தெரிந்ததும் உடைந்து விடுகிறாள். தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுகிறாள். பார்த்திபனை கோயிலில் சந்திக்கும் ஜனனி தன் மேல் இருக்கும் காதலை பற்றி கேட்கிறாள். முன்பு ஜனனியை விரும்பியது உண்மைதான், ஆனால் தனது மனைவி சத்யாவின் காதலே தனக்கு வேண்டும் என்றும், அவள் தனது உண்மை அன்பு புரிந்து வரும் வரை காத்திருக்கப் போவதாகவும் பார்த்திபன் கூறுகிறான். சத்யாவிற்கு உண்மையை புரிய வைப்பதற்காக ஜனனி செய்த ஏற்பாடுதான் இந்த சந்திப்பு. தனது கணவர் தன்னை மட்டுமே விரும்புவதை உணரும் சத்யா அவனை அணைத்துக் கொள்ள, அனைவரது குழப்பங்களும் தீர்கின்றன. ஜனனி தனது ஊருக்கு திரும்ப மனமொத்த தம்பதியாய் பார்த்திபனும், சத்யாவும் அவளுக்கு விடை கொடுக்கிறார்கள்.
அதிரடி ஆக்க்ஷன் படங்களுக்கு மத்தியில் அழகான, அமைதியான படமாக வெளிவந்து வெற்றி பெற்றது 'பார்த்திபன் கனவு.' நாயகியாக ஜோதிகாவை நினைத்திருந்த இயக்குநர், அவரது தேதிகள் கிடைக்காத காரணத்தால் சிநேகாவை நாயகியாக்கினார். முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்த சிநேகாவும், தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.
தெளிவான காதல் காட்சிகளுக்கு இடையே விவேக், தேவதர்ஷினி மற்றும் நண்பர்களின் காமெடி படத்தை சுறுசுறுப்பாக்கி யது. தெலுங்கில் 'அம்மாயி பாகுந்தி' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'மஞ்சு பெய்யும் முன்பே' என்ற பெயரிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது.
2003-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் பலவற்றை படம் பெற்றது.
சிறந்த இயக்குநர் – கரு. பழனியப்பன், சிறந்த நடிகர் – ஸ்ரீகாந்த், சிறந்த நகைச்சுவை நடிகர் – விவேக், சிறந்த நகைச்சுவை நடிகை – தேவதர்ஷினி, சிறந்த பாடலாசிரியர் – கபிலன் (ஆலங்குயில்), சிறந்த பாடகி – ஹரிணி (ஆலங்குயில்). வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேனாய் இனித்தன.