இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு : அதிபரிடம் இறுதி விசாரணை அறிக்கை சமர்பித்தது விசாரணை கமிட்டி

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019 20:48

கொழும்பு,

   இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த 3 பேர் கொண்ட விசாரணை கமிட்டி தனது இறுதி அறிக்கையை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிடம் இன்று ஒப்படைத்தது.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையின் 3 தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு விடுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. அதேசமயம் இந்த தாக்குதலை நடத்தியது உள்ளூர் இஸ்லாமிய அமைப்பான தேசிய தவீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

இந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விசாரிக்க இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் அமைச்சரவை செயலாளர் பத்மஸ்ரீ ஜெயாமன்னா மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் என்.கே.இலங்காகோன் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த ஏப்ரல் 22ம் தேதி இந்த விசாரணை கமிட்டியை நியமித்தார்.

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விரிவான விசாரணை நடத்திய மூவர் கமிட்டி இன்று தனது இறுதி அறிக்கையை இலங்கை அதிபர் சிறிசேனாவிடம் ஒப்படைத்தது. விசாரணை அறிக்கையின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.