இலங்கையில் குண்டுவெடிப்புக்குப் பின் முஸ்லிம் மக்களுக்கு அநீதி: தமிழர் தலைவர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019 20:47

கொழும்பு,

   இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புக்குப் பிறகு, சிறுபான்மை சமூகத்தினரான முஸ்லிம் மக்களுக்கு எதிராக அநீதி  இழைக்கப்படுகிறது என்று தமிழர் தலைவரும், இலங்கை வடக்கு மாநில முன்னாள் முதல்வருமான சி.வி. விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முஸ்லிம்கள் இலங்கை சமுதாயத்தின் ஒரு பகுதி ஆவார். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி அவர்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

ராஜினாமா செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நாட்டில் சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு தவறிவிட்டது.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாக்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு விக்னேஸ்வரன் கூறினார்.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி, ஈஸ்டர் ஞாயிறு பண்டிகையின்போது, கிறிஸ்தவ தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும்  தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பிறகு, தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்டிஜே) அமைப்புடன் தொடர்புடையவர்களோடு சேர்த்து, ஏராளமான முஸ்லிம்கள் விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடை  செய்யப்பட்ட என்டிஜே அமைப்புடன் தொடர்பு இருக்கலாம்  என்ற குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக, இலங்கை அரசில் இடம் பெற்றிருந்த 9 முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த வாரம் ராஜினாமா செய்தனர்.