அமெரிக்காவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் மீது கிரேன் விழுந்து விபத்து: பெண் ஒருவர் பலி

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019 19:49

டலாஸ்,

   அமெரிக்காவில் வீசிய  பலத்த காற்றால் கிரேன் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பின் மீது சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் மோசமான வானிலை நிலவி வருகிறது. நேற்று அங்கு பலத்த சூறாவளி காற்று வீசியது.

இந்நிலையில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இருந்த கிரேன் ஒன்று பலத்த சூறாவளி காற்றினால் 5 மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது சாய்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த குடியிருப்பில் இருந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

.