பெரிய தொழில் நிறுவனங்களுடன் சிறு தொழில் நிறுவனங்களை இணைக்க மத்திய அரசு திட்டம்

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019 17:10

காந்திநகர்

பெரிய தொழில் நிறுவனங்களுடன் தொழில் அடிப்படையில் குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் நிறுவனங்களை இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவ ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஒரு உதவி மையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய அளவிலான உதவி மையங்கள் சிறுதொழில் நிறுவனங்கள் வர்த்தக அரங்கில் போட்டியிடும் திறனை பெற உதவி செய்யும். அதன் மூலம் பெரிய நிறுவனங்களுடன் சிறிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும் என மத்திய அரசின் எம்எஸ்எம்இ அமைச்சக கூடுதல் செயலாளர் ராம் மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.

குஜராத் மாநில தலைநகரான ராம்நகரில் மத்திய எம்எஸ்எம்இ வளர்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தொழில் முனைவு வளர்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து கருத்தரங்கு ஒன்றை நடத்தின. இந்தக் கருத்தரங்கில் பேசும்பொழுது ராம்மோகன் மிஸ்ரா ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உதவ மையம் ஒன்றை நிறுவ மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறினார்.

இந்திய தொழில் துறையில் மக்களுக்கு தேவையான பொருள்களை வினியோகம் செய்கின்ற சங்கிலித்தொடரின் அடி நிலையில் இருப்பவை சிறு தொழில் நிறுவனங்கள். அவற்றை பெரிய நிறுவனங்களுடன் சிக்கல் இல்லாமல் இணைப்பதன் மூலம் அந்த சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி திறன் மேம்படும், உற்பத்தி தரமும் உயரும். அதன் காரணமாக அந்த சிறு தொழில் நிறுவனங்கள் வர்த்தக அரங்கில்  விற்பனை விலை குறைய வாய்ப்பு ஏற்படும், அதன பலனாக சிறு தொழில் நிறுவனங்கள் போட்டியிடும் திறனை பெறும் என ராம்மோகன் மிஸ்ரா கூறினார்.

தொழில்துறை சந்தையில் பல சேவைகள் விற்பனைக்கு தயாராக கிடைக்கின்றன. ஆனால் இது பற்றி மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது. தகவல்களை வெளியிடுவதற்கும் சிறிய தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகள் என்ன என்று கண்டறிவதற்கும் ஊராட்சி ஒன்றிய அளவில் மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் சிறு தொழில் நிறுவனங்களை ஒரு குழுத் தொழில் நிறுவனங்களாக ஒருங்கிணைப்பதுதான் என ராம்மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.

ஜனநாயக நாட்டில் சந்தைகள் தங்களுக்கு உரிய வேகத்தில் இயங்குகின்றன. எனவேதான் சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வது அவசியம் என மத்திய அரசு முடிவு செய்தது. இவ்வாறு உதவி செய்வதன் மூலம் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி செலவைக் குறைக்க முடியும். அவற்றின் உற்பத்தி தரத்தை அதிகரிக்க முடியும். இந்நிலையில் சிறு தொழில் நிறுவன்ங்களின் உற்பத்திப் பொருள்களை சந்தை ஏற்றுக்கொள்ள எந்த தடையும் இருக்காது என ராம் மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.

சிறுதொழில் நிறுவனங்களுக்கு ஏழு விஷயங்களில் அவற்றின் திறனை மேம்படுத்த மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த ஏழு விஷயங்களும் வருமாறு:

ஒன்று: சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறனை வளர்த்தல் மற்றும் மேம்படுத்துதல்

இரண்டு: சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான அறிவுத்திறன் சேவைகளை வழங்குதல்

மூன்று: சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி கிடைக்கச் செய்தல்,

நான்கு: சிறுதொழில் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பம் மேம்பாடு,

ஐந்து: சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,

ஆறு: சிறுதொழில் நிறுவனங்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்க வகை செய்தல்.

ஏழு: சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் சிக்கலின்றி ஆக இயங்க வகை செய்தல்.

இந்த 7 விஷயங்களிலும் சிறு தொழில்களின் திறன்கள் மேம்படுத்தப்பட்டால் சிறுதொழில்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறைந்துவிடும், அபாயங்கள் குறையும் பட்சத்தில் வங்கிகள் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதிஉதவிகளை வழங்க முன்வரும் என எம்எஸ்எம்இ அமைச்சக கூடுதல் செயலாளர் ராம் மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.