முருகனின் முதல் கற்கோயில்!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகில் கண்ணனுாரில் முருகனின் முதல் கற்கோயிலான பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது.

தல வரலாறு: 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. முருகனின் வாகனமான மயிலுக்கு பதில் யானை இருப்பது இதன் பழமையை உணர்த்துவதாகும். சங்க இலக்கியங்களில் முருகனின் வாகனமாக யானை இடம்பெற்றுள்ளது.

மூலவர் பாலசுப்பிரமணியர் கிழக்கு நோக்கிய நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நான்கு திருக்கரங்களில், வலது மேல் கையில் திரிசூலம் உள்ளது. வலது கை அபயஹஸ்தமாக பக்தருக்கு அடைக்கலம் அளிக்கிறது. இடது மேல் கை ஆயுதம் ஏந்தியும், இடது கை இடுப்பில் ஊன்றியும் உள்ளன. இரண்டு தோள்களில் குறுக்காக ருத்ராட்ச மாலை, கால்களில் தண்டையும் உள்ளன.

வாசல் முதல் விமான கலசம் வரை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளிலும் யானைகள் உள்ளன. கருவறை சுவரிலுள்ள துாண்கள், பூதகணங்கள், மேற்கூரைகள் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்தில் மயில்வாகன முருகன் சன்னிதி உள்ளது.

இவரது சிலை பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதும். கோயிலுக்கு வெளியே தட்சிணாமூர்த்தி இருக்கிறார்.

வியாழக்கிழமையில் முருகனுக்கு பால், பஞ்சாமிர்த அபிேஷகம் செய்து தினைமாவு படைத்து வழிபட நினைத்தது நிறைவேறும். கருவறைக்கு நேராக பலகணி என்னும் கல் ஜன்னல் இருப்பதால் வாசல் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களை குறிக்கும் விதத்தில் ஜன்னலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன. இதன் வழியே முருகனை தரிசிக்க கிரகதோஷம் நீங்கும்.

தொல்லியல் துறையின்கீழ் செயல்படும் இக்கோயில், தமிழகத்தின் கலைச்சின்னமாக திகழ்கிறது.

இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22 கி.மீ., அங்கிருந்து துார்வாசபுரம் சாலையில் 2 கி.மீ.,

விசேஷ நாட்கள்: வைகாசி விசாகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை,

நேரம்: காலை 10.30 -– 11.30 மணி.

அருகிலுள்ள தலம்: 2 கி.மீ., துாரத்தில் துார்வாசபுரம் காலபைரவர் கோயில்.