வாகன விபத்துகளை தடுக்கும் அருட்காப்பு!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

‘அருட்பேராற்றல் இரவும், பகலும்

எல்லா நேரங்களிலும் எல்லா

இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும்

உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும்

வழிநடத்துவதாகவும் அமையுமாக!’

மக்களுக்கு – விபத்துகளை தடுக்க ஒரு அருமையான அருட்காப்பு இது. இதனை தினமும் சொல்லி வந்தால் வாகனங்களால் வரும் விபத்துகளையும் மற்றும் தீ விபத்துகளையும் தடுக்கலாம். இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் முதியோர் வரை (பெண்கள் உட்பட) இரண்டு, நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களிலும் பல ஊடகங்கள் மூலமாகவும் பல விபத்துகளையும், பேரிழப்புகளையும் பார்த்து அதிர்ச்சியடைகிறோம். இதனை தவிர்க்க வேதாத்திரி மகரிஷி ஓர் எளிய காப்பு சொல்லி வந்தாலே போதும் என்றும், விபத்துகளை தடுக்கவும் முடியும் என்றும் சொல்லியுள்ளார். எந்த வாகனத்தை ஓட்டினாலும் ஓட்டுபவர்கள் கைபேசி பேசிக் கொண்டு போவதை தவிர்க்க வேண்டும். குடிபோதையிலும் வாகனங்களை எடுக்கக்கூடாது. (இது மிகவும் குறிப்பிடத்தக்கது.) மேலும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் தலைக்கவசம் அணிந்து செல்வது மிகவும் நல்லது.

வாகனங்களை ஓட்டும் முன்பு இந்த அருட்காப்பை சொல்லி விட்டு எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடனேயே இதனை சொல்லி வந்தால் நல்லது. முக்கியமாக, வாகனங்கள் எடுக்கும் முன் மூன்று முறை சொல்லி விட்டு எடுத்தால், விபத்துகள் தவிர்க்கப்படும். வீட்டில் பெண்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பும் போது சொல்வது நல்லது. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் திரும்பும் போதும் இந்த காப்பை சொல்லி வழியனுப்பி வைத்தால், அவர்களுக்கும் இந்த விபத்து வர சந்தர்ப்பம் கிடையாது. விபத்தை தவிர்க்கலாம். இந்த அருட்காப்பு நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. பல மன்றங்கள், பல இடங்களில் வந்து விட்டதால் இதை சொல்லி பலன் அடைந்திருப்பார்கள். தெரியாதவர்கள் இதை கடைப்பிடித்து விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம்.