ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

* கண் அறுவை சிகிச்சை செய்யும் முன் எந்தவிதமான நேர்த்திக்கடன் வேண்டிக்கொள்ளலாம்? எஸ். அழகிரிசாமி, நெல்லை.

கண்மலர் வெள்ளி அல்லது தங்கத்தில் செய்து காணிக்கையாக செலுத்துவதாக குலதெய்வத்துக்கு வேண்டிக்கொள்ளலாம்.

* பிள்ளையாருக்கு சிதறுகாய் போட்டால் யார் சாப்பிடலாம்? எஸ். கனகவள்ளி, தேவனாம்பட்டினம்.

காணிக்கையாக செலுத்தும் மற் றைய பொருட் கள் எப்படி உபயோகிக்கப்படுகின்றனவோ, அதுபோல்தான் சிதறுகாயும். விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.

* நினைத்தது விரைவில் நிறைவேற எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? அரு. நாச்சம்மை, நெல்லை.

நினைக்கும் காரியத்தைப் பொறுத்த விஷயம் இது. கல்வி சம்பந்தப்பட்டது என்றால் சரஸ்வதி, பணம் சம்பந்தப்பட்டது என்றால் லட்சுமி, எதிரிகள் தொல்லைக்கு சரபர் நரசிம்மர் மற்றும் துர்க்கை, தடைகள் நீங்க பிள்ளையார், எதிலும் வெற்றி பெற முருகப்பெருமான், திருமணத்தடை நீங்க கல்யாணசுந்தரர்  என ஒவ்வொன்றுக்கும் எண்ணியதை விரைவில் நிறைவேற்றிக்கொள்ள வகைசெய்துள்ள பெருமையுடையது இந்து மதம்.

* முருகப்பெருமானுக்கு எத்தனை பெயர்கள் இருக்கின்றன....? ஈ.எம். ராமபத்திரன், செங்கோட்டை.

‘ஞானசக்திதரன்’ முதலிய பதினாறு பெயர்களையும் அதற்கான உருவம், மந்திரம் முதலிய செய்திகளையும் ஆகம சாத்திரங்கள் கூறியுள்ளன. இதுவல்லாமல் சிற்பசாத்திரங்கள் முருகனை இன்னும் நிறைய வடிவங்களில் அழகுபடுத்துகின்றன. மேலும், நூற்றியெட்டு ஆயிரத்தெட்டு என அர்ச்சனைகளிலும் பெயர்கள் உள்ளன. எவ்வளவு இருந்தாலும் தமிழ்கூறும் ‘முருகன்’ என்ற அழகுச்சொல்லில் எல்லாம் அடங்கும்.