அலைகள்!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

எங்கள் இதயம் திறந்தே கிடக்கிறது.

இது திறந்து கிடக்கிறது என்பதாலேயே காளான்கள் முளைக்கவோ, கருநாகங்கள் குடிபுகவோ அனுமதிக்க மாட்டோம்.

செழித்துக் கிடக்கும் பூமியென்றாலும், பிறருடைய பூமி எங்களுக்கு வேண்டாம்.

புல் முளைக்காத கட்டாந்தரை என்றாலும், எங்கள் நிலத்தை யாருக்கும் விடமாட்டோம்.

எங்களால் முடிந்த போதிலும் நாங்கள் யார் மீதிலும் ஆதிக்கம் செலுத்தமாட்டோம்.

எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்போரை இடுகாட்டிற்கு அனுப்பி வைப்போம்.

சமதர்ம சமுதாயத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்.

அந்த சமதர்மத்தை நாங்களே ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இன்னொரு ஆதிக்கத்தின் மூலம் அந்த சமதர்மம் ஏற்படுமென்றால், அந்த தத்துவத்தையே எதிர்த்து போரிடத் தயங்கமாட்டோம்.

துப்பாக்கிமுனையிலே தரப்படும்  பணியாரங்களை விட, நாங்களே விரும்பி ஆக்கிக் கொள்ளும் கூழ் இனிமையானது.

கொல்லாமையையே அறமாகக் கொண்ட நாங்கள் சில கொலைகளையும் செய்ய விரும்புகிறோம்.

காட்டி கொடுப்பவர்கள் எவ்வளவு பெரிய வடிவத்தில் இருந்தாலும், அவர்களுக்கு நாங்கள் மரண தண்டனை அளிப்போம்.

போர்க்களத்தில் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் வேலையில்லை. அங்கே உணர்ச்சி ஒன்றுதான் பிரதானம்.

நாங்கள் முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டு விட்ட தலைவன் எங்களுக்கு தப்பான வழியையே காட்டினால் கூட, அந்த வழியிலேயே செல்லத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.

எங்களை சுற்றி யார் தலைவன் என்ற கேள்வியை, குறியை நாங்கள் போட்டுக் கொள்ளவில்லை.

அயோக்கியர்கள் பலர் கூடிப் போடும் திட்டங்களைவிட, அறிவுள்ள ஒரு தலைவனின் வார்த்தையையே நாங்கள் சட்டமாக மதிக்கிறோம்.

நாங்கள் யாரை மதிக்கிறோமோ, அவர்களை கொண்டே எங்கள் வாழ்வையும், தாழ்வையும் நிர்ணயித்து கொள்வோம்.

முப்பது கோழிக்குஞ்சுகளின் இருதயங்களை விட ஒரு சிறுத்தையின் கால் நகம் பலம் பொருந்தியது.

கூட்டம் கூட்டமாக முளைத்து விட்டதாலேயே கள்ளிச் செடி காய்கறியாவதில்லை.

ஒற்றை மரமாக நின்றால் கூட வாழை மரத்தின் எந்த அங்கமும் வீணாவதில்லை.

வெறும் வார்த்தைகளாலேயே மாளிகையை கட்டிக் கொண்டவர்கள் விரைவில் அந்த மாளிகை இடிந்து விழுவதை காண்பார்கள்.

அடிப்படையை பலமாக போட்டு, சிறிய கட்டடம் கட்டிக் கொண்டவர்கள், கால காலங்களுக்கு அதிலே நிறைந்து வாழ்வார்கள்.

நாங்கள் பலமான அடிப்படையில் எழுந்து நிற்கிறோம்.

எங்கள் கட்டடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெளிவாக தெரியும் வரை எங்கள் விழிகள் இமைகளை தொடமாட்டா.

நாங்கள் இயற்கையின் சட்டத்தை நம்பி இருக்கின்றோம்.

அது என்றும் எவரையும் கைவிட்டதில்லை.

கவிஞர் கண்ணதாசனின் ‘அலைகள்’ நூலிலிருந்து...