எது பெரியது?

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

ஒரு மனிதன் தன்னோட லட்சியத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால்,  அவனுடைய தீவிர ஈடுபாடு அதில்தான் இருக்க வேண்டும். ஒன்றைப்பற்றி தெரிந்துகொள்ள அதை ஊடுருவி பார்க்கும் பொழுதுதான் நமக்கு அதன் உண்மை சொரூபம் தெரியும். அப்பொழுதுதான் எளிதில் அந்த விஷயத்தில் தெளிவு பெறமுடியும். அது ஒரு வகையில் வெற்றிக்கான வழிமுறைதான்!

இதற்கு உதாரணமாக ஒரு கதை உண்டு. ஆன்மிக ஈடுபாடுள்ள ஒருவர் கடவுளை நேரில் பார்க்க வேண்டுமென்று தீவிரமாக அலைந்து கொண்டிருந்தார். கிட்டத்தட்ட நம் விவேகானந்தர் மாதிரி அவர் தானே ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் கடவுளை நேரில் பார்க்க முடியுமா என்று கேட்டார். அது போல இவரும் பல மகான்களிடம் அதற்கான வழிமுறை கேட்டார். எல்லாரும் போகாத ஊருக்குத்தான் வழி சொன்னார்கள். கடைசியாக, விஷயம் தெரிந்த ஒரு ஞானியிடம் வந்து வழக்கம் போல கேட்டார். அந்த ஞானி இந்த ஆசாமியோட குழப்பத்தை தீர்த்து தெளிவுபெறச் செய்வதென முடிவு பண்ணினார். அதனால் அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். ‘‘இறைவனை விட மேலானது எது?’’ ஆசாமி முழித்தார். அப்பொழுது ஞானி சொல்கிறார், இதே போல திடீரென நாராயணருக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. நாரதரை கூப்பிட்டு, ‘‘பஞ்சபூதங்களில் முக்கியமானது எது நாரதரே?’’ என்று கேட்டார்.  அவரும், ‘‘தண்ணீர்தான்... அதுதான் பூமியில் முக்கால் பகுதி இருக்கிறது. கால் பகுதிதான் நிலம்’’ என்று சொன்னார்.

‘‘ஆனால்... அந்த கடலையே ஒரே மடக்கில் குடித்துவிட்டாரே அகத்தியர்... அப்போது அகத்தியர் உயர்ந்தவரா? தண்ணீர் உயர்ந்ததா?’ என்று கேட்க, நாரதரும் அகத்தியர்தான் என்று சொன்னார்.

‘‘அந்த அகத்தியரே ஆகாயத்தில் ஒரு சின்ன நட்சத்திரமாகத்தான் ஒளி வீசுகிறார். அகத்தியர் பெரியவரா? ஆகாயம் பெரிதா?’’ என்று நாராயணர் கேட்க, நாரதரும் ‘‘ஆகாயம்தான் பெரியது’’ என்று சொன்னார்.

‘‘ஆகாயம் பெரிது என்றால்.. மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்று அடி நிலம் தானமாக கேட்ட வாமனர் முதல் அடியில் இந்த பூவுலகை அளந்தார். இரண்டாவது அடியில் ஆகாயத்தையே அளந்தார். மூன்றாவது அடிக்கு மாபலி மன்னன் தன் தலையை காட்டினார்’’ என்று கூறினார்.

‘ஆகா... ஆகாயத்தை விட இறைவனின் திருவடியே பெரிது சாமி... திருவடி மட்டுமே ஆகாயத்தை அளந்தால் இறைவனது முழு உருவம் எப்படி இருக்கும் என்று யோசித்தாலே மயக்கம் வரும். அதனால் கடவுள்தான் பெரியவர்’ என்று சொன்னார் நாரதர்.

அப்படிப்பட்ட அந்த கடவுளே.. ஒரு இடத்தில் சிறைப்பட்டிருக்காரே என்று நாராயணர் கேட்க... நாரதர் குழப்பமாக ‘‘எங்கே சாமி?’’ என்று கேட்க,  அடியவர்கள் இதயத்தில் ஆண்டவன் சிறைப்பட்டிருக்கிறானே?’’ என்று சொல்ல, இப்போது எதிரில் நின்றிருந்த ஆசாமி... தானும் ஒரு சாமி என்கிற உண்மையை புரிய ஆரம்பித்தார்.  அப்போது ஞானி அவரிடம், ‘‘நீங்கள் இவ்வளவு காலம் நேரில் பார்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்த  கடவுள் நம் இதயத்தில்தான் குடிகொண்டு இருக்கிறார். எந்த வடிவில் தெரியுமா? அன்பு வடிவில் தெய்வம் இருக்கிறது. அதை நீ பார்க்கலாம். அந்த அன்புதான் ‘கடவுள்’என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். அன்பாய் இருந்தால் ஆனந்தம் கிடைக்கும். அதுதான் ஆண்டவன் தரிசனம்’’ என்று ஞானி சொன்னார்.

ஆசாமி தெளிவாகிவிட்டார்.  லட்சியத்தில் வெற்றி பெற தீவிர ஈடுபாடு வேண்டும் என்று சொல்வது அந்த லட்சியத்தையே ஊடுருவிப் பார்க்கும் போது அதனுடைய உண்மை சொரூபம் எளிதில் நமக்கு தெரியும். லேப் டெஸ்ட் மாதிரி...