ஆன்மிக தாகம் தீர்க்கும் களக்காடு கேசவனேரி அதிசய அவ்லியா பாச்சா முஹ்யித்தீன் (ரழி) வலியுல்லாஹ்!

பதிவு செய்த நாள் : 11 ஜூன் 2019

வலிமார்கள் இவ்வுலக மக்களால் போற்றப்பட்டாலும், போற்றப்படாமல் போனாலும் அவர்களது ‘கராமத்’ இவ்வுலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. நெல்லை, களக்காடு ‘கேசவநேரி’ என்ற ஊரில் எந்தவித அடையாளமும் இன்றி, அதே சமயத்தில் தன்னை நாடி வருபவர்களின் குறைகளை தீர்த்து வாழ்ந்து வரும் ‘அல்லாஹ்வின் ஒளி’ என போற்றப்படும் ‘‘பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி’’ அவர்களது தர்கா சிறந்த உதாரணமாக திகழ்வதாக நெல்லை மக்கள் புகழ்கின்றனர். நெல்லையில் இருந்து மேலப்பாளையம் வழியாக களக்காடு செல்லும் வழியில் அமைந்துள்ள கேசவநேரி ‘இனாம் கேஸ்னரி’ என்று மருவி அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமை பரப்ப அரபு நாடுகளிலிருந்து பல்லாயி ரக்கணக்கான இஸ்லாமிய மார்க்கப்பெரியார்கள் இந்தியாவுக்கு வந்தனர். அந்த வகையில் கேரளா வழியாக, நெல்லைக்கு இஸ்லாம் மார்க்கத்தை பரப்ப வந்த ஆன்மிகப் பேரொளிதான் பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ் (ரஹ்). நெல்லை களக்காட்டுக்கு வந்து அல்லாஹ்வின் அருளால் பல அதிசயங்களை நிகழ்த்தினார்கள். அவர்களது ஆன்மிக சொற்பொழிவைக் கேட்டு ஏராளமான பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். தக்கலை ஞானமாமேதை பீர் முஹம்மது அப்பா (ரழி), நாகூர் ஆண்டகை கருணைக்கடல் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரழி) வாழ்ந்த காலத்தில் பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ் வாழ்ந்ததாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.

எப்போதும் இறைக்காதலிலேயே லயித்துப்போன பாச்சா மொய்தீன் வலியுல்லாஹ், எந்நேரமும் அல்லாஹ்வை நினைத்தே வழிபட்டு வந்தார்கள். களக்காட்டில் உள்ள உயரமான மலை உச்சிக்கு சென்று தவம் இருந்தார்கள். அவர்கள் தவம் இருந்த நாட்கள் ஒரு நாள், இரண்டு நாட்கள், ஒரு மாதம் அல்ல. இரண்டாயிரத்து ஐநுாற்று ஐம்பத்தைந்து நாட்கள். அதாவது ஏழு ஆண்டுகள். அந்த நாட்கள் முழுவதும் ஊண், உறக்கமின்றி அல்லாஹ் திருநாமங்களை மொழிந்தபடியே தவத்திலேயே கழித்தார்கள். அந்த காலத்தில் வாழ்ந்து வந்த நவாப் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ்வைப் பற்றி கேள்விப்பட்டு நேரில் வந்து சந்தித்து ஆசி பெற்றனர். பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ் வாழ்ந்த கேசவநேரியை அவர்களுக்கே இனாமாக தந்து விட்டு சென்றனர். அதனால்தான் அந்த ஊர் ‘இனாம் கேசவநேரி’ என்று அழைக்கப்படுகிறதாம்.

இறுதியாக, பாச்சா முஹ்யித்தீன் (ரழி) அவர்கள் கேசவநேரியிலேயே வாழ்ந்து மறைந்தார்கள். அங்கேயே அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பெருமானார் நபிகள் நாயகம் பிறந்த மாதமான ரபிய்யுல் அவ்வல் பிறையில் பாச்சா முஹ்யித்தீனின் உரூஸ் தினம் கேசவநேரியில் வெகுவிமரிசையாக நடந்து வந்தது. குறையுடன் செல்பவர்கள் நிறையுடன் திரும்பினர். யானையுடன் கூடிய கொடி ஊர்வலம் பாச்சா முஹ்யித்தீன் தர்காவில் சிறப்புற வெகு விமரிசையாக நடைபெறும். ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த கந்துாரி உரூஸ் காலப்போக்கில் மாறி, அவர்களை மக்கள் கொண்டாடாமல் விட்டு விட்டனர். தற்போது பாச்சா மொய்தீன் வலியுல்லாஹ் அவர்களது நினைவிடம் புதர் மண்டிய இடத்தில் சீரமைக்கப்படாமல் இருப்பதுதான் வேதனையான விஷயம் என்கின்றனர் அந்த ஊர் மக்கள்.

பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ் அவர்கள் தற்போது மக்களால் போற்றப்படாவிட்டாலும், அவர்களது சிறப்பை அறிந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கேசவநேரியில் உள்ள அவர்களது அடக்கத்தலத்துக்கு சென்று தரிசித்து விட்டு செல்கின்றனர்.  தங்களது நாட்டங்களையும், குறைகளையும் கூறி விட்டு வருகின்றனர். அது அல்லாஹ்வின் அருளால் நிறைவேறுகிறது என்கின்றனர் இஸ்லாமியர்கள் பலர். பாச்சா முஹ்யித்தீன் வலியுல்லாஹ்வால், தனது வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் பற்றி பக்தர் ஒருவர் கூறிய விஷயங்கள் கேட்பதற்கு அதிசயிக்கத்தக்க வகையில் இருந்தன.

(தொடரும்)

தகவல் உபயம் : கேஸ்னரி மைதீன்

செல்: 96775 66413