கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 183

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019

வங்கம் தந்த ‘கொடிமலர்!’

‘‘நெஞ்­சம் மறப்­ப­தில்லை’ படக்­கதை உரு­வா­வ­தற்கு, மறு­பி­றவி குறித்த ஒரு பத்­தி­ரிகை செய்தி உந்­து­சக்­தி­யாக அமைந்­தது,’ என்­பார் டைரக்­டர் ஸ்ரீதர்.

அறு­ப­து­க­ளின் தொடக்­கத்­தில் புதி­தா­கக் கட்­டப்­பட்­டி­ருந்த ஆளி­யாறு அணைக்­குச் சென்­ற­போது, ஒரு கதைக்­கான கள­மாக இதைக் கொள்­ள­வேண்­டும் என்ற எண்­ணம் ஸ்ரீத­ருக்கு வந்­தது. அதை செயல்­ப­டுத்­தும் வண்­ணம், வெயி­ல­டிக்­கும் ஒரு மதி­யம் மெரினா பீச்­சில் ஒரு மரத்­த­டி­யில் நின்ற போது ‘காத­லிக்க நேர­மில்­லை’­யின்  கதைக்­கரு எனக்கு வந்­தது, என்­றும் ஸ்ரீதர் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்  (‘காத­லிக்க நேர­மில்லை’ கதைக்கு வேறொரு பின்­ன­ணி­யும்,  முன்­னு­தா­ர­ ண­மாக வேறொரு திரைப்­ப­ட­மும் உண்டு என்­பது என்­னு­டைய கருத்து).

காஷ்­மீ­ரத்தை கதைக்­க­ள­மாக வைத்து படம் முழுக்க வெளிப்­பு­றத்­தில் எடுத்­த­போது ‘தேன் நிலவு’ வந்­தது. அடுத்த படம், முழுக்க முழுக்க உள்­ள­ரங்­கில் எடுக்­க­வேண்­டும் என்று எண்­ணிய போது, ஆஸ்­பத்­திரி என்ற கதைக்­க­ளம் உரு­வாகி, ‘நெஞ்­சில் ஓர் ஆல­யம்’ எடுத்­தேன் என்­பார் ஸ்ரீதர்.

ஆனால், ‘‘மண­மான ஒரு பெண், தன்­னு­டைய கண­வனை அழைத்­துக் கொண்டு மருத்­து­வ­ரான பழைய காத­ல­னி­டம் வரு­கி­றாள்’’ என்ற ‘நெஞ்­சில் ஓர் ஆல­யம்’ படத்­தின் கதைக்­கரு, ‘டாக்­டர் நீல­மே­கம்’ என்ற சிறு­க­தை­ யி­லி­ருந்து எடுக்­கப்­பட்­டது. இந்த உண்மை ஏற்­கப்­ப­ட­வும் இல்லை, சிறு­க­தை­யைப் பட­மாக்­கும் உரி­மை­யும் பெறப்­ப­ட­வில்லை.

இதை நினைத்து அந்­தக் கதையை ‘அனு­மான்’ பத்­தி­ரி­கை­யில் எழு­தி­யி­ருந்த குண்­டூசி கோபால் வேத­னைப்­பட்டுÂ ØïVண்டிருந்­த­போது, ‘நெஞ்­சில் ஓர் ஆல­யம்’ படத்தை இந்­தி­யில் எடுக்­கும் முயற்­சி­யில் இருந்­தார் ஸ்ரீதர்!    தன்­னு­டைய தயா­ரிப்­பா­கவே அதை ‘தில் ஏக் மந்­திர்’ எனற பெய­ரில் எடுத்து வெற்­றி­யும் கண்­டார்  (டாக்­டர் நீல­மே­கம் சிறு­க­தை­யின் கதை அம்­சங்­கள் ‘நெஞ்­சில் ஓர் ஆல­யம்’ படத்­தில் எந்த அள­விற்கு இருக்­கின்­றன என்­பது குறித்து நான் ஏற்­க­னவே எழு­தி­யி­ருக்­கி­றேன்).

சர்ச்­சைக்­கு­ரிய இந்த வகை­யில் இல்­லா­மல், ‘சியா­மலி’ என்ற வங்­கா­ளக்­க­தை­யின் தழு­வல் என்ற அறி­விப்­பு­டனே எடுக்­கப்­பட்ட படம் ‘கொடி­ம­லர்’ (1966). வாய் பேச­மு­டி­யாத ஒரு பெண்ணை (விஜ­ய­கு­மாரி), கதா­நா­ய­கன் (முத்­து­ரா­மன்) திடீ­ரென்று மணக்க நேரும் போது ஏற்­ப­டும் விளை­வு­களை இந்த படம் விரித்­து­ரைக்­கி­றது.

‘ஸ்ரீமதி தேவி’ என்ற புனைப்­பெ­ய­ரில் வங்­காள மொழி­யில் கதை­கள் எழு­திய நிரு­பமா தேவி (1883-1951), பெண்­களை மைய­மாக வைத்து நாவல்­கள் எழு­தி­னார். இளம் வித­வை­யான நிரு­பமா தேவி, கண்­ண­னின் பக்தை; தன்­னு­டைய கடைசி ஆண்­டு­களை விருந்­தா­

வ­னத்­தில் கழித்­தார். இவர் படைத்த ‘சியா­மலி’  என்­கிற நவீ­னம் 1919ல் வெளி­வந்­தது.

காது கேளாத, வாய்­பே­ச­மு­டி­யாத பெண், ‘சியா­மலி’. அவள் பிறந்த ஏழ்­மை­யான குடும்­பத்­தில் அவள்­தான் மூத்த பெண். அவ­ளுக்கு ஒரு தங்கை. அக்­கா­ளுக்­குக் கல்­யா­ணம் ஆவது கஷ்­ட­மான ஒன்று. அக்­கா­ளுக்­குக் கல்­யா­ணம் செய்­யா­மல் தங்­கையை மணம் செய்து கொடுத்­தால், குடும்­பமே இனப்­பி­ரஷ்­டத்­திற்கு ஆளா­கும். தங்­கையை மணந்த நப­ரும் கூட இனப்­பி­ரஷ்­டத்­திற்கு உள்­ளா­வார். இவை போன்ற கடு­மை­யான வழக்­கு­கள் இருந்த கால­கட்­டத்தை நாவல் மைய­மா­கக்­கொண்டு, கதா­பாத்­தி­ரங்­க­ளைப் பய­ணிக்­கச் செய்­தது.

சிறந்த நாட­கங்­க­ளுக்கு பேர்­போன கோல்­கட்­டா­வின் பண்­பாட்­டுச் சூழ­லில், ஐம்­ப­து­க­ளில் ‘சியா­மலி’ நாட­க­மாக நடிக்­கப்­பட்டு மிகப்­பெ­ரிய வர­வேற்பை பெற்­றது. தேப்­நா­ரா­யண் குப்தா என்­ப­வர் ‘சியா­ம­லி’க்கு நாடக வடி­வம் கொடுத்­தி­ருந்­தார். பிர­பல தொழில்­முறை நாட­கக் கம்­பெ­னி­யான ஸ்டார் தியேட்­டர், ‘சியா­மலி’ நாட­கத்தை அக்­டோ­பர் 15, 1953லிருந்து  நவம்­பர் 15, 1955 வரை, தொடர்ந்து 484 இர­வு­கள் வழங்­கி­யது. மீண்­டும் டிசம்­பர் 25, 1958ல் தொடங்­கப்­பட்டு, அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 15 வரை மேடை­யேற்­றப்­பட்ட ‘சியா­மலி’, நாட­கக் கம்­பெ­னிக்­குப் வசூலை வாரிக்­கொ­டுத்­தது.

நாட­கத்­தின் கதா­நா­ய­க­னாக நடித்த உத்­தம் குமார் அதே வேடத்தை ஏற்க, ‘சியா­மலி’ வேடத்­தில் காபேரி போஸ் என்­ப­வர் நடிக்க, 1956ல் ‘சியா­மலி’ திரைப்­ப­ட­மா­க­வும்  வந்­தது. ஆனால் நாட­கம் பெற்ற வர­வேற்­பைத் திரைப்­ப­டம் பெற­வில்லை. அப்­ப­டி­யி­ருந்­தும் ‘சியா­மலி’ படத்­தின் கதையை ஒட்டி ஒரு தமிழ்ப்­ப­டம் எடுக்க ஸ்ரீதர் விரும்­பி­னார். வங்க நாடக மறு­ம­லர்ச்­சி­யில்  ‘சியா­மலி’  வகுத்த பங்கை அவர் அறிந்­தி­ருக்­கக்­கூ­டும். கோல்­கட்­டா­வில் நாட­கம் பார்த்த தாக்­கத்­தால்­தானே, ‘ஷுதா’ (பசி) என்ற நாட­கத்­தின் கதைக்­க­ருவை வைத்­துக் கொண்டு ‘நெஞ்­சி­ருக்­கும் வரை’ படத்தை அவர் எடுத்­தார்?

நம் இயக்­கு­நர்­க­ளை­யும் தயா­ரிப்­பா­ளர்­க­ளை­யும் பொறுத்­த­வரை அவர்­களை இரண்டு வித­மா­கப் பிரிக்­க­லாம். வேற்று மொழி­யில் வந்த வெற்­றிப்­ப­டங்­களை அப்­ப­டியே ஈய­டிச்­சான் காப்­பி­யாக  எடுத்து, வர்த்­த­கச் சினி­மா­வில் வெற்றி பெற நினைப்­ப­வர்­கள் ஒரு வகை. இன்­னொரு வகை, கதைக்­க­ரு­வை­யும் சில கேரக்­டர்­க­ளை­யும் வைத்­துக்­கொண்டு தங்­க­ளு­டைய மனோ­பா­வத்­திற்கு ஏற்ற முறை­யில் கதைப் பின்­னு­ப­வர்­கள். இந்த வகை­யைச் சேர்ந்­த­வர்­தான் ஸ்ரீதர்.

வங்­கா­ளத்­தில் இருந்த ‘சியா­மலி’ கதை­யி­லி­ருந்து சில அம்­சங்­களை மட்­டும் எடுத்­துக்­கொண்டு, கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தன்­னு­டைய போக்­குக்கு அமைத்­துக்­கொண்டு அவர் செயல்­பட்­டார். தான் எடுத்­துக் கொண்ட திரைக்­கதை தெளி­வாக அமை­ய­வேண்­டும் என்­ப­தில் அவர் குறி­யாக இருந்­தார்.

தன்­னு­டைய கதா­நா­ய­கன் ராமு (முத்­து­ரா­மன்), ஒரு அம்மா பையன். வீட்­டின் தலைப்­பிள்­ளை­யா­க­வும், வளர்ந்த ஆண்­பிள்­ளை­யா­க­வும் இருந்­த­போ­தும், அவன் தன்­னு­டைய  போக்­கில் எதை­யும் செய்­வ­தில்லை. அவ­னு­டைய தாய் (எம்.வி.ராஜம்மா), அவனை ஒரு சிறு­வ­னா­கவே நினைக்­கி­றாள். ‘‘அவ­னுக்கு என்ன தெரி­யும்,அவன் குழந்தை,’’ என்று சொல்­லிக்­கொண்டு, அந்த கிரா­மத்­தில் தன்­னு­டைய நில­பு­லங்­களை நிர்­வ­கிக்­கும் மிரா­சு­தா­ரி­ணி­யாக அவர் இருக்­கி­றார்.

ராமு­வின் தம்பி துரை, ராமு­வைப் போல் அல்­லா­மல் பட்­ட­ணத்­தில் கல்­லூ­ரி­யில் படிக்­கி­றான். ஒரு முறை ஊருக்கு வரும் போது, புதி­தாக வாங்­கிய தன்­னு­டைய புல்­லட் மோட்­டார்­பைக்­கில் அவன் வரு­கி­றான், அவனை வாசி­லி­லேயே நிறுத்தி வைத்து, எவ்­வ­ளவு ரூபாய் கொடுத்து வாங்­கி­னாய், யாரைக் கேட்டு வாங்­கி­னாய் என்­றெல்­லாம் அவ­னு­டைய தாய் அவனை வறுத்­தெ­டுக்­கி­றாள். ‘கொடி­ம­ல’­ரைப் பொறுத்­த­வரை, அந்­தத் தாய்­தான் ஊமைக்­க­தா­நா­ய­கி­யின் துன்­பத்­திற்­கெல்­லாம் கார­ணம். கடை­சி­யில் அந்த வறட்­டுத்­த­ன­மான தாய்க்­குப் பாடம் புகட்டி அவரை வழிக்­குக் கொண்­டு­வ­ரு­வ­தில்­தான் உச்­சக்­கட்­டமே இருக்­கி­றது. ‘சியா­மலி’ படத்தை பார்க்­கும் போது, இந்த வித­மான தெளி­வான கதா­பாத்­திர சிருஷ்டி இல்­லா­மல் இருக்­கி­றது.  

மிரா­சு­தா­ரி­ணி­யாக வரும் ராஜம்­மா­வின் தம்பி முறை­யா­க­வும், அவ­ளு­டைய காரி­ய­த­ரிசி போல­வும் செயல்­ப­டும் அண்­ணா­ம­லை­யாக வரு­கி­றார் நாகேஷ். ‘கொடி­ம­லர்’ தொய்­வு­பெ­றா­த­வாறு அதன் திரைக்­க­தைக்­குத் தன்­னு­டைய வாய்ச்­ச­வ­டா­லா­லும் நகைச்­சுவை உணர்­வா­லும் உற்­சா­கம் ஊட்­டு­கி­றார். இது போன்ற கதா­பாத்­தி­ரம் ‘சியா­மலி’ யில் இல்லை.

‘சியா­ம­லி’­யி­லி­ருந்து ஸ்ரீதர் மேற்­கொண்ட இன்­னும் சில முக்­கி­ய­மான மாற்­றங்­கள் உண்டு. ‘சியா­ம­லி’­யின் கதா­நா­யகி வாய்ப்­பே­ச­மு­டி­யா­த­வள் மட்­டும் அல்ல, காதும் கேளா­த­வள். ஆனால் ‘கொடி­ம­ல’­ரின் லட்­சுமி (விஜ­ய­கு­மாரி) அப்­ப­டி­யல்ல,  அவ­ளுக்­குப் பேச­மு­டி­யாதே தவிர, காது நன்­றா­கக் கேட்­கும்.  ‘இவளை நான் மணம் செய்­து­கொள்­கி­றேன்’ என்று கதா­நா­ய­கன் கூறு­கிற போது, அவ­ளு­டைய உடம்­பெல்­லாம் காதாக கேட்­ப­து­போன்ற உணர்ச்சி அவ­ளி­டம் தெரி­கி­றது. உணர்ச்­சி­க­ர­மான நடிப்­புக்­குப் பெயர்­போன விஜ­ய­கு­மாரி அல்­லவா அந்த வேடத்­தில் நடிக்­கி­றார்!

ஆனால் இரண்­டு­வி­த­மான குறை­பா­டு­கள் இருப்­ப­தன் கார­ண­மாக, ‘சியா­மலி’ வேறு­வி­த­மான குணச்­சித்­தி­ரம் கொண்­ட­வ­ளாக இருக்­கி­றாள். இயற்­கை­யின் பால் அவ­ளுக்கு இருக்­கும் லயிப்பு அதி­க­மாக இருக்­கி­றது. மழை பெய்­யும் போது, அதில் நனைந்­த­படி மெய்­ம­றந்து குதூ­க­லிக்­கி­றாள். பெரி­ய­வர்­க­ளைப் பார்க்­கும் போதும் அவ­ளு­டைய பார்வை நேரே அவர்­க­ளைப் பார்த்து வெறிப்­ப­து­போல் உள்­ளது.  முதன்­மு­றை­யாக  புகுந்த வீட்­டுக்கு வரும் போது, தன்­னு­டைய மாமி­யாரை இப்­ப­டித்­தான்­அ­வள் பார்க்­கி­றாள்.  கொடி­ம­ல­ரின் ஊமைக் கதா­நா­ய­கி­யின் முக­பா­வம் உணர்வு பூர்­வ­மா­ன­தா­க­வும் கெஞ்­சு­கிற தோர­ணை­யி­லும் உள்­ளது.

பழைய வங்­காள சமூ­கப் பழக்­க­வ­ழக்­கங்­க­ளில் தோய்ந்­த­தாக இருக்­கின்­றன, திரு­ம­ணம் தொடர்­பாக ‘சியா­ம­லி’­யில் வரும் சம்­ப­வங்­கள்.  அக்­கா­வுக்கு முத­லில் கல்­யா­ணம் செய்­யா­மல் நாம் மணம் செய்­து­கொள்­கி­றோமே என்ற பச்­சா­தா­பத்­தில், மணப்­பெண்­ணான தங்கை, தமக்­கைக்­குத் தன்­னு­டைய சில புத்­தா­டை­க­ளை­யும் ஆப­ர­ணங்­க­ளை­யும் தரு­கி­றாள்.

பாவம், ஊமைப்­பெண், தன் மனத்­தி­ருப்­திக்கு சில சடங்­கு­க­ளில் இடம் பெற்­று­விட்­டுப்­போ­கட்­டுமே என்று அய்­ய­ரும் இரக்­கப்­ப­டு­கி­றார். ஒரு திருப்பு முனை தரு­ணத்­தில், ‘சியா­மலி’ மணப்­பெண்­ணா­கவே மாறி அவ­ளுக்கு மணம் ஆகி­வி­டு­கி­றது!

ஆனால் ‘கொடி­ம­ல’­ரில், தங்­கைக்­குத் திரு­ம­ணம் ஆகும் நேரத்­தில், தனக்கு ஒரு கிறுக்­க­னைக் கல்­யா­ணம் பண்­ணி­வைக்­கி­றார்­களே என்று மனம் வருந்தி தற்­கொ­லைக்கு முயற்சி செய்­கி­றாள், அக்­காள்.  அவள் மேல் கதா­நா­ய­க­னுக்­குக் கரு­ணைப் பிறக்­கி­றது, அவளை மணம் செய்­து­கொள்­ளு­கி­றான் என்று ஸ்ரீதர் கதையை மாற்­றி­ய­மைத்­தார்.  

‘கொடி­ம­லர்’ படத்­தில் ஊமைப்­பெண்­ணான கதா­நா­ய­கி­யின் தங்­கை­யும் (காஞ்­சானா), கதா­நா­ய­க­னின் தம்­பி­யும் (ஏவி.எம்.ராஜன்), காத­லர்­கள். மண­மும் செய்­து­கொள்­கி­றார்­கள். அவர்­கள் இணைந்­து­கொண்டு, ‘ஊமைப்­பெண்ணை என்­னு­டைய மரு­ம­க­ளாக எக்­கா­ர­ணம் கொண்­டும் ஏற்­க­மாட்­டேன்’ என்று கூறும் குடும்­பத்­த­லை­வியை மசிய வைக்­கி­றார்­கள். ‘சியா­ம­லி’­யின் கதை வேறு­வி­த­மாக வளர்ந்து, ஒரு காதல் முக்­கோ­ண­மாக அமைந்து, கடை­சி­யில் சியா­மலி நல்­வாழ்வு பெறு­வ­தாக உள்­ளது. இந்த நீண்ட பாகத்தை ஸ்ரீதர் அறவே தவிர்த்­து­விட்­டார்.

‘கொடி­ம­லர்’ வெற்­றி­பெ­ற­வில்­லை­யென்­றா­லும், ஊமை கதா­நா­ய­கி­யின் பாத்­தி­ரப்­ப­டைப்பு, விஜ­ய­கு­மாரி, எம்.வி.ராஜம்மா, நாகேஷ் ஆகி­யோ­ரின் நடிப்பு, எம்.எஸ்.வி., கண்­ண­தா­சன் ஆகி­யோர் அமைத்த பாடல்­க­ளில் உள்ள உயிர் துடிப்பு, குறிப்­பி­டும்­ப­டி­யாக அமைந்­தன.

‘மவு­னமே பார்­வை­யால் ஒரு பாட்டு பாட வேண்­டும்’ என்ற பாடல், மன­தைக் கொள்­ளைக்­கொள்­ளும் இனி­மை­யும் உணர்­வும் நிரம்­பி­ய­தாக அமைந்­தது. ‘கண்­ணாடி மேனி அடி’ (சிருங்­கா­ரம்), ‘கான­கத்­தைத் தேடி இன்று போகி­றாள்’ (சோக­ர­சம்), ‘சிட்­டா­கத் துள்­ளித் துள்ளி வா’ (உற்­சா­க­மான சிருங்­கா­ரம்) முத­லிய பாடல்­க­ளும் இன்று வரை ரசிக்­கக்­கூ­டி­ய ­வை­யாக விளங்­கு­கின்­றன.

‘மலரே நீ சொல்ல ஒரு மொழி­யும் இல்லை’ என்ற பாட­லில் வரும், ‘நான் கோயி­லைத் தேடும் கொடி­ம­ல­ராக வாடு­கின்­றேனே வாழ்க்­கை­யைத் தேடி’ என்ற வரி­யில் உள்ள ‘கொடி­ம­லர்’ என்ற சொற்­றொ­ட­ரைப் படத்­தின் தலைப்­பாக ஸ்ரீதர் வைத்­தார். இதி­லி­ருந்து அவர் படத்­தின் இசை­யால் எந்த அள­வுக்­குக் கவ­ரப்­பட்­டார் என்று தெரி­கி­றது. வெற்றி, தோல்­வி­க­ளைத்­தாண்டி, இசை முத­லான ‘கொடி­ம­ல’­ரின் சில அம்­சங்­கள் நம்மை இன்­றும் ஈர்க்­கவே செய்­கின்­றன.

(தொட­ரும்)