ஒரு பேனாவின் பயணம் – 211 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்!

ஜன­வரி 8,1931

நான் உனக்கு கடை­சி­யாக எழு­திய கடி­தத்­தில், இவ்­வு­ல­கில்  ஒவ்­வொரு பொரு­ளும் மாறி வரு­கி­றது என்று சொன்­னேன். இம்­மா­று­த­லைத் தொகுத்­துக் கூறு­வ­தையே சரித்­தி­ரம் என்­கி­றோம். கடந்த காலத்­தில் மாறு­தல்­கள் குறை­வாக இருப்­பின், சரித்­தி­ரத்­துக்கு விஷ­ய­மும் குறை­வா­கவே இருக்­கும்.

சாதா­ர­ண­மாக பள்­ளிக்­கூ­டத்­தி­லும் கலா­சா­லை­யி­லும் நாம் படிக்­கும் சரித்­தி­ரம் நுனிப்­புல் மேய்­வது போன்­றது. மற்­ற­வர்­க­ளைப் பற்றி எனக்­குத் தெரி­யாது. என்­னைப்  பொறுத்­த­வ­ரை­யில்  நான் பள்­ளிக்­கூ­டத்­தில் கற்­றது மிக­வும் சொற்­பம். இந்­திய தேசிய சரித்­தி­ரம் படிக்­கவே இல்லை என்று சொல்­லி­வி­ட­லாம். இங்­கி­லாந்து தேச சரித்­தி­ரம் சிறிது வாசித்­தேன். நான் வாசித்த இந்­திய சரித்­தி­ர­மும் நம் நாட்டை இகழ்­வோ­ரால் பெரும்­பா­லும் வேண்­டு­மென்றே திரித்­துப் பொய்­யாக எழு­தப்­பட்­ட­தா­கும். மற்ற நாடு­க­ளின் வர­லா­று­க­ளைப் பற்றி நான் மிக­வும் கொஞ்­ச­மா­கவே அறிந்­தி­ருந்­தேன். கல்­லூ­ரியை விட்டு வெளி­யே­றிய பிறகே உண்­மை­யான சரித்­தி­ரத்தை வாசிக்­க­லா­னேன். நல்ல கால­மாக நான் அடிக்­கடி சிறைக்­குப் போக நேர்ந்­த­தால், எனது அறிவை வளர்த்­துக்­கொள்ள இட­மேற்­பட்­டது.

நான் இதற்கு முன்பு உனக்கு எழு­திய கடி­தங்­க­ளில் இந்­தி­யா­வின் பழம்­பெ­ரும் நாக­ரி­கத்­தைப் பற்­றி­யும் திரா­வி­டர் களைப் பற்­றி­யும் ஆரி­யர்­க­ளின் வரு­கை­யைப் பற்­றி­யும் எழு­தியி ருக்­கி­றேன். ஆரி­யர்­கள் வரு­தற்கு முற்­பட்ட காலத்­தைப் பற்றி நான் எழு­த­வில்லை. அதற்­குக் கார­ணம் என்­னு­டைய அறி­யா­மையே ஆகும். ஆனால் கடந்த சில ஆண்­டு­க­ளில் மிக மிகப் பழைய நாக­ரி­கத்­தின் அடை­யா­ளங்­கள் நம் நாட்­டில் கண்­டு­பி­டிக்­கப்­பட்டி ருக்­கின்­றன.  இவை இந்­தி­யா­வின் வட­மேற்கு பாகத்­தில் மொகஞ்­ச­தாரோ என்­னு­மி­டத்­தில் அகப்­பட்­டி­ருக்­கின்­றன. ஐயா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட  இந்­நா­க­ரி­கத்­தின் சின்­னங்­க­ளைப் பூமி­யைத் தோண்டி கண்­டு­பி­டித்­தி­ருக்­கி­றார்­கள். எகிப்­தின் பழங்­கா­லத்­துச் சமா­தி­க­ளில் மனி­தர்­கள் இறந்த பின்பு அவர்­க­ளின் சவங்­களை தைலத்­தி­லிட்டு அவை மாறா­மல் வைத்­தி­ருப்­பதை இன்­றும் காண்­கி­றோம். அத்­த­கைய சவங்­கள் மொகஞ்ச தாரோ­வி­லும் கண்­டு­பி­டிக்­கப்­பட்டி ருக்­கின்­றன! இவை பல ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டவை. ஆரி­யர்­கள் வரு­வ­தற்கு நெடுங்­கா­லம் முன்பே இந்­நா­க­ரி­கம் பர­வி­யி­ருந்­தி­ருக்க வேண்­டும். அந்த காலத்­தில் ஐரோப்பா ஒரு வனாந்­தி­ர­மாக இருந்­தி­ருக்க வேண்­டும்.

 இன்று ஐரோப்பா பல­மும் சக்­தி­யும் வாய்ந்­தி­ருக்­கி­றது.  அங்கு வாழும் மக்­கள் கலை, நாக­ரீ­கங்­க­ளில் தங்­க­ளை­விட மேம்­பட்­ட­வர்­க­ளில்லை என்று எண்­ணிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆசியா கண்­டத்­தில் வாழும் மக்­கள் என்­றால் அவர்­க­ளுக்கு அலட்­சி­யம். ஆசி­யா­வி­லுள்ள தேசங்­க­ளின் மீது  பாய்ந்து, கிடைப்­ப­தைச் சுருட்­டிக் கொண்டு போகி­றார்­கள். என்னே காலத்­தின் மாறு­தல்! உல­கப் படத்தை எடுத்­துக் கணித்­துப் பார்த்­தால் பரந்த ஆசியா கண்­டத்­தில் ஒரு மூலை­யிலே  சின்ன ஐரோப்­பா­வா­னது ஒட்­டிக் கொண்­டி­ருப்­பது தெரி­ய­வ­ரும். ஆசி­யா­வையே சிறிது நீட்­டி­விட்­ட­து­போல் இருக்­கி­றது ஐரோப்பா. சரித்­தி­ரத்தை வாசித்­தால் மிக நீண்ட காலங்­க­ளாக ஆசி­யா­வின் கை மேலோங்கி இருந்­ததை அறி­ய­லாம். ஆசி­யா­வி­லி­ருந்­த­வர்­கள் அலை அலை­யா­கச் சென்று ஐரோப்­பாவை வெற்றி கண்­டார்­கள். அவர்­கள் ஐரோப்­பா­வையே நாசம் செய்­தார்­கள். ஆனால் அதற்கு நாக­ரி­கத்­தை­யும் வழங்­கி­னார்­கள்.  ஆரி­யர், சிதி­யர், ஹூணர், அர­பி­யர், மங்­கோ­லி­யர், துருக்­கி­யர் இவர்­கள் புற்­றி­லி­ருந்து ஈசல் கிளம்­பு­வது போல ஆசி­யா­வில்  எங்­கேயோ ஓரி­டத்­தி­லி­ருந்து புறப்­பட்டு ஆசி­யா­வி­லும் ஐரோப்­பா­வி­லும் பர­வி­னார்­கள். நெடுங்­கா­ல­மாக ஆசி­ரி­யர்­கள் சென்று குடி­யே­று­கிற நாடா­கவே ஐரோப்பா இருந்து வந்­தது. இப்­போது ஐரோப்­பா­வில் வாழும் மக்­க­ளில் பெரும்­பா­லோர் ஆசி­யா­வி­லி­ருந்து படை­யெ­டுத்து வந்­தோ­ரின் கால்­வ­ழி­களே ஆவர்.

 படத்­தில் ஆசியா பெரி­ய­தா­க­வும் ஐரோப்பா சிறி­ய­தா­க­வும் இருக்­கி­றது. இத­னால் ஆசியா மேலா­ன­தென்­றும் ஐரோப்பா அல்­ப­மா­ன­தென்­றும் கரு­தக்­கூ­டாது. உரு­வத்­தைக் கொண்டு  ஒரு மனி­த­னின் பெரு­மை­யையோ அல்­லது ஒரு தேசத்­தின் உயர்­வையோ மதிப்­பி­டு­வது தவ­றா­கும்.  கண்­டங்­கள் எல்­லா­வற்­றுள்­ளும் ஐரோப்பா சிறி­ய­தா­யி­ருந்­தா­லும் இன்று அது மற்­றெல்­லா­வற்­றை­யும் விட மேன்மை பெற்று விளங்­கு­ வதை நாம் அறி­வோம். ஐரோப்­பா­வின் தேசங்­கள் பல­வற்­றின் கடந்­த­கால சரித்­தி­ரம் சிறப்பு வாய்ந்­த­தென்­ப­தை­யும் நாம் அறி­கி­றோம். பல பெரிய விஞ்­ஞா­னப் புல­வர்­களை அவை அளித்­தி­ருக்­கின்­றன. அவர்­கள் கண்­டு­பி­டித்த உண்­மை­க­ளி­னால் மனித நாக­ரி­கம் வெகு­தூ­ரம் முன்­னேறி வந்­தி­ருக்­கி­றது. கோடிக்­க­ணக்­கான மக்­க­ளின் வாழ்க்கை துன்­பம் குறைந்­த­தாக மாறி­யி­ருக்­கி­றது. `நுண்­மான் நுழை புலம் ‘ படைத்த புல­வர்­கள் ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளை­யும், ஓவி­யம், சிற்ப முதற் கலை­ஞா­னி­யர், இசை­ஞா­னி­யர்­க­ளை­யும் செயல் திற­மை­யிலே ஒப்­பு­யர்­வுற்று விளங்­கிய வீர­பு­ரு­ஷர்­க­ளை­யும் ஐரோப்பா ஈன்­றெ­டுத்­தி­ருக்­கி­றது. ஐரோப்­பா­வின் பெரு­மையை உள்­ள­ப­டியே உண­ரா­விட்­டால், அது மட­மை­யா­கும்.

 ஆனால் ஆசி­யா­வின் பெரு­மையை உண­ரா­ம­லி­ருப்­ப­தும் அறி­வு­டை­மை­யா­காது. ஐரோப்பா தற்­போது மின்னி மிளிர்­வ­தைப் பார்த்து நாம் சிறிது ஏமாந்து போய் முன் காலத்தை மறந்­து­வி­டக் கூடும். இன்று உல­கில் விளங்­கும்  முக்­கி­ய­மான மத ஸ்தாப­கர்­க­ளை­யெல்­லாம் பெற்­றெ­டுத்­தது ஆசி­யா­ தான். இவர்­க­ளைப் போல் உல­கம் முழு­மை­யி­லும்  உள்ள மக்­க­ளின் உள்­ளங்­க­ளைக் கவர்ந்து அங்கு அரசு புரி­வோர் வேறு யாவர்? இப்­போது வழங்­கும் மதங்­க­ளெல்­லா­வற்­றுள்­ளும் மிக மிகப் பழை­ய­தான  ஹிந்து மதம் நமது இந்­திய நாட்­டிலே பிறந்­தது. அதே போல் இன்று சீனா – ஜப்­பான் – பர்மா, திபெத்து, இலங்கை முத­லிய நாடு­க­ளில் பர­வி­யி­ருக்­கும், இந்து மதத்­தோடு தொடர்­புள்ள பவுத்த மத­மும் நம் நாட்­டிலே பிறந்­த­தா­கும். யூத மத­மும், கிறிஸ்­தவ மத­மும் கூட மேற்கு ஆசி­யா­வி­லுள்ள பாலஸ்­தீ­னத்­தில் பிறந்து வளர்ந்­த­வையே. பார்­சி­க­ளின் மத­மா­கிய ஜரா­துஷ்ட்ர மதம் பார­சீக நாட்­டில் ஆரம்­ப­மா­யிற்று.  இஸ்­லாம் மதத் தலை­வ­ரான முகம்­மது நபி அரே­பி­யா­வி­லுள்ள மெக்­கா­வில் பிறந்­த­வர் என்­பது  உனக்­குத் தெரி­யும். கண்­ணன், புத்­தன், ஜரா­துஷ்­டிரா, கிறிஸ்து, முகம்­மது, சீன தத்­துவ ஞானி­க­ளான கன்­பூ­ஷி­யஸ், லெள்ட்சே இவ்­வாறு ஆசி­யா­வில் பிறந்த சிந்­தை­யி­லும், சொல்­லி­லும், செய­லி­லும் ஒப்­பு­யர்­வற்று விளங்­கிய மகா புரு­ஷர்­க­ளின் பெயர்­களை எழு­திக்­கொண்டே போக­லாம். கடந்த நாட்­க­ளில் நாம் வாழும் இப்­ப­ழைய கண்­ட­மா­னது எப்­படி பல வழி­க­ளி­லும் சிறப்­புற்று விளங்­கி­ய­தென்று இன்­றும் எடுத்­துக்­காட்­டக்­கூ­டும்.

 ஆனால் காலத்­தின் அதி­சய மாறு­தலை என்­னென்­பது? நமது கண் முன்­பும் அது மாறிக்­கொண்டே இருக்­கி­றது சரித்­தி­ரத்­தில் சில சம­யங்­க­ளில் குழப்­ப­மும் கொந்­த­ளிப்­பும் ஏற்­பட்­டா­லும், பெரும்­பா­லும் அது பல நூற்­றாண்­டு­க­ளில் சிறிது சிறி­தா­கவே உருப்­பெ­று­கி­றது. ஆனால் இன்று ஆசி­யா­வில் சரித்­திர நிகழ்ச்­சி­கள் வெகு­வி­ரை­வில் நிகழ்ந்து செல்­கின்­றன. இந்த பெரிய பூமிப் பரப்­பா­னது தனது நீண்ட தூக்­கத்­தி­னின்­றும் விழித்­தெ­ழுந்து கொண்­டி­ருக்­கி­றது. வருங்­கா­லத்தை அமைப்­ப­தில் ஆசியா எடுத்­துக் கொள்­ளப் போகும் பங்கை அறி­யா­தார் யார் ?

ஜன­வரி 9, 1931

 நேற்று ‘பாரத்’ என்­னும் இந்தி வார­மிரு முறைப் பத்­தி­ரி­கையை வாசித்­துக் கொண்­டி­ருந்­தேன். அதில் மலாக்கா சிறை­யில் உன் தாயா­ரைச் சரி­வர நடத்­த­வில்லை என்று போட்­டி­ருந்­தது. லஷ்­ம­ண­புரி சிறைக்கு அவளை மாற்­றப்­போ­வ­தா­க­வும் கண்­டி­ருந்­தது. அதைப் பார்த்­த­தும் எனக்கு சிறிது ஆத்­தி­ர­மும் கவ­லை­யும் உண்­டா­யிற்று. ஒரு வேளை ` பாரத்’ பத்­தி­ரி­கை­யில் வந்த செய்தி பொய்­யா­க­வும் இருக்­க­லாம். ஆனால் அதைப் பற்றி சந்­தே­கம் ஏற்­ப­டு­வ­தும் கூட நல்­ல­தல்ல. நமக்கு அசெ­ள­க­ரி­ய­மும் துன்­ப­மும் ஏற்­பட்­டால்  அதைப் பொறுத்­துக் கொள்­ள­லாம். அத­னால் நமக்கு நன்மை உண்­டா­கி­றது. எப்­ப­டி­யென்­றால் நமது மென்­மைக் குணம் போய் வன்­மைக் குணம் பிறக்­கி­றது.. ஆனால் நமக்கு வேண்­டி­ய­வர்­க­ளுக்­குத் துன்­பம் நேரி­டு­கி­ற­தென்­றால் அதைப் பொறுத்­துக்­கொள்­வது எளி­தல்ல. அவர்­கள் துன்­பத்தை துடைக்க நாம் ஒன்­றும் செய்ய முடி­யாத நிலை­யி­லி­ருப்­பது இன்­னும் நமது துய­ரத்தை அதி­க­மாக்­கு­கி­றது. ஆகவே ‘பாரத்’ பத்­தி­ரி­கை­யைப் பார்த்­த­தும் உன் தாயா­ரைப் பற்­றிய கவலை அதி­கா­மா­கி­விட்­டது. அவள் பெண் சிங்­கம்  போன்ற அஞ்­சா­நெஞ்­சம் படைத்­த­வள்­தான். ஆயி­னும் ஏற்­கெ­னவே பல­வீ­னப்­பட்­டுக் கிடக்­கும் அவ­ளு­டைய உடம்பு இன்­னும் பல­வீ­ன­ம­டை­வது விரும்­பத்­தக்­க­தல்ல. நெஞ்சு உரம் பெற்­றி­ருந்­தா­லும் உடம்பு சப்­பை­யா­யி­ருந்­தால் நாம் என்ன செய்ய முடி­யும்? நாம் எடுக்­கும் வினையை செப்­ப­மாக செய்து முடிக்க வேண்­டு­மா­யின் உடல் நல­மும் உர­மும் பெற்­றி­ருக்க வேண்­டும்.

 உன் தாயார் லஷ்­ம­ண­பு­ரிக்கு  அனுப்­பப்­ப­டு­வ­தும் ஒரு விதத்­தில் நன்­மை­யாக முடி­ய­லாம். அவள் அங்கு கவு­க­ரி­ய­மா­க­வும் சந்­தோ­ஷ­மா­க­வும் நண்­பர்­க­ளோடு இருக்­க­லாம். மலாக்கா சிறை­யில் அவள் தனி­யா­கவே இருக்­கி­றாள் என்று எண்­ணு­கி­றேன். இவ்­வ­ள­வெல்­லா­மி­ருந்­தும், அவள் அந்த சிறை­யி­லி­ருந்து அதிக தூரத்­தி­லில்­லா­மல் நாலைந்து மைல் தூரத்­திற்­குள் இருக்­கி­றாள் என்று எண்ணி இது­வரை சந்­தோ­ஷப்­பட்­டுக் கொண்­டி­ருந்­தேன். ஆனால் இதெல்­லாம் மூட­ம­னம் செய்­கின்ற வேலை. இரண்டு சிறை­க­ளின் உயர்ந்த சுவர்­கள் இடை­யில் நின்று தடுக்­கும்­போது ஐந்து மைல் என்­றால் என்ன, நூற்­றைம்­பது மைல் என்­றால் என்ன ? எல்­லாம் ஒன்­று­தான்.

 உன் தாத்தா அல­கா­பாத் திரும்பி வந்­து­விட்­டா­ரென்­றும் அவ­ரு­டைய உடல்­நிலை  முன்­னை­விட நன்­றா­யி­ருக்­கிற தென்­றும் இன்று அறிந்து சந்­தோ­ஷப்­பட்­டோம். அவர் மலாக்கா சிறைக்கு உன் தாயா­ரைப் பார்க்க போயி­ருக்­கி­றார் என்று கேள்­விப்­பட்டு மகிழ்ந்­தேன். ஒரு­வேளை நாளைய தினம் நான் உங்­க­ளெல்­லா­ரை­யும் பார்த்­தா­லும் பார்க்­க­லாம். ஏனெ­னில் எனக்கு நாளை­ய­தி­னம் சந்­திப்பு நாள். சிறை­யில் இந்த நாள் மிக­வும் விசே­ஷம் வாய்ந்­த­தா­கும். நான் உன் தாத்­தா­வைப் பார்த்து இரண்டு மாதங்­கள் ஆயின. அவர் முன்­னை­வி­டக் குணம் அடைந்­தி­ருக்­கி­றாரா என்­பதை நான் நேரில் பார்த்து ஆறு­தல் அடை­யக்­கூ­டும். உன்­னை­யும் மிக மிக நீண்ட பதி­னைந்து நாட்­க­ளுக்கு பிறகு பார்ப்­பேன். நீ உன்­னைப் பற்­றி­யும் உன் தாயா­ரைப் பற்­றி­யும் செய்தி கொண்டு வரு­வாய்.

 அடடா! என்ன முட்­டாள்­த­னம் செய்­து­விட்­டேன். கடந்த சரித்­தி­ரத்தை எழுத ஆரம்­பித்து ஏதேதோ பிதற்­றி­விட்­டேனே!  கொஞ்ச நேரம் நிகழ்­கா­லத்தை மறந்து இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட காலத்­துக்­குப் போவோ­மாக.

 நான் உனக்கு முன்பு எழு­திய கடி­தங்­க­ளில் எகிப்­தைப் பற்­றி­யும் கீரிட் தீவி­லுள்ள  நாசாசு என்­னும் தொன்மை வாய்ந்த பட்­ட­ணத்­தைப் பற்­றி­யும் சிறிது கூறி­யி­ருக்­கி­றேன். பழைய நாக­ரி­கங்­கள் இந்த இரண்டு தேசங்­க­ளி­லும், இப்­போது ஈராக் அல்­லது மெச­பொ­டோ­மியா என்று வழங்­கும் இடத்­தி­லும் சீனா, இந்­தியா, கிரீஸ்  ஆகிய தேசங்­க­ளி­லும் வேரோ­டிக் கிளைக்க ஆரம்­பித்­தன. கிரீஸ் நாக­ரி­கம் மற்­ற­வற்­றுக்கு சிறிது பிற்­பட்­ட­தென்று சொல்­ல­லாம். இந்­திய நாக­ரி­கம் எகிப்து, சீனா, ஈராக் ஆகிய இடங்­க­ளில் முளை­தெ­ழுந்த தன் உடன் பிறந்த நாக­ரி­கங்­க­ளோடு ஒத்த வய­து­டை­ய­தாக இருக்­கி­றது. கிரீஸ் நாக­ரி­கத்தை இவற்­றுக்கு தம்பி என்று கூற­லாம். இப்­ப­ழம் பெரும் நாக­ரி­கங்­க­ளில் கதி என்­ன­வா­யிற்று? நாசாசு இருக்­கிற இடம் தெரி­ய­வில்லை. மூவா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு அது இல்­லா­மல் போயிற்று. அதற்கு வய­தில் சிறிய நாக­ரி­கம் தோன்றி அதை அழித்­து­விட்­டது. எகிப்து நாக­ரி­கம்  பல்­லா­யிர வரு­டங்­கள் சிறப்­புற்­றோங்கி நின்­ற­பின் பெயர் சொல்­வ­தற்­கின்று மறைந்து போய்­விட்­டது. `பிர­மிட்’ என்­னும் சமா­திக் கோபு­ரங்­க­ளும் ஸ்பிங்­கம் (sphinx)  அழிந்து போன கோயில்­க­ளும், தைலப்­ப­த­மிட்ட சவங்­க­ளுமே எகிப்து நாக­ரி­கத்­துக்கு இன்று சான்று பகிர்­கின்­றன. எகிப்து என்­னும்  பெய­ரு­டைய தேசம் இன்­றும் இருப்­பது உண்­மையே. பழ­மை­யிற் போலவே நைல் நதி பாய்ந்து அதை வளப்­ப­டுத்­து­வ­தும்  மற்ற தேங்­களை போல அங்­கும் மனி­தர்­கள் வாழ்ந்து வரு­வ­தும் உண்­மையே. ஆனால் தற்­கால அங்­கும் வாழும் மக்­க­ளுக்­கும் அந்­நாட்­டில் ஒளிர்ந்த அப்­ப­ழைய நாக­ரி­கத்­துக்­கும் யாதொரு தொடர்­பும் கிடை­யாது.

 ஈராக்­கும் பார­சீ­கம் என்­னும் இரு நாடு­களை எடுத்­துக்­கொள்­வோம். ஒன்­றன்­பின் ஒன்­றாக எத்­தனை சாம்­ராஜ்­ஜி­யங்­கள் அங்கே தழைத்­தோங்கி மறைந்து போயின. பாபி­லோன், ஆசியா, சால்­டியா இவை மேற்­கூ­றி­ய­வற்­றில் பழ­மை­யா­னவை. பாபி­லோன், நினேஏ என்­பவை பெரிய நக­ரங்­க­ளாக ஒரு காலத்­தில் விளங்­கின. பைபி­ளில் ‘பழைய ஏற்­பாடு’ என்­னும் பகு­தி­யில் இவற்றை பற்­றிய விவ­ரங்­கள் காணப்­ப­டு­கின்­றன. இதற்­குப் பிற­கும் இவ்­வி­டத்­தில் வேறு சாம்­ராஜ்­ஜி­யங்­கள் தோன்றி மறைந்­தன. ` அரே­பிய இர­வு­கள்’ என்­னும் நூலில் கூறப்­ப­டும் பாக்­தாது என்­னும் அற்­புத நக­ரம் இங்­கே­தான் இருந்­தது.  சாம்­ராஜ்­யங்­கள் தோன்­று­கின்­றன. அழி­கின்­றன. மன்­ன­ரும், மன்­னர் மன்­ன­ரும் இவ்­வு­லக மேடை­யில் சிறிது காலம் நடித்து பின் மறை­கி­றார்­கள். ஆனால் நாக­ரி­கங்­கள் நிலை­பெற்று நிற்­கும் தன்­மை­யன. அப்­ப­டி­யி­ருந்­தும் எகிப்து நாக­ரி­கத்­தைப் போலவே ஈராக், பார­சீக நாக­ரி­கங்­க­ளும் அடி­யோடு அழிந்து போயின.

 கிரீஸ் பழைய காலத்­தில் மிக­வும் பெருமை பெற்­றி­ருந்­தது. இன்று கூட அதன் பெரு­மை­யைப் படிக்­கும்­போது நாம் ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றோம். அந்­நாட்­டில் சல­வைக் கல்­லால் செய்­யப்­பட்­டுள்ள சிற்­பங்­க­ளைக் கண்டு இன்­றும் நாம் பிர­மிக்­கி­றோம். நமக்­குக் கிடைத்­துள்ள அந்­நாட்டு இலக்­கி­யத்­தைக் கண்டு வியப்­ப­டை­கி­றோம். தற்­கால ஐரோப்­பா­வுக்கு கிரீசை தாய­கம் என்று சொல்­ல­லாம். கிரேக்­கர்­க­ளின் சிந்­த­னை­க­ளும் பழக்­க­வ­ழக்­கங்­க­ளும் ஐரோப்­பாவை வெகு­தூ­ரம்  ஆட்­கொண்­டி­ருக்­கின்­றன. ஆனால் கிரீ­சின் பழம்­பெ­ரும் மாட்சி இப்­போது எங்கே ? அதன் பழைய நாக­ரி­கம் இறந்து நெடுங்­கா­ல­மா­யிற்று. இன்று ஐரோப்­பா­வின் தென்­கி­ழக்கு மூலை­யில் ஒரு சிறிய தேசம், கிரீஸ்.

 எகிப்து, நாசாசு, ஈராக், கிரீஸ் எல்­லாம் போய்­விட்­டன. பாபி­லோன், நினேவே நாக­ரி­கங்­க­ளைப் போன்று இவற்­றின் நாக­ரி­கங்­க­ளும் இறந்­து­விட்­டன. சீனா, இந்­தியா இவை என்­ன­வா­யின? இவை­யும் பழைய நாக­ரி­கங்­க­ளின் வரி­சை­யைச் சேர்ந்­த­வை­ தானே! மற்ற தேசங்­களை போலவே இந்த இரண்டு தேசங்­க­ளி­லும் பல சாம்­ராஜ்­ஜி­யங்­கள் தோன்றி மறைந்­தன.

(தொட­ரும்)