![]() | ![]() | ![]() |
பழையன கழிதலும் புதியன புகுதலும்!
ஜனவரி 8,1931
நான் உனக்கு கடைசியாக எழுதிய கடிதத்தில், இவ்வுலகில் ஒவ்வொரு பொருளும் மாறி வருகிறது என்று சொன்னேன். இம்மாறுதலைத் தொகுத்துக் கூறுவதையே சரித்திரம் என்கிறோம். கடந்த காலத்தில் மாறுதல்கள் குறைவாக இருப்பின், சரித்திரத்துக்கு விஷயமும் குறைவாகவே இருக்கும்.
சாதாரணமாக பள்ளிக்கூடத்திலும் கலாசாலையிலும் நாம் படிக்கும் சரித்திரம் நுனிப்புல் மேய்வது போன்றது. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பள்ளிக்கூடத்தில் கற்றது மிகவும் சொற்பம். இந்திய தேசிய சரித்திரம் படிக்கவே இல்லை என்று சொல்லிவிடலாம். இங்கிலாந்து தேச சரித்திரம் சிறிது வாசித்தேன். நான் வாசித்த இந்திய சரித்திரமும் நம் நாட்டை இகழ்வோரால் பெரும்பாலும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யாக எழுதப்பட்டதாகும். மற்ற நாடுகளின் வரலாறுகளைப் பற்றி நான் மிகவும் கொஞ்சமாகவே அறிந்திருந்தேன். கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகே உண்மையான சரித்திரத்தை வாசிக்கலானேன். நல்ல காலமாக நான் அடிக்கடி சிறைக்குப் போக நேர்ந்ததால், எனது அறிவை வளர்த்துக்கொள்ள இடமேற்பட்டது.
நான் இதற்கு முன்பு உனக்கு எழுதிய கடிதங்களில் இந்தியாவின் பழம்பெரும் நாகரிகத்தைப் பற்றியும் திராவிடர் களைப் பற்றியும் ஆரியர்களின் வருகையைப் பற்றியும் எழுதியி ருக்கிறேன். ஆரியர்கள் வருதற்கு முற்பட்ட காலத்தைப் பற்றி நான் எழுதவில்லை. அதற்குக் காரணம் என்னுடைய அறியாமையே ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மிக மிகப் பழைய நாகரிகத்தின் அடையாளங்கள் நம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டி ருக்கின்றன. இவை இந்தியாவின் வடமேற்கு பாகத்தில் மொகஞ்சதாரோ என்னுமிடத்தில் அகப்பட்டிருக்கின்றன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நாகரிகத்தின் சின்னங்களைப் பூமியைத் தோண்டி கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பழங்காலத்துச் சமாதிகளில் மனிதர்கள் இறந்த பின்பு அவர்களின் சவங்களை தைலத்திலிட்டு அவை மாறாமல் வைத்திருப்பதை இன்றும் காண்கிறோம். அத்தகைய சவங்கள் மொகஞ்ச தாரோவிலும் கண்டுபிடிக்கப்பட்டி ருக்கின்றன! இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. ஆரியர்கள் வருவதற்கு நெடுங்காலம் முன்பே இந்நாகரிகம் பரவியிருந்திருக்க வேண்டும். அந்த காலத்தில் ஐரோப்பா ஒரு வனாந்திரமாக இருந்திருக்க வேண்டும்.
இன்று ஐரோப்பா பலமும் சக்தியும் வாய்ந்திருக்கிறது. அங்கு வாழும் மக்கள் கலை, நாகரீகங்களில் தங்களைவிட மேம்பட்டவர்களில்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆசியா கண்டத்தில் வாழும் மக்கள் என்றால் அவர்களுக்கு அலட்சியம். ஆசியாவிலுள்ள தேசங்களின் மீது பாய்ந்து, கிடைப்பதைச் சுருட்டிக் கொண்டு போகிறார்கள். என்னே காலத்தின் மாறுதல்! உலகப் படத்தை எடுத்துக் கணித்துப் பார்த்தால் பரந்த ஆசியா கண்டத்தில் ஒரு மூலையிலே சின்ன ஐரோப்பாவானது ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவரும். ஆசியாவையே சிறிது நீட்டிவிட்டதுபோல் இருக்கிறது ஐரோப்பா. சரித்திரத்தை வாசித்தால் மிக நீண்ட காலங்களாக ஆசியாவின் கை மேலோங்கி இருந்ததை அறியலாம். ஆசியாவிலிருந்தவர்கள் அலை அலையாகச் சென்று ஐரோப்பாவை வெற்றி கண்டார்கள். அவர்கள் ஐரோப்பாவையே நாசம் செய்தார்கள். ஆனால் அதற்கு நாகரிகத்தையும் வழங்கினார்கள். ஆரியர், சிதியர், ஹூணர், அரபியர், மங்கோலியர், துருக்கியர் இவர்கள் புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல ஆசியாவில் எங்கேயோ ஓரிடத்திலிருந்து புறப்பட்டு ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவினார்கள். நெடுங்காலமாக ஆசிரியர்கள் சென்று குடியேறுகிற நாடாகவே ஐரோப்பா இருந்து வந்தது. இப்போது ஐரோப்பாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்தோரின் கால்வழிகளே ஆவர்.
படத்தில் ஆசியா பெரியதாகவும் ஐரோப்பா சிறியதாகவும் இருக்கிறது. இதனால் ஆசியா மேலானதென்றும் ஐரோப்பா அல்பமானதென்றும் கருதக்கூடாது. உருவத்தைக் கொண்டு ஒரு மனிதனின் பெருமையையோ அல்லது ஒரு தேசத்தின் உயர்வையோ மதிப்பிடுவது தவறாகும். கண்டங்கள் எல்லாவற்றுள்ளும் ஐரோப்பா சிறியதாயிருந்தாலும் இன்று அது மற்றெல்லாவற்றையும் விட மேன்மை பெற்று விளங்கு வதை நாம் அறிவோம். ஐரோப்பாவின் தேசங்கள் பலவற்றின் கடந்தகால சரித்திரம் சிறப்பு வாய்ந்ததென்பதையும் நாம் அறிகிறோம். பல பெரிய விஞ்ஞானப் புலவர்களை அவை அளித்திருக்கின்றன. அவர்கள் கண்டுபிடித்த உண்மைகளினால் மனித நாகரிகம் வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை துன்பம் குறைந்ததாக மாறியிருக்கிறது. `நுண்மான் நுழை புலம் ‘ படைத்த புலவர்கள் ஆராய்ச்சியாளர்களையும், ஓவியம், சிற்ப முதற் கலைஞானியர், இசைஞானியர்களையும் செயல் திறமையிலே ஒப்புயர்வுற்று விளங்கிய வீரபுருஷர்களையும் ஐரோப்பா ஈன்றெடுத்திருக்கிறது. ஐரோப்பாவின் பெருமையை உள்ளபடியே உணராவிட்டால், அது மடமையாகும்.
ஆனால் ஆசியாவின் பெருமையை உணராமலிருப்பதும் அறிவுடைமையாகாது. ஐரோப்பா தற்போது மின்னி மிளிர்வதைப் பார்த்து நாம் சிறிது ஏமாந்து போய் முன் காலத்தை மறந்துவிடக் கூடும். இன்று உலகில் விளங்கும் முக்கியமான மத ஸ்தாபகர்களையெல்லாம் பெற்றெடுத்தது ஆசியா தான். இவர்களைப் போல் உலகம் முழுமையிலும் உள்ள மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து அங்கு அரசு புரிவோர் வேறு யாவர்? இப்போது வழங்கும் மதங்களெல்லாவற்றுள்ளும் மிக மிகப் பழையதான ஹிந்து மதம் நமது இந்திய நாட்டிலே பிறந்தது. அதே போல் இன்று சீனா – ஜப்பான் – பர்மா, திபெத்து, இலங்கை முதலிய நாடுகளில் பரவியிருக்கும், இந்து மதத்தோடு தொடர்புள்ள பவுத்த மதமும் நம் நாட்டிலே பிறந்ததாகும். யூத மதமும், கிறிஸ்தவ மதமும் கூட மேற்கு ஆசியாவிலுள்ள பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவையே. பார்சிகளின் மதமாகிய ஜராதுஷ்ட்ர மதம் பாரசீக நாட்டில் ஆரம்பமாயிற்று. இஸ்லாம் மதத் தலைவரான முகம்மது நபி அரேபியாவிலுள்ள மெக்காவில் பிறந்தவர் என்பது உனக்குத் தெரியும். கண்ணன், புத்தன், ஜராதுஷ்டிரா, கிறிஸ்து, முகம்மது, சீன தத்துவ ஞானிகளான கன்பூஷியஸ், லெள்ட்சே இவ்வாறு ஆசியாவில் பிறந்த சிந்தையிலும், சொல்லிலும், செயலிலும் ஒப்புயர்வற்று விளங்கிய மகா புருஷர்களின் பெயர்களை எழுதிக்கொண்டே போகலாம். கடந்த நாட்களில் நாம் வாழும் இப்பழைய கண்டமானது எப்படி பல வழிகளிலும் சிறப்புற்று விளங்கியதென்று இன்றும் எடுத்துக்காட்டக்கூடும்.
ஆனால் காலத்தின் அதிசய மாறுதலை என்னென்பது? நமது கண் முன்பும் அது மாறிக்கொண்டே இருக்கிறது சரித்திரத்தில் சில சமயங்களில் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டாலும், பெரும்பாலும் அது பல நூற்றாண்டுகளில் சிறிது சிறிதாகவே உருப்பெறுகிறது. ஆனால் இன்று ஆசியாவில் சரித்திர நிகழ்ச்சிகள் வெகுவிரைவில் நிகழ்ந்து செல்கின்றன. இந்த பெரிய பூமிப் பரப்பானது தனது நீண்ட தூக்கத்தினின்றும் விழித்தெழுந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தை அமைப்பதில் ஆசியா எடுத்துக் கொள்ளப் போகும் பங்கை அறியாதார் யார் ?
ஜனவரி 9, 1931
நேற்று ‘பாரத்’ என்னும் இந்தி வாரமிரு முறைப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் மலாக்கா சிறையில் உன் தாயாரைச் சரிவர நடத்தவில்லை என்று போட்டிருந்தது. லஷ்மணபுரி சிறைக்கு அவளை மாற்றப்போவதாகவும் கண்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு சிறிது ஆத்திரமும் கவலையும் உண்டாயிற்று. ஒரு வேளை ` பாரத்’ பத்திரிகையில் வந்த செய்தி பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி சந்தேகம் ஏற்படுவதும் கூட நல்லதல்ல. நமக்கு அசெளகரியமும் துன்பமும் ஏற்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்ளலாம். அதனால் நமக்கு நன்மை உண்டாகிறது. எப்படியென்றால் நமது மென்மைக் குணம் போய் வன்மைக் குணம் பிறக்கிறது.. ஆனால் நமக்கு வேண்டியவர்களுக்குத் துன்பம் நேரிடுகிறதென்றால் அதைப் பொறுத்துக்கொள்வது எளிதல்ல. அவர்கள் துன்பத்தை துடைக்க நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலிருப்பது இன்னும் நமது துயரத்தை அதிகமாக்குகிறது. ஆகவே ‘பாரத்’ பத்திரிகையைப் பார்த்ததும் உன் தாயாரைப் பற்றிய கவலை அதிகாமாகிவிட்டது. அவள் பெண் சிங்கம் போன்ற அஞ்சாநெஞ்சம் படைத்தவள்தான். ஆயினும் ஏற்கெனவே பலவீனப்பட்டுக் கிடக்கும் அவளுடைய உடம்பு இன்னும் பலவீனமடைவது விரும்பத்தக்கதல்ல. நெஞ்சு உரம் பெற்றிருந்தாலும் உடம்பு சப்பையாயிருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? நாம் எடுக்கும் வினையை செப்பமாக செய்து முடிக்க வேண்டுமாயின் உடல் நலமும் உரமும் பெற்றிருக்க வேண்டும்.
உன் தாயார் லஷ்மணபுரிக்கு அனுப்பப்படுவதும் ஒரு விதத்தில் நன்மையாக முடியலாம். அவள் அங்கு கவுகரியமாகவும் சந்தோஷமாகவும் நண்பர்களோடு இருக்கலாம். மலாக்கா சிறையில் அவள் தனியாகவே இருக்கிறாள் என்று எண்ணுகிறேன். இவ்வளவெல்லாமிருந்தும், அவள் அந்த சிறையிலிருந்து அதிக தூரத்திலில்லாமல் நாலைந்து மைல் தூரத்திற்குள் இருக்கிறாள் என்று எண்ணி இதுவரை சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இதெல்லாம் மூடமனம் செய்கின்ற வேலை. இரண்டு சிறைகளின் உயர்ந்த சுவர்கள் இடையில் நின்று தடுக்கும்போது ஐந்து மைல் என்றால் என்ன, நூற்றைம்பது மைல் என்றால் என்ன ? எல்லாம் ஒன்றுதான்.
உன் தாத்தா அலகாபாத் திரும்பி வந்துவிட்டாரென்றும் அவருடைய உடல்நிலை முன்னைவிட நன்றாயிருக்கிற தென்றும் இன்று அறிந்து சந்தோஷப்பட்டோம். அவர் மலாக்கா சிறைக்கு உன் தாயாரைப் பார்க்க போயிருக்கிறார் என்று கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். ஒருவேளை நாளைய தினம் நான் உங்களெல்லாரையும் பார்த்தாலும் பார்க்கலாம். ஏனெனில் எனக்கு நாளையதினம் சந்திப்பு நாள். சிறையில் இந்த நாள் மிகவும் விசேஷம் வாய்ந்ததாகும். நான் உன் தாத்தாவைப் பார்த்து இரண்டு மாதங்கள் ஆயின. அவர் முன்னைவிடக் குணம் அடைந்திருக்கிறாரா என்பதை நான் நேரில் பார்த்து ஆறுதல் அடையக்கூடும். உன்னையும் மிக மிக நீண்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு பார்ப்பேன். நீ உன்னைப் பற்றியும் உன் தாயாரைப் பற்றியும் செய்தி கொண்டு வருவாய்.
அடடா! என்ன முட்டாள்தனம் செய்துவிட்டேன். கடந்த சரித்திரத்தை எழுத ஆரம்பித்து ஏதேதோ பிதற்றிவிட்டேனே! கொஞ்ச நேரம் நிகழ்காலத்தை மறந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்துக்குப் போவோமாக.
நான் உனக்கு முன்பு எழுதிய கடிதங்களில் எகிப்தைப் பற்றியும் கீரிட் தீவிலுள்ள நாசாசு என்னும் தொன்மை வாய்ந்த பட்டணத்தைப் பற்றியும் சிறிது கூறியிருக்கிறேன். பழைய நாகரிகங்கள் இந்த இரண்டு தேசங்களிலும், இப்போது ஈராக் அல்லது மெசபொடோமியா என்று வழங்கும் இடத்திலும் சீனா, இந்தியா, கிரீஸ் ஆகிய தேசங்களிலும் வேரோடிக் கிளைக்க ஆரம்பித்தன. கிரீஸ் நாகரிகம் மற்றவற்றுக்கு சிறிது பிற்பட்டதென்று சொல்லலாம். இந்திய நாகரிகம் எகிப்து, சீனா, ஈராக் ஆகிய இடங்களில் முளைதெழுந்த தன் உடன் பிறந்த நாகரிகங்களோடு ஒத்த வயதுடையதாக இருக்கிறது. கிரீஸ் நாகரிகத்தை இவற்றுக்கு தம்பி என்று கூறலாம். இப்பழம் பெரும் நாகரிகங்களில் கதி என்னவாயிற்று? நாசாசு இருக்கிற இடம் தெரியவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது இல்லாமல் போயிற்று. அதற்கு வயதில் சிறிய நாகரிகம் தோன்றி அதை அழித்துவிட்டது. எகிப்து நாகரிகம் பல்லாயிர வருடங்கள் சிறப்புற்றோங்கி நின்றபின் பெயர் சொல்வதற்கின்று மறைந்து போய்விட்டது. `பிரமிட்’ என்னும் சமாதிக் கோபுரங்களும் ஸ்பிங்கம் (sphinx) அழிந்து போன கோயில்களும், தைலப்பதமிட்ட சவங்களுமே எகிப்து நாகரிகத்துக்கு இன்று சான்று பகிர்கின்றன. எகிப்து என்னும் பெயருடைய தேசம் இன்றும் இருப்பது உண்மையே. பழமையிற் போலவே நைல் நதி பாய்ந்து அதை வளப்படுத்துவதும் மற்ற தேங்களை போல அங்கும் மனிதர்கள் வாழ்ந்து வருவதும் உண்மையே. ஆனால் தற்கால அங்கும் வாழும் மக்களுக்கும் அந்நாட்டில் ஒளிர்ந்த அப்பழைய நாகரிகத்துக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
ஈராக்கும் பாரசீகம் என்னும் இரு நாடுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்றன்பின் ஒன்றாக எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் அங்கே தழைத்தோங்கி மறைந்து போயின. பாபிலோன், ஆசியா, சால்டியா இவை மேற்கூறியவற்றில் பழமையானவை. பாபிலோன், நினேஏ என்பவை பெரிய நகரங்களாக ஒரு காலத்தில் விளங்கின. பைபிளில் ‘பழைய ஏற்பாடு’ என்னும் பகுதியில் இவற்றை பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. இதற்குப் பிறகும் இவ்விடத்தில் வேறு சாம்ராஜ்ஜியங்கள் தோன்றி மறைந்தன. ` அரேபிய இரவுகள்’ என்னும் நூலில் கூறப்படும் பாக்தாது என்னும் அற்புத நகரம் இங்கேதான் இருந்தது. சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றன. அழிகின்றன. மன்னரும், மன்னர் மன்னரும் இவ்வுலக மேடையில் சிறிது காலம் நடித்து பின் மறைகிறார்கள். ஆனால் நாகரிகங்கள் நிலைபெற்று நிற்கும் தன்மையன. அப்படியிருந்தும் எகிப்து நாகரிகத்தைப் போலவே ஈராக், பாரசீக நாகரிகங்களும் அடியோடு அழிந்து போயின.
கிரீஸ் பழைய காலத்தில் மிகவும் பெருமை பெற்றிருந்தது. இன்று கூட அதன் பெருமையைப் படிக்கும்போது நாம் ஆச்சரியப்படுகிறோம். அந்நாட்டில் சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு இன்றும் நாம் பிரமிக்கிறோம். நமக்குக் கிடைத்துள்ள அந்நாட்டு இலக்கியத்தைக் கண்டு வியப்படைகிறோம். தற்கால ஐரோப்பாவுக்கு கிரீசை தாயகம் என்று சொல்லலாம். கிரேக்கர்களின் சிந்தனைகளும் பழக்கவழக்கங்களும் ஐரோப்பாவை வெகுதூரம் ஆட்கொண்டிருக்கின்றன. ஆனால் கிரீசின் பழம்பெரும் மாட்சி இப்போது எங்கே ? அதன் பழைய நாகரிகம் இறந்து நெடுங்காலமாயிற்று. இன்று ஐரோப்பாவின் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறிய தேசம், கிரீஸ்.
எகிப்து, நாசாசு, ஈராக், கிரீஸ் எல்லாம் போய்விட்டன. பாபிலோன், நினேவே நாகரிகங்களைப் போன்று இவற்றின் நாகரிகங்களும் இறந்துவிட்டன. சீனா, இந்தியா இவை என்னவாயின? இவையும் பழைய நாகரிகங்களின் வரிசையைச் சேர்ந்தவை தானே! மற்ற தேசங்களை போலவே இந்த இரண்டு தேசங்களிலும் பல சாம்ராஜ்ஜியங்கள் தோன்றி மறைந்தன.
(தொடரும்)