உலக சாம்பியனை வீழ்த்தியது இந்தியா: தவான் சதம், கோஹ்லி, ரோகித் அரைசதம்

பதிவு செய்த நாள் : 09 ஜூன் 2019 23:41


லண்டன்:

உலக கோப்பையில் இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இம்முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை 36 ரன்னில் வீழ்த்தியது. தவான் சதம் அடித்து அசத்த, கேப்டன் விராத், ரோகித் இருவரம் அரைசதத்தை பதிவு செய்தனர்.

இங்கிலாந்தில் 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில்நேற்று நடந்த 14வது லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா மோதியது. இந்தியா தவக்க ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியிருந்தது. அதே நேரம் ஆஸி., அணி ஆப்கன், வெஸ்ட்ண்டீஸ் அணிகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு தயாராக இருந்தது. உலகின் மிகச் சிறந்த இரு அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பலத்த எதிர்பார்பிற்கு இடையே போட்டி துவங்கியது. இதில்,  'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.  இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த தவான், கூல்டர்-நைல் வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். எழுச்சியுடன் விளையாடிய தவான் 53 பந்தில் அரைசதம் அடித்தார். 19வது ஓவரின் முடிவில் இந்தியா 100 ரன் எடுத்தது.

ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 42வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 61 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தபோது, கூலணடர் நைல் வேகத்தில் ரோகித் சர்மா சரிந்தார். இவர் 57 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். அடுத்து கேப்டன் கோஹ்லி களம் வந்தார். இவர் பொறுப்புடன் விளையாட மறுமுனையில் தவான் விளாசத் துவங்கினார். இதையடுத்து ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. எதிரணி பந்துவீச்சை சிதறடித்த தவான், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 95 பந்தில் சதம் அடிக்க ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

இந்திய அணி 33.4 ஓவரில் 200 ரன் கடந்த போது இப்போட்டியில் மிகப் பெரிய ஸகோரை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த நேரத்தில் ஸ்டார்க் பந்தில் தவான் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இவர் 117 ரன் (109 பந்து, 16 பவுண்டரி) எடுத்தார். அனைவரும் தோனி வருவார் என எதிர்பார்த்த நிலையில், ஹர்திக் பாண்ட்யா களம் வந்தார். இவருக்கு துவக்கத்தில் விக்கெட்கீப்பர் அலெக்ஸ் கேரி எளிதான கேட்சை கோட்டை விட்டார். இதைப் பயன்படுத்திய ஹர்திக் அதிரடியில் இறங்கினார். பவுண்டரி, சிக்சர் என விளாச ஆட்டம் பரபரப்பானது. இந்த நேரத்தில் கோஹ்லி தனது அரைசதத்தை 55 பந்தில் பதிவு செய்தார்.

இது ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் 50வது அரைசதமாகும்.

இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஹர்திக் பாண்ட்யா வெளியேறினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 48 ரன் (27 பந்து, 4 பவுண்டரி,  3 சிக்சர்) எடுத்தார். பலத்த கரகோஷத்திற்கு இடையே களம் வந்த தோனி, அதிரடியில் இறங்க ஆஸி., பவுலர்கள் திணறியனர். ஆட்டத்தின் கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தோனி 127 ரன் (14 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கோஹ்லி 82 ரன் (77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி பந்தில் ராகுல் பவுண்டரி விளாச இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. ராகுல் (11), ஜாதவ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸி., தரப்பில் ஸ்டாய்னிஸ் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். ஸ்டார்க், கம்மின்ஸ், கூல்டர் நைல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணி கடைசி 10 ஓவரில் மட்டும் 116 ரன்கள் எடுத்தது. தவிர உலக கோப்பை தொடரில் ஆஸி., அணிக்கு எதிராக உலக அளிவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

கடின இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு வார்னர், கேப்டன் ஆரோன் பின்ச் துவக்கம் தந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி வந்தனர். பாண்ட்யா தனது முதல் ஓவரில் 19 ரன் விட்டுக் கொடுத்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன் (13.1 ஓவர்) சேர்த்த நிலையில், ஆரோன் பின்ச் (36) பரிதாபமாக ரன் அவுட் ஆனார். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் வந்தார். இவர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆஸி., 20 ஓவர் முடிவில் 100 ரன் எடுத்தது. சிறபபான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 77 பந்தில் அரைசதம் அடித்தார். இவர் 56 ரன் (84 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில், சகால் ‘சுழலில்’ சிக்கினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய ஸ்டீவ் ஸ்மித்துடன் கவாஜா இணைந்தார். இருவரும் பொறுப்படன் விளையாடி ரன் எடுத்து வந்தனர். ஸ்மித் 60 பந்தில் அரைசதம் கடந்தார். முக்கிய கட்டத்தில் பும்ராதிருப்புமுனை தந்தார். இவரது பந்தில் கவாஜா (42) கிளீன் போல்டானார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடியில் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது. 36வது ஓவரின் முடிவில் ஆஸி., 200 ரன் எடுத்தது.

ஆட்டம் பரபரபபாக சென்ற நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 958), ஸ்டாய்னிஸ் (0), மேக்ஸ்வெல் (20) ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆட்டம் இந்தியா வசம் சென்றது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அசத்திய கூல்டர் நைல் (4), கம்மின்ஸ் (8) ஏமாற்றினர். 46.5 ஓவரில் ஆஸி., 300 ரன் எடுத்தது. 2 ஓவரில் 44 ரன் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி 25 பந்தில் அரைசதம் அடித்த போதும் கடைசி கட்டத்தில் புவி, பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசினர். ஆட்டத்தின் கடைசி ஓவரை புவனேஷ்வர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஸ்டார்க் (3) ரன் அவுட் ஆனார். கடைசி பந்தில் ஜாம்பா (0) வெளியேற ஆஸி., 50 ஓவரில் 316 ரன்னுக்கு ஆட்டமிழந்து பரிதாபமாக தோற்றது. அலெக்ஸ் கர் (55) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா, புவனேஷ்வர் தலா 3, சகால் 2  விக்கெட் வீழ்த்தினர். சதம் அடித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.